5.1 ஒரு குணம் தழுவிய உரிச்சொற்கள்

    பல உரிச்சொற்கள் ஒரே குணம் (பொருள்) குறித்து வருவது உண்டு. மிகுதி என்னும் பொருள் தரும் உரிச்சொற்களையும், சொல் என்னும் பொருள் தரும் உரிச்சொற்களையும் ஓசை என்னும் பொருள் தரும் உரிச்சொற்களையும் நன்னூலார் வரிசைப்படுத்திக் கூறுகிறார்.


5.1.1 மிகுதி என்னும் குணத்தை உணர்த்தும் உரிச்சொற்கள்
 

‘சால உறுதவ நனிகூர் கழிமிகல்’

(நன்னூல், நூற்பா 456)

சால, உறு, தவ, நனி, கூர், கழி என்னும் ஆறு உரிச்சொற்கள் ‘மிகுதி’ என்னும் ஒருகுணத்தை (பொருளை) உணர்த்தும் சொற்களாகும். இச்சொற்கள் பெயருக்கும் வினைக்கும் அடையாக வந்து மிகுதி என்னும் பொருள் தருகின்றன. உரிச்சொற்கள் செய்யுளுக்கு உரியன என்பது உங்களுக்குத் தெரியும். இவ் உரிச்சொற்கள் செய்யுளில் ‘மிகுதி’ என்ற பொருளில் எவ்வாறு பயின்று வந்துள்ளன என்பதை இனிக் காண்போம்.

• சால என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு:

சாலவும் நன்று” - மிகவும் நல்லது

• உறு என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு:

உறு பொருள் கொடுத்தும்” (மிகுதியான பொருளைக் கொடுத்தும்)

• தவ என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு:

“ஈயாது வீயும் உயிர் தவப் பலவே”

(பிறர்க்குக் கொடுக்காமல் மறைந்து போகும் மக்கள் பலர் ஆவர்).

• நனி என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு:

“கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்”

(கல்லாதவர்களும் மிக நல்லவர்களே, கற்றவர்கள் முன்னிலையில் தம் அறியாமை தோன்றப் பேசாது இருந்தால்)

• கூர் என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு:

“களி கூர் மனம்” (மகிழ்ச்சி மிகுந்த மனம்)

இன்றைய எழுத்து வழக்கிலும் ‘அன்பு கூர்ந்து’, ‘அருள் கூர்ந்து’ என வருவதைக் காணலாம்.

• கழி என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு:

கழி பேருவகை” (மிகப் பெரும் மகிழ்ச்சி)

செய்யுளில் ஐந்துக்கு அதிகமான சீர்களைத் கொண்ட நீண்ட அடியைக் ‘கழி நெடிலடி’ என்று குறிப்பிடுவதை அறிந்திருப்பீர்கள்.

மேற்காட்டிய சான்றுகளில் இடம் பெற்ற உரிச்சொற்கள் மிகுதி என்னும் பொருளைக் குறிப்பதைத் தெரிந்து கொண்டீர்கள்.


தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1)
உரிச்சொல் எத்தனை வகைப்படும்? அவை யாவை? [விடை]
2)
ஒரு குணம் தழுவிய உரிச்சொல் என்றால் என்ன? [விடை]
3)

மிகுதி என்னும் பொருளைக் குறிக்கும் உரிச்சொற்கள் எத்தனை?

[விடை]
4)
கழி என்னும் உரிச்சொல்லைச் சான்றுடன் விளக்குக? [விடை]

5.1.2 சொல் என்னும் குணத்தை உணர்த்தும் உரிச்சொற்கள்

‘சொல்’ என்னும் பெயர்ச்சொல் வார்த்தை எனப் பொருள் படும். சொல் என்னும் வினைச் சொல்லுக்குச் சொல்வாய் என்பது பொருள். செய்யுளில் சொல் என்பதைக் குறிக்கப் பல உரிச்சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

நன்னூலார் சொல் என்னும் ஒரு பொருளைக் குறிக்கின்ற பதினாறு உரிச்சொற்களைக் கூறியுள்ளார். (நூற்பா, 458) அவையாவன:-

மாற்றம், நுவற்சி, செப்பு, உரை, கரை, நொடி, இசை, கூற்று, புகறல், மொழி, கிளவி, விளம்பு, அறை, பாட்டு, பகர்ச்சி, இயம்பல்.

இப்பதினாறு உரிச்சொற்களும் செய்யுளில் பயின்று வந்துள்ளன. அவற்றுள் சிலவற்றை விளக்கமாகக் காண்போம்.

• மாற்றம் என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு:

“கோவலர் வாய் மாற்றம் உணர்ந்து” (கோவலர்களின் வாய்ச்சொல்லை உணர்ந்து)

• நுவற்சி என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு:

“பொழுதறிந்து நுவல்” (காலம் அறிந்து சொல்)

• செப்பு என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு:

செப்பலுற்றேன்” (சொன்னேன்)

• உரை என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு:

உரைப்பார் உரைப்பவை எல்லாம்” (சொல்வார் சொல்பவை எல்லாம்)

• கரை என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு:

“அறங்கரை நாவின்” (அறத்தைச் சொல்கின்ற நாவினையுடைய)

• நொடி என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு

“ஆயிழையார் தாம் நொடியும் (பெண்கள் சொல்லும்)

• இசை என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு:

இசைத்தவை எல்லாம்” (சொன்னவை எல்லாம்)

• கூற்று என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு:

“உற்றது நாங்கள் கூற உணர்ந்தனை” (நடந்ததை நாங்கள் சொல்ல உணர்ந்தாய்)

• புகறல் என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு:

புகன்ற அன்றியும்” (சொன்னவை அல்லாமலும்)

• மொழி என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு:

”கண்டது மொழிமோ” (கண்ட உண்மையைச் சொல்வாயாக)

• கிளவி என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு:

கிளக்கும் கிளவி” (சொல்லும் சொல்)

• விளம்பு என்னும் உரிச்சொல்

விளம்பினர் புலவர்” (புலவர்கள் சொன்னார்கள்)

• அறை என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு:

“அச்சுதன் அடிதொழுது அறைகுவன் சொல்லே!”

இதன்பொருள் ‘இறைவன் அடியைத் தொழுது சொல் இலக்கணத்தைச் சொல்லுவேன் என்பதாகும். அறைகுவன் என்றால் சொல்லுவேன் என்று பொருள்.

• பாட்டு என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு:

“அறம் பாடின்று” அறநூல் சொல்லிற்று என்பது பொருள்.

• பகர்ச்சி எனும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு:

பகர்ந்தனர் புலவர்” புலவர்கள் சொன்னார்கள் என்பது பொருள்

• இயம்பல் என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு:

‘இடிபோல இயம்பினானே’

இத்தொடரின் பொருள் ‘இடியைப் போல உரத்துச் சொன்னான் என்பதாகும்.

மேலே நாம் கண்ட செய்யுள் எடுத்துக்காட்டுகளில் சொல் என்னும் ஒரு குணத்தை உணர்த்தும் பல உரிச்சொற்களை விளக்கமாகக் கண்டோம்.

இனி ஓசை என்னும் குணத்தை உணர்த்தும் உரிச்சொற்களைத் தெரிந்து கொள்வோம்.

5.1.3 ஓசை என்னும் குணத்தை உணர்த்தும் உரிச்சொற்கள்

ஓசை என்னும் ஒரு குணத்தை உணர்த்தும் உரிச்சொற்கள் 22 ஆகும். (நன்னூல் நூற்பா - 459) அவையாவன:- முழக்கு, இரட்டு, ஒலி, கலி, இசை, துவை, பிளிறு, இரை, இரங்கு, அழுங்கு, இயம்பல், இமிழ், குளிறு, அதிர், குரை, கனை, சிலை, சும்மை, கௌவை, கம்பலை, அரவம், ஆர்ப்பு.

இவற்றை எடுத்துக்காட்டுகளுடன் பார்ப்போம்.

உரிச்சொல்
எடுத்துக்காட்டு
விளக்கம்
முழக்கு
முழங்கு முந்நீர்” ஓசையிடும் கடல்
இரட்டு
“குடிஞை இரட்டும் ஆந்தை ஒலிக்கும்
ஒலி
ஒலி புனல் ஊரன்“ ஒலிக்கும் நீரை
உடைய ஊர்த் தலைவன்
கலி
கலி கெழு மூதூர்” ஓசைமிக்க பழைய
ஊர்
இசை
“பறை இசை அருவி” பறைபோல்
ஒலிக்கும் அருவி
துவை
“பல்லியம் துவைப்ப பலவாத்தியங்களும்
ஒலிக்க
பிளிறு
பிளிறு வார் முரசு” ஒலிக்கும் முரசு
இரை
இரைக்கும் அஞ்சிறைப் பறவைகள்” ஒலிக்கும் பறவைகள்
இரங்கு
இரங்கும் முரசு” ஒலிக்கும் முரசு
அழுங்கு
அழுங்கல் மூதூர்” ஒலிக்கும் மூதூர்
இயம்பல்
“முரசியம்பின முரசுகள் ஒலித்தன
இமிழ்
இமிழ் கடல்” ஒலிக்கும் கடல்
குளிறு
குளிறு முரசம்” ஒலிக்கும் முரசு
அதிர்
அதிரும் கார்” மேகம் ஒலிக்கும்
குரை
குரைபுனல் ஆறு” ஒலிக்கும்
நீரையுடைய ஆறு
கனை
கனை கடல்” ஒலிக்கும் கடல்
சிலை
சிலைந்தார் முரசம்” ஒலிக்கும் முரசம்
சும்மை
சும்மை மிகு தக்கண நாடு” ஒலிமிகுந்த தென்னாடு
கௌவை கௌவையோ பெரிதே” ஒலி பெரிதாயுள்ளது
கம்பலை “வினைக்கம்பலை தொழிலின் ஓசைகள்
அரவம் அரவத் தானை” ஒலிமிகுந்த சேனை
ஆர்ப்பு ஆர்த்த பல்லியம்“ ஒலித்த பல
வாத்தியங்கள்

இதுவரை ஓசை என்னும் ஒரு குணத்தை உணர்த்தும் பல உரிச்சொற்களைச் செய்யுள் எடுத்துக்காட்டுகள் கொண்டு விளக்கமாகக் கண்டோம்.