பக்கம் எண் :

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்65

வா: எப்படி யுனக்கியான் செப்புவே னம்மா?
 தலைவிதி தடுக்கற் பாற்றே? தொலைய
 அனுபவித் தன்றே அகலும்? மனையில்
 தந்தையுங் கொடியன்; தாயுங் கொடியள்!
 35சிந்தியார் சிறிதும் யான்படும் இடும்பை.
 என்னுயிர்க் குயிராம் என்கா தலர்க்கும்
 இன்ன லிழைத்தனர். எண்ணிய வெண்ணம்
 முதலையின் பிடிபோல் முடிக்கத் துணிந்தனர்.
 யாரொடு நோவேன்! யார்க்கெடுத் துரைப்பேன்?
 40வார்கடல் உலகில் வாழ்கிலன்.
 மாளுவன் திண்ணம். மாளுவன் வறிதே.     8
மனோ: முல்லையின் முகையும் முருக்கின் இதழுங்
 காட்டுங் கைரவ வாயாய்! உனக்கும்
 முரண்டேன்? பலதே வனுக்கே மாலை
 45சூடிடிற் கேடென்? காதால்
 வள்ளியி னழகெலாங் கொள்ளை கொ ளணங்கே!
வா:  அம்மொழி வெம்மொழி. அம்ம! ஒழிதி.
 நஞ்சும் அஞ்சிலேன்; நின்சொல் அஞ்சினேன்.
 இறக்கினும் இசையேன். தாமே துறக்கினும்
 50மறப்பனோ என்னுளம் மன்னிய ஒருவரை?
 ஆடவ ராகமற் றெவரையும்
 நாடுமோ நானுள வளவுமென் உளமே?      10
மனோ: வலம்புரிப் புறத்தெழு நலந்திகழ் மதியென
 வதியும் வதன மங்காய்! வாணீ !


“முதலையின் பிடிபோல்” - இது, மூர்க்கனும் முதலையும் கொண்டது விடாது என்னும் பழமொழியைக் குறிக்கிறது.

கைரவம் - ஆம்பல். முரண்டு - பிடிவாதம். வள்ளை - வள்ளை இலை, இது காதுக்கு உவமை. மன்னிய - நிலைத்திருக்கிற. ஒருவர் - இங்கு நடராஜனைக் குறிக்கிறது.