| பண்டைத் தமிழகம் வணிகம் - நகரங்கள் மற்றும் பண்பாடு | 195 |
2. சங்க காலத்து மதுரை கடைச்சங்க காலத்தின் இறுதியில் கி.பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளில், மதுரைமா நகரம் எவ்வாறு அமைந்திருந்தது என்பது பற்றிச் சங்க இலக்கியங்களைக் கொண்டு ஆராய்வோம். மதுரை, பாண்டிய நாட்டின் தலைநகரம். அதற்கு கூடல் என்றும் நான்மாடக் கூடல் என்றும் பெயர்கள் உண்டு. கண்ணபிரான் பிறந்த வடமதுரையி லிருந்து பிரித்து அறிவதற்காக இதனைத் தென்மதுரை என்றும் தக்கிண மதுரை என்றும் கூறுவர். (தலைச் சங்க காலத்தில் பாண்டிய நாட்டின் தலைநகரமாக இருந்ததும் ஒரு மதுரையே. அந்த மதுரைமா நகரம் கடல் கொண்டுவிட்டது. நமது ஆராய்ச்சிக்குரிய இந்த மதுரைமா நகரம் கடைச் சங்க காலத்தில் இருந்த மதுரைமா நகரமாகும். அது இப்போதைய மதுரை அன்று.) கடைச்சங்க காலத்து மதுரைமாநகரம் வைகையாற்றின் தென் கரையில் இருந்தது. மதுரைக்கு மேற்கே பேர்போன திருப்பரங் குன்றமும், திருப்பரங்குன்றத்துக்குக் கிழக்கே மதுரை நகரமும் இருந்தன. இதனை, ‘மாடமலி மறுகிற் கூடற்குடவயிற் ... ... குன்றம்’ என்று திருமுருகாற்றுப்படை (71-77 அடிகள்) கூறுவதிலிருந்து அறியலாம். தாயங்கண்ணார் என்னும் புலவரும், மதுரைக்கு மேற்கே திருப்பரங்குன்றம் இருந்ததைக் கூறுகிறார்: ‘கொடி நுடங்கு மறுகிற் கூடற் குடாஅது பல்பொறி மஞ்ஞை வெல்கொடி யுயரிய ஒடியா விழவின் நொடியோன் குன்றம்’ (அகம் 149-ஆம் செய்யுள்) என்று கூறுகிறார். மதுரைமா நகரத்தின் தரையமைப்பு தாமரைப் பூவைப் போல அமைந்திருந்தது. தாமரைப்பூ, நந்தியாவட்டப்பூ, சுவஸ்திகம் முதலிய வற்றின் உருவ அமைப்பு போல நகரங்களை அமைப்பது பழைய காலத்து வழக்கம் என்பதைச் சிற்ப சாஸ்திர நூல்களிலிருந்து அறிகிறோம். அந்தப் பழைய வழக்கப்படியே பாண்டிய அரசருடைய மதுரைமா நகரம் தாமரைப் பூவைப்போல அமைந்திருந்தது. இதைப் பரிபாடற் செய்யுள் கூறுகிறது: |