பக்கம் எண் :

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்321

  யாக்கையில் அமையுமோ நீக்கமில் இன்பம்.
எனக்கெனக் கென்றெழும் இச்சையா திகளெனும்
 115மனக்களங் கங்களாம் மாசுகள் அனைத்தும்
தேய்த்தவை மாற்றித் திகழொளி யேற்றி
மண்ணிய மணியாப் பண்ணிட என்றே
வைத்தஇக் கடிய வாழ்க்கையாம் சாணையைப்
பைத்தபூஞ் சேக்கையாப் பாவித் துறங்க
 120யத்தனஞ் செய்திடும் ஏழையர் போல
என்னை நீ எண்ணினை! வாணி! இந்தச்
சுகவிருப் பேநமைத் தொழும்புசெய் பந்தம்.
தவமே சுபகரம். தவமென்? உணருவை?
உடுப்பவை உண்பவை விடுத்தரண் அடைந்து
 125செந்தீ ஐந்திடைச் செறிந்தமைந் துறைதல்
ஆதியா ஓதுப அல்ல. அவற்றைத்
தீதறு தவமெனச் செப்பிடார் மேலோர்.
இவ்வுயிர் வாழ்க்கையில் இயைந்திடும் துயரம்,
ஐயோ! போதா தென்றோ அன்னோர்
 130போனகம் துறந்து கானகம் புகுந்து
தீயிடை நின்று சாவடை கின்றார்?
தந்தைதா யாதியா வந்ததன் குடும்ப
பந்தபா ரத்தினைப் பேணித் தனது
சொந்தமாம் இச்சைகள் துறந்து மற்றவர்க்
 135கெந்தநா ளுஞ்சுகம் இயைந்திடக் கடமையின்
முந்துகின் றவரே முதற்றவ முனிவர்.
வாணி: அத்தகைத் தவமிங் கடியேன் தனக்கும்
ஒத்ததே அன்றோ?


இச்சையாதிகள் - ஆசை முதலியன. மனக்களங்கம் - மனத்தில் படிகிற கறை. மாசுகள் - அழுக்குகள். மண்ணிய - கழுவிய. சாணை - சாணைக்கல், மாணிக்கம் முதலிய கற்களைப் பட்டை பிடிப்பதற்கு உபயோகப்படுத்துவது. தொழும்பு - அடிமை. பந்தம் - கட்டு. செந்தீ ஐந்து - பஞ்சாக்கினி. நான்குபுறத்திலும் நெருப்புக் குழியும் மேலே சூரியனும் எரிக்கும்போது நடுவில் இருந்து தவம் செய்வதற்கு உதவுவது. போனகம் - உணவு.