பக்கம் எண் :

பண்டைத் தமிழகம் வணிகம் - நகரங்கள் மற்றும் பண்பாடு199

“வந்த மதுரை மதில்பொரூஉம் வான்மலர்த்தாஅய்
     அந்தண் புனல்வையை யாறெனக் கேட்டு”

என்று பரிபாடலும் (12ஆம் பாடல் 9-10 அடி),

“வையைதன்
     நீர்முற்றி மதில்பொரூஉம் பகையல்லால் நேராதார்
     போர்முற் றொன்றறியாத புரிசைசூழ் புனலூரன்”

என்று கலித்தொகையும் (67ஆம் பாடல்) கூறுவதிலிருந்து அறியலாம்.

மதுரைமா நகரத்துக்கு ஆலவாய் என்றும் பெயர் உண்டு. நீர் நிலைக்கு நடுவே இருந்தபடியால் ஆலவாய் என்னும் பெயர் ஏற்பட்டது. ஆல், ஆலம் என்னும் சொல்லுக்கு நீர்நிலை என்பது பொருள். இச்சொல் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு, துளுவம் முதலிய திராவிட இனமொழிகளில் பண்டைக் காலத்தில் வழங்கி வந்ததை அறிகிறோம். (இதுபற்றிய என்னுடைய விரி வான கட்டுரையைக் கலைக்கதிர், செப்டம்பர் 1960, ஆல்-நீர்) காண்க.

(பிற்காலத்தில், ஆலவாய் என்பதன் உண்மைப் பொருளை யறியாத புராணிகர், பகைவரால் ஏவப்பட்ட பாம்பு ஒன்று மதுரையை அழிக்க வந்து நஞ்சைக் கக்கியது என்றும் அதனால் ஆலவாய் என்னும் பெயர் ஏற்பட்டது என்றும் பொருந்தாக் கதையைக் கற்பித்தார்கள்.)

காவற்காடு:

நீரரணாகிய அகழிக்கு வெளியே நகரத்தைச் சூழ்ந்து காவற்காடு அமைந்திருந்தது. காவற்காட்டுக்கு மிளை என்பது பெயர். மிளைக்காடு முட்புதர்களும் மரங்களும் அடர்ந்து பகைவர் உள்ளே வரமுடியாதபடி இருந்தது. ‘மிளையும் கிடங்கும்’ (சிலம்பு, அடைக்கல - 207) என்றும், ‘கருமிளையுடுத்த அகழி’ (சிலம்பு, புறஞ்சேரி 183) என்றும்,

“இளைசூழ் மிளையொடு வளைவுடன் கிடந்த
     இலங்குநீர் பரப்பின் வலம்புணர் அகழி”

என்றும் சிலம்பு (ஊர்காண் 62-63) கூறுகிறது.

(இளை - அரண்காவல். மிளை - அதனைச் சூழ்ந்த காவற்காடு. அரும்பதவுரை.)