| 198 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 4 |
“இன்பங் கலந்த இராச கிரியம்” என்று பெருங்கதை (மகத காண்டம்) இராசகிரியம் புக்கது கூறுகின்றது.) வட்டவடிமான நகரங்கள் பல பண்டைக்காலத்தில் அமைந்திருந்தன. வட்டவடிமாக இருந்த காரணத்தினாலேயே அவையெல்லாம் தாமரைப் பூவைப்போல இருந்தன என்று கருதக்கூடாது. சோழனுடைய உறந்தையும் (உறையூர்), தொண்டைமானுடைய கச்சியும் (காஞ்சீபுரம்), வட்டவடிவமான கோட்டைக்குள்ளே அமைந்திருந்தன. ஆனால், அக்கோட்டைக்குள்ளே இருந்த தெருவுகள் தாமரைப்பூவின் இதழ்களைப்போல அமைந்திருக்கவில்லை. மதுரை மாநகரத்தின் கோட்டையின் அமைப்பும் வீதிகளின் அமைப்பும் அரண்மனையின் அமைப்பும் தாமரைப் பூவைப்போல அமைந்திருந்தன. தாமரைப் பூவின் நடுவில் உள்ள ‘கொட்டை’ (பொகுட்டு) போல பாண்டியனுடைய அரண்மனை, நகரத்தின் நடுவிலே இருந்தது. பொகுட்டைச் சூழ்ந்துள்ள தாமரைப் பூவின் இதழ்களைப் போல நகரத்தின் வீதிகள் அமைந்திருந்தன. தாமரைப்பூ வட்ட வடிவமாக இருப்பதுபோன்று, நகரத்தின் கோட்டை மதில்களும் வட்ட வடிவமாக இருந்தன. தாமரை மலர் தண்ணீரில் இருப்பதுபோல, மதுரை மாநகரமும் அகழிக்கு நடுவில் இருந்தது. இந்த மதுரைமா நகரத்தின் சுற்றளவு எத்தனை காதம் என்பது தெரியவில்லை. காவிரிப்பூம்பட்டினத்தைப் போல நான்கு காத வட்டகையாக இருந்திருக்கக்கூடுமோ? அகழி: மதுரைமா நகரத்தின் கோட்டை மதிலுக்கு வெளிப்புறத்தில் ஆழமான அகழி, மதிலைச் சூழ்ந்திருந்தது. இது ஆழமும் நீர் நிறைந்ததுமாக இருந்தது. இந்த அகழியை ‘மண்ணுற ஆழ்ந்த மணிநீர்க் கிடங்கு’ என்று மதுரைக் காஞ்சியும் (அடி 351), ‘குண்டு நீர் வரைப்பில் கூடல்’ என்று புறநானூறும் (செய்யுள் 347) கூறுகின்றன. கோட்டைச் சுவரின் வடக்குப் பக்கத்தில் வைகையாறு, மதில் ஓரமாகப் பாய்ந்து கொண்டிருந்தது. கோட்டையைச் சூழ்ந்திருந்த அகழியும் வைகையாற்றுடன் இணைந்திருந்தது. அகழியிலும் ஆற்றிலும் எப்போதும் நீர் நிறைந்து இருந்தது. இதனை, |