| பண்டைத் தமிழகம் வணிகம் - நகரங்கள் மற்றும் பண்பாடு | 203 |
‘பால்வேறு தெரிந்த நால்வேறு தெருவும் அந்தியும் சதுக்கமும் ஆவண வீதியும் மன்றமும் கவலையும் மறுகும்’ (சிலம்பு. ஊர்காண். 211-214) அமைந்திருந்தன. சுருங்கை: வீடுகளிலிருந்து வெளிப்படும் கழிவு நீர் நகரத்துக்கு வெளியே போய் அகழியில் விழும்படி சுருங்கைகள் அமைந்திருந்தன. வீடுகளி லிருந்து வெளிப்படும் கழிவு நீர் சேக்கடை வழியாகத் தெருக்களில் அமைந்திருந்த சுருங்கைகளில் சென்று விழுந்தது. அந்தச் சுருங்கை நீர் பெரிய சுருங்கைகளில் கலந்தது. பெரிய சுருங்கைகளிலிருந்து நகரத்துக் கழிவு நீர் மதிலைச் சூழ்ந்திருந்த அகழியில் விழுந்தது. அகழியில் கழிவு நீர் விழும் இடம் யானையின் தும்பிக்கை போல அமைந்திருந்தது. ‘நெடுமால் சுருங்கை நடுவழிப் போந்து கடுமா களிறணத்துக் கைவிடு நீர்போலும் நெடுநீர் மலிபுனல் நீண்மாடக் கூடல் கடிமதில் பெய்யும் பொழுது.’ என்று பரிபாடல் (20. 104-07) கூறுகிறது. “நெடிய பெரிய சுருங்கை நடுவாகிய வழியைப் போந்து பெருந் தன்மை மிக்க புனலைக் கடிமதில் சொரியும்பொழுது, அப்புனல் கடுமா வாகிய களிறுகள் கையை எடுத்துவிடும் நீர்போலும்” என்பது பரிமேழலகர் உரை. நகரத்தில் சேக்கடை நீர் செல்லும் சுருங்கை வெளியே தெரியாதபடி மேற்புறம் மூடி மறைக்கப்பட்ருந்தது. ‘சுருங்கை வீதி’ (சிலம்பு. ஊர்காண். 65) என்பதற்கு, ‘மறைத்துப் படுத்த வீதி வாய்த்தலை’) என்று அரும்பதவுரையாசிரியரும், ‘சுருங்கை - கரந்து படை’ என்று அடியார்க்கு நல்லாரும் உரை எழுதுவது காண்க. சுருங்கைகள் வீதிகளின் ஓரங்களில் அமையாமல், நடுவில் அமைந்திருந்தன போலும். கரந்துபடை என்னும் பொருளுள்ள சுருங்கை என்பது கிரேக்க மொழிச் சொல். |