பக்கம் எண் :

190மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 4

இலஞ்சி மன்றம் இப்பட்டினத்தில் எங்கு இருந்ததென்பது தெரிய வில்லை. இந்த மன்றத்தின் அருகில் இலஞ்சி (தடாகம்) இருந்தது. அதில் நீராடின தொழு நோயாளர் முதலியோர் நோய் நீங்கப்பெற்றனர் என்று கூறப்படுகிறது.

நெடுங்கல் மன்றம் இருந்த இடமும் தெரியவில்லை. மயக்க மடைந்தோர், நஞ்சுண்டோர், பேய்பிடித்தோர், பாம்பினால் கடி யுண்டோர் முதலியவர்களின் நோய்களை இந்த மன்றத்திலிருந்த தெய்வம் நீக்கியருளிற்று என்று நம்பப்பட்டது.

சதுக்கப்பூதம் என்றும் பூதசதுக்கம் என்றும் பெயர்பெற்ற இடம் மருவூர்ப்பாக்கத்துக்கும் பட்டினப்பாக்கத்துக்கும் நடுவிலே, நாளங்காடி யின் மத்தியில் இருந்தது என்று முன்னமே அறிந்தோம். கூடாவொழுக்கமுள்ள துறவிகள், அலவைப் பெண்டிர், பிறர்மனை நயப்போர், பொய்க்கரி கூறுவோர் முதலியவர்களைத் தண்டித்துச் சமுதாயத்தின் ஒழுங்குமுறையை இப்பூதம் காத்துவந்ததாக நம்பப்பட்டது.

பாவை மன்றமும் எங்கிருந்தது என்பது தெரியவில்லை. இது நீதிமன்றத்தின் அருகில் இருந்திருக்க வேண்டும். அரசன் கொடுங் கோலாட்சியினால் தீங்கு செய்தபோதும், நீதிமன்றத்தில் அநீதி நிகழ்ந்தபோதும் இம்மன்றத்தில் இருந்த பாவை கண்ணீர் வடித்து அழுது அநீதிகளை உலகத்துக்குத் தெரிவித்ததாக நம்பப்பட்டது.

பூஞ்சோலைகள்:

காவிரிப்பூம்பட்டினத்தில் ஐந்து பூஞ்சோலைகள் இருந்தன. அவை இலவந்திகை, உய்யானம், உவவனம், சம்பாபதிவனம், கவேர வனம் என்பன. இலவந்திகைச் சோலையும், உய்யானமும் சோழ அரசனுடைய அரண் மனையைச் சேர்ந்தவை. இவைகளில் பொதுமக்கள் போவது இல்லை. காவிரிக் கரையில் அரண்மனையைச் சார்ந்து இவை இருந்தன.

‘கலையி லாளன் காமர் வேனிலொடு
மலய மாருதம் மன்னவற் கிறுக்கும்
பன்மலர் அடுக்கிய நன்மரப் பந்தர்
இலவந்தி கையின் எயிற்புறம்’                    (சிலம்பு : நாடுகாண் 28-31)

என்றும்,