பக்கம் எண் :

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்239

  நாட்டபி மானமுள் மூட்டிய சினத்தீ
அன்றோ வானோர்க் கென்றுமே உவப்பு!
வந்தஇக் கயவர்நும் சிந்தையிற் கொளுத்திய
 140வெந்தழற் கவரே இந்தளம் ஆகுக!
படைகள்: ஆகுக! ஆகுக!
ஜீவ:  இன்றுநீர் சிந்தும் இரத்தமோர் துளியும்,
நின்றுகம் பலவும் நிகழ்த்துமே “இந்தப்
பாண்டியர் உரிமைபா ராட்டும் பண்பினர்;
தீண்டன்மின் திருந்தலீர்! அவர் தம் செருக்கு.
 145சுதந்தரம் அவர்க்குயிர்; சுவாசமற் றன்று.
நினையுமின் நன்றாய்க் கனவினும் இதனை”...
எனமுர சறையுமே எத்திசை யார்க்கும்.
இத்தனிப் போரில்நீர் ஏற்றிடும் காயம்
சித்தங் களித்து, ஜயமா துமக்கு
 150முத்தமிட் டளித்த முத்திரை ஆகி
எத்தனை தலைமுறைக் கிலக்காய் நிற்கும்!
படைகள்: ஜே! ஜே!
ஜீவ:  போர்க்குறிக் காயமே புகழின் காயம்.
யார்க்கது வாய்க்கும்! ஆ! ஆ! நோக்குமின்!
அனந்தம் தலைமுறை வருந்தனி மாக்கள்,
 155தினந்தினம் தாமனு பவிக்குஞ் சுதந்தரம்
தந்ததம் முன்னோர் நொந்தபுண் எண்ணிச்
சிந்தையன் புருகிச் சிந்துவர் கண்ணீர்,
என்றால் அப்புண் ‘இரந்துகோட் டக்கது’
‘அன்றோ? அறைவீர். ஐயோ! அதுவும்
 160புண்ணோ? புகழின் கண்ணே, எவரே


கயவர் - கீழ்மக்கள். இந்தளம் - விறகு, எரிகரும்பு, திருந்தலீர் - பகைவர்களே. ஜயமாது - ஜயலட்சுமி. இரந்து கோட்டக்கது - வேண்டிக்கொள்ளும் தகுதியுடையது. ‘புரந்தார்கண் ணீர்மல்கச் சாகிற்பிற் சாக்காடு, இரந்துகோட் டக்க துடைத்து’ என்னும் திருக்குறளுடன் இவ்வடியை ஒப்புநோக்குக.

சுழலுமிசை வேண்டிவேண்டர் வுயிரார்
கழல் யாப்புக் காரிகை நீர்த்து (78 - 7)