3.6 தொகுப்புரை

இதுவரை பல்ஊடகங்களில் தமிழ்மொழி கையாளப்படும் முறையைக் கண்டோம். அவற்றைத் தொகுத்து இங்கே காண்போம்.

• ஊடகங்கள் மொழியைக் கவனமாகப் பயன்படுத்தினால்தான் கூறவரும் கருத்து கேட்போரைச் சென்று சேரும்.

• பத்திரிகைத் தமிழில் தந்தை பெரியார் முதன் முதலில் ஆடம்பரம் அற்ற தமிழைப் பயன்படுத்திக் கருத்து இதழியலை வளர்த்தார்.

• திரு.வி.க. எளிய சிறுசிறு தொடர்களைப் பயன்படுத்தித் திருப்புமுனையாக அமைந்தார்.

• சி.பா. ஆதித்தனார் கொச்சை நீக்கி எழுதப்பட்ட பேச்சு வழக்குக்கு முக்கியத்துவம் கொடுத்தார். கடின நடையை எதிர்த்தார்.

• இன்றைய நாளிதழ்களில் செந்தமிழிலும் அல்லாமல், பல்வகை மொழிக் கலப்பும் இல்லாமல், இயல்பான மொழியில் எளிய நடையில் ஒரு கட்டுரை அமையும் முறைபோலக் கட்டுரை இயல்பு மொழி பயன்படுத்தப் படுகிறது.

• கவர்ச்சி மொழியும் உண்டு. பேச்சு மொழிப் பயன்பாடு, ஆங்கில மொழிக் கலப்பு, குறிப்பிட்ட ஆயத்தச் சொற்கள், சொற்றொடர்கள் பயன்பாடு, குறியீடு, பழமொழி, மரபுத் தொடர் கலப்பு, வட்டாரப் படுத்தி எழுதுதல் போன்றவை கவர்ச்சி மொழி உருவாக்கத்தில் முக்கியமானவை.

• வானொலி மொழியில் மொழி, ஒலி, உச்சரிப்புத் திறன் முதலியவற்றிற்குப் பங்கு அதிகம்.

• தொலைக்காட்சி மொழியில் பேச்சு மொழி முக்கியத்துவம் பெறுகிறது. ஆனாலும் ஆங்கில மொழிச் சொற்கலப்பு அதிகமாக இடம் பெறுவது பற்றி யாரும் கவலைப் படுவதில்லை. செய்திகள் எல்லாருக்கும் புரியும் வகையில் பொதுத் தமி்ழில் அமைகின்றன.

• திரைப்பட மொழி செந்தமிழில் ஆரம்பித்து, கடின நடை உடையதாகிப் பின்னர் சமூகக் கதைகளைச் சொல்ல ஆரம்பித்த போது பேச்சுத் தமிழுக்கு மாறி மெல்ல மெல்ல வளர்ச்சியடைந்து வந்ததைக் காண்கிறோம்.

தன்மதிப்பீடு : வினாக்கள் - II
1.
வானொலி மொழியில் இன்றியமையாத இடம் பெறுபவை எவை?
விடை
2.
வானொலியில் பேசுபவரின் பேச்சுத்திறன் எத்தகையதாய் இருக்க வேண்டும்?
விடை
3.
தொலைக்காட்சி மொழியில் மிகுதியும் கவனிக்காமல் விட்டு விடப்படுவது எது?
விடை
4.
தொலைக்காட்சி மொழியில் செய்தி மொழி எவ்வாறு அமைகிறது?
விடை
5.
திரைப்பட வரலாற்றில் புராணப் படங்களில் கையாளப்பட்ட மொழி எத்தகையதாய் இருந்தது?
விடை