பண்டைத் தமிழகம் வணிகம் - நகரங்கள் மற்றும் பண்பாடு | 189 |
‘இடுபிணக் கோட்டத்து எயிற்புற மாதலிற் சுடுகாட்டுக்கோட்ட மென்றலது உரையார்’ என்று மணிமேகலை (சக்கரவாளக்கோட்டம் 203-204) கூறுகிறது. சம்பாபதி கோவிலின் கோபுரவாயிலின் மேலே சக்கரவாளத்தின் சிற்ப உருவம் அமைக்கப்பட்டிருந்தபடியால், இந்த கோவிலுக்குச் சக்கரவாளக்கோட்டம் என்று பெயர் வந்தது என்று ‘மணிமேகலை’ சக்கரவாளக்கோட்ட முரைத்த காதை கூறுகிறது.3 குஞ்சரக்குடிகை என்னும் சம்பாபதிக் கோவிலிலே இரண்டு செங்கற்றூண்களிலே கந்திற்பாவை (கந்து - தூண், பாவை - பதுவை) என்னும் இரண்டு தெய்வங்களின் உருவங்கள் அமைந்திருந்தன. கந்திற்பாவைகளில் ஒன்றுக்குத் துவதிகன் என்றும் மற்றொன்றுக்கு ஓவியச்சேனன் (சித்திரச்சேனன்) என்றும் பெயர். இந்தச் தெய்வப் பாவைகள் கடந்தகால நிகழ்ச்சிகளையும் எதிர்கால நிகழ்ச்சிகளை யும் நகரமக்களுக்குத் தெரிவித்ததாக நம்பப்பட்டது. சம்பாபதி தெய்வத்தின் திருவுருவம் ஒன்று, இப்போதைய காவிரிப்பூம்பட்டினத்தின் திருச்சாய்க்காட்டுக் கோவிலில் இருக்கிறது. இந்த உருவம், பிற்காலத்துச் சோழ அரசர் நாட்களில் பஞ்ச லோகத் தினால் செய்யப்பட்ட உருவம். சம்பாபதிக் கோவிலைச் சார்ந்த உலகவறவி என்னும் அம்பலம் இருந்தது. இங்குக் குருடர், செவிடர், முடவர், ஆதரவு இல்லாதார் முதலியவர்களுக்குப் பௌத்த மதத்தார் உடை, உணவு, உறையுள் கொடுத்துப் போற்றினார்கள் என்று மணிமேகலை நூல் கூறுகிறது. ஐந்து மன்றங்கள் காவிரிப்பூம்பட்டினத்தில் ஐந்து மன்றங்கள் இருந்தன. இந்த மன்றங்கள் இப்பட்டினத்தின் சுடுகாட்டில் இருந்த ஐந்து மன்றங்களின் வேறானவை. அவை வேறு இவைவேறு. இந்த ஐந்து மன்றங்களின் பெயர் வெள்ளிடைமன்றம், இலஞ்சிமன்றம், நெடுங்கல்மன்றம், பூதச் சதுக்கம், பாவைமன்றம் என்பன. இந்த ஐந்து மன்றங்களிலும் ஐந்து பூதங்கள் (தெய்வங்கள்) இருந்து மக்களின் ஒழுக்கம், ஒழுங்கு, நீதி, நியாயம் முதலியவைகளைக் காத்து வந்தன என்று நம்பப்பட்டது. வெள்ளிடை மன்றம் துறைமுகத்துக்கு அருகில் இருந்ததென்பதை முன்னமே கூறினோம். |