| 200 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 4 |
கோட்டைச்சுவர்: அகழிக்கு உட்புறத்தில் நகரத்தைச் சூழ்ந்து கோட்டைச்சுவர் அமைந்திருந்தது. ‘உயர்வகலந் திண்மை யருமையிந் நான்கின் அமைவரணாம் என்றுரைக்கும் நூல்’ என்று திருக்குறள் மதிலரணைப் பற்றிக் கூறுவது போல, இந்த மதில்கள் உயரமும் அகலமும் திண்மையும் கிட்டுதற்கு அருமையுமுடையதாக இருந்தன. இந்தக் கோட்டைச் சுவர்கள் புறமதில் என்றும் அகமதில் என்றும் இரண்டாக அமைந்திருந்தன. சுவரின் மேலே, பகைவரைத் தாக்குவதற்காகப் பலவகையான போர்க் கருவிகள் வைக்கப்பட்டிருந்தன. ‘விண்ணுற ஓங்கிய பல்படைப் புரிசை’ என்று மதுரைக்காஞ்சி (352ஆம் அடி) கூறுகிறது. புறமதின் மேல் வைக்கப்பட்டிருந்த போர்க் கருவிகள் என்னென்ன என்பதைச் சிலப்பதிகாரம் கூறுகிறது : ‘மிளையுங் கிடங்கும் வளைவிற் பொறியும் கருவிற லூகமும் கல்லுமிழ் கவணும் பரிவுறு வெந்நெயும் பாகடு குழிசியும் காய்பொன் உலையும் கல்லிடு கூடையும் தூண்டிலும் தொடக்கும் ஆண்டலை யடுப்பும் கவையும் கழுவும் புதையும் புழையும் ஐயவித் துலாமும் கைபெயர் ஊசியும் சென்றெறி சிரலும் பன்றியும் பணையும் எழுவும் சீப்பும் முழுவிறற் கணையமும் கோலும் குந்தமும் வேலும் பிறவும் ஞாயிலும் சிறந்து நாட்கொடி நுடங்கும் வாயில்’ என்று கூறுகிறது (அடைக்கலக் காதை 207 - 216). நகரத்துக்குள்ளே செல்வதற்கு நான்கு வாயில்கள் இருந்தன. அவ்வாயில்களில் வடக்குப் புறவாயில் வையை யாற்றினால் அடை பட்டிருந்தது. ஆகவே கிழக்கு மேற்கு தெற்குப் புறத்து வாயில்கள் மட்டும் போக்குவரத்துக்கு உரியனவாக இருந்தன. |