பக்கம் எண் :

322மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20

மனோ:  ஒத்ததே யார்க்கும்.
மேம்படக் கருதிடில் ஓம்புதி நீயும்.
 140அடுத்தவர் துயர்கெடுத் தளித்தலே யானிங்கு
எடுத்தநற் றவத்தின் இலக்கணம் ஆதலின்,
நடேசனை நச்சுநின் நன்மணம் அதுவும்
விடாதெனை அடுத்த வீரநா ரணன்றன்
கடுஞ்சிறை தவிர்த்தலும் கடனெனக் கருதி
 145எழுதினேன். இஃதோ! வழுதியும் இசைந்தான்.
என்கடன் இதுவரை: இனியும் இச்சை.
வாணி: ஆயிடிற் கேட்குதி அம்மணீ! என்சூள்.
கண்டவர்க் கெல்லாம் பண்டைய வடிவாய்
நீயிவண் இருக்க நின்னுளம் வாரி
 150வெள்ளிலா மெள்ள விழுங்கி இங்ஙனம்
வேதகம் செய்த போதக யூதபம்;
பேரிலா ஊரிலாப் பெரியோன் அவன்றான்
யாரே ஆயினும் ஆகுக. அவனைநீ
அணையுநாள் அடியேன் மணநாள். அன்றேல்,
 155இணையிலா உன்னடிக் கின்றுபோல் என்றும்
பணிசெயப் பெறுவதே பாக்கியம் எனக்கு.


அளித்தல் - காத்தல். சூள் - சபதம். வெள்ளில் - விளாமரம். இங்கு விளாம்பழம் என்பது கருத்து. யானை நோய் என்பது விளாம் பழத்துக்கு உண்டாகும் நோய். இந்நோய் கொண்ட விளாங் கனிக்குள் சதைப்பற்று இராது. ஓடு மட்டும் இருக்கும். இதனை “யானை யுண்ட விளாங்கனி” என்று கூறுவர். வேதகம் செய்த - வேறு படுத்திய. போதகம் - யானை. யூதபம் - யானைக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கும் யானை. போதகயூதபம் - என்பது அரச யானை போன்றவன் என்பது பொருள். இது மனோன்மணியின் மனத்தைக் கவர்ந்த காதலனைக் குறிக்கிறது.

“வெள்ளிலா மெள்ள விழுங்கி யிங்ஙனம், வேதகம் செய்த போதக யூதபம்” என்னும் அடியின் கருத்து: யானையுண்ட விளாங்கனியில் ஓடு தவிர உள்ளே சதை இல்லாதிருப்பது போல, மனோன்மணியின் மனத்தைக் கவர்ந்து அவளை வெற்றுடம்பினளாக்கியது அவள் கனவில் கண்டு காதலித்த அரசனாகிய யானை என்பது.