பக்கம் எண் :

192மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 4

தவாநீர்க் காவிரிப் பாவைதன் தாதை
கவேரனாங் கிருந்த கவேர வனமும்
மூப்புடை முதுமைய தாக்கணங் குடைய’

என்று மணிமேகலை (மலர்வனம் 53- 57) கூறுகிறது.

புத்தருடைய பழம்பிறப்புகளைக் கூறுகிற புத்த ஜாதகத்தில், அகித்தி ஜாதகத்திலே போதிசத்துவர், அகித்தி முனிவராகப் பிறந்து டமிள (தமிழ்) நாட்டுக் கவீரபட்டினத்தில் ஒரு சோலையில் தங்கியிருந்ததாகக் கூறப்படுவது இங்கு நினைவு கொள்ளத் தக்கது. (கவீரபட்டினம் - காவிரிப்பூம்பட்டினம்.)

சிறைக்கோட்டம் :

இதுவும் நகரத்தில் எந்த இடத்தில் இருந்தது என்பது தெரிய வில்லை. (நகரத்துக்கு வெளியே இருந்திருக்க வேண்டும்.) குற்ற வாளிகளைச் சிறையில் அடைத்து வைத்த இடம் சிறைக்கோட்டம்.

காவிரிவாயில்:

பட்டினப்பாக்கத்துக் கோட்டையின் மேற்குப்புறத்தில் இருந்த வாயில் இது. இவ்வாயிலிருந்து உறையூருக்குச் செல்லும் பெருவழி காவிரிக்கரை வழியாக அமைந்திருந்தது. இவ்வாயிருக்குப் பக்கத்தில், கோட்டைச் சுவருக்கு வெளியே காவிரி ஆற்றில் ‘திருமுகத்துறை’ இருந்தது. இத்துறையில் மக்கள் நீராடினார்கள். இந்தக் காவிரிவாயிலை, ‘தாழ் பொழிலுடுத்த தண்பதப் பெருவழிக் காவிரிவாயில்’ என்று சிலப்பதிகாரமும் (நாடுகாண் 32, 33) ‘காவிரிவாயில்’ என்று மணிமேகலையும் (சிறை செய். 43) கூறுகின்றன.

காவிரிப்பூம்பட்டினம் கடலில் முழுகியதாகக் கூறப்படுகிறது. மணிமேகலை என்னும் கடற்தெய்வத்தின் சாபத்தினால் இப்பட்டினம் கடலில் முழுகியதாக மணிமேகலை கூறுகிறது. காவிரிப்பூம்பட்டினம் வெள்ளப்பெருக்கினால் மூழ்கியிருக்கக்கூடும். ஆனால் பட்டினம் முழுவதும் வெள்ளத்தில் முழுகி அழிந்துபோயிற்று என்பது காவியப் புலவனின் கற்பனையேயாகும். ஏனென்றால் கடைச்சங்க காலத்துக்குப் பிறகும் (கி.பி. 200-க்குப் பிறகும்) காவிரிப்பூம்பட்டினம் பேர்போன துறைமுகமாக இருந்தது. கி.பி. 9-ஆம் அல்லது 10-ஆம் நூற்றாண்டில் இருந்த பட்டினத்துப் பிள்ளையார் காவிரிப்பூம்பட்டினத்தில் பெரிய