பண்டைத் தமிழகம் வணிகம் - நகரங்கள் மற்றும் பண்பாடு | 191 |
‘பன்மலர் அடுக்கிய நன்மரப் பந்தர் இலவந் திகையின் எயிற்புறம் போகின் உலக மன்னவன் உழையோர் ஆங்குளர்’ (மணிமேகலை : மலர்வளர் 44-46) என்றும் இலவந்திகைச் சோலை கூறப்படுகிறது. உய்யானம் என்னும் பூஞ்சோலை எங்கிருந்தது என்பதும் தெரியவில்லை. ‘மண்ணவர் விழையார் வானவர் அல்லது பாடுவண் டிமிரா பன்மரம் யாவையும் வாடா மாமலர் மாலைகள் தூக்கலிற் கைபெய் பாசத்துப் பூதம் காக்குமென்று உய்யா னத்திடை உயர்ந்தோர் செல்லார்’ (மணிமேகலை : மலர்வனம் 48-51) என்று உய்யானத்தைப் பற்றி அறிகிறோம். உய்யானத்தில் இருந்த பூதம் (தெய்வம்), பூதச்சதுக்கத்தில் இருந்த பூதம் (தெய்வம்) அன்று. அது வேறு இது வேறு. உவவனம் : நாளங்காடியின் வடக்குப் பக்கத்தில் சுடுகாட்டு மதிலுக்குத் தெற்கே இது இருந்தது என்று முன்னமே கூறப்பட்டது. இது பௌத்த முனிவர்களின் ஆராமம். பௌத்த பிக்ஷுக்கள் தங்கியிருந்த விகாரை இங்கு இருந்தது. அன்றியும் புத்தருடைய பாதபீடிகை இருந்த பளிக்கறை (கண்ணாடி மண்டபம்) மண்டபம் இங்கு இருந்தது. இந்த உவவனத்தின் மேற்குப் பக்கத்தில் நகரத்து மதில் பக்கமாக இருந்த வாயில் வழியாகச் சென்றால் சம்பாபதி கோவிலுக்குப் போகலாம். உவவனத்தின் இயற்கை வனப்பை மணிமேகலை, மலர்வனம் புக்ககாதை 159 - 163 அடிகளில் காண்க. இங்கிருந்த புத்தருடைய பாத பீடிகையைப் பற்றிய செய்தியை, மணிமேகலை, மலர்வனம் புக்ககாதை 61-67 அடிகளில் காண்க. சம்பாதிவனமும் கவேர வனமும் காவிரிப்பூம்பட்டினத்தில் எந்த இடங்களில் இருந்தன என்பது தெரியவில்லை. ‘வெங்கதில் வெம்மையின் விரிசிறை இழந்த சம்பாதி யிருந்த சம்பாதி வனமும் |