பக்கம் எண் :

196மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 4

‘மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவொடு புரையும் சீருர்: பூவின்
இதழகத் தனைய தெருவம் : இதழகத்து
அரும்பொகும் டனைத்தே அண்ணல் கோயில்;
தாதின் அனையர் தண்டமிழ்க் குடிகள்,
தாதுண்
பறவை யனையர் பரிசில் மாக்கள்’

என்பது அந்தச் செய்யுள்.

மாயோனாகிய திருமாலின் உந்தியில் தோன்றிய தாமரைப் பூவைப்போல வட்ட வடிவமாக மதுரை மாநகரம் அமைந்திருந்தது. தாமரைப் பூவின் இதழ்களைப்போல நகரத்தின் தெருவுகள் அமைந்திருந்தன. தாமரை இதழ்களின் நடுவே இருக்கிற ‘பொகுட்டு’ப் போல பாண்டிய மன்னனுடைய அரண்மனை அமைந்திருந்தது. தாமரைப் பூவிலுள்ள தாதுக்களைப்போல மதுரை மாநகரத்து மக்கள் இருந்தனர். தாமரை மலரின் தேனைக் குடித்து மகிழும் தேனீக்களைப் போல, பரிசு பெற்று வாழும் புலவரும் கலைவாணரும் இருந்தனர் என்பது இந்தப் பாட்டின் கருத்து.

(மகத நாட்டின் தலைநகரமாகிய இராசகிருகம் என்னும் நகரமும் மதுரையைப்போலவே தாமரைப் பூவின் அமைப்பாக இருந்ததாம். மகத நாட்டையரசாண்ட உதயணனுடைய தலைநகரமான இராசக் கிருகம் தாமரைப் பூவின் உருவம்போல அமைந்திருந்தது என்று பெருங்கதை’ என்னும் காவியம் கூறுகின்றது.

“போகச் சேரி புறவிதழ் ஆக”

“பெருங்கடி யாளர் அருங்கடிச் சேரி
     புறவிதழ் மருங்கிற் புல்லிதழ் ஆக”

“பல்விலை வாணிகர் நல்விலைச் சேரி
     புல்லிதழ் பொருந்திய நல்லிதழ் ஆக”

“தந்தொழில் திரியாத் தரும நெஞ்சின்
     அந்தண் சேரி அகவிதழ் ஆக”

“கற்றுப் பொருள் தெரிந்த கண்போற் காட்சி
     அருமதி யமைச்சர் திருமதிற் சேரி