நகைச்சுவை மனித வாழ்க்கைக்கு மிக இன்றியமையாதது. வாய்
விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பார்கள். தெருக்கூத்துகளிலும்
கரகாட்டம் முதலான பல்வேறு கலை நிகழ்ச்சிகளிலும் கோமாளி என்ற பாத்திரம்
நடிப்பாலும் கதைகளாலும் நகைச்சுவைத் துணுக்குகளாலும் ‘நகைப்பு’ ஏற்படுத்தி
மக்களை மகிழச்செய்வார். மக்களிடையே உள்ள பல்வேறு நாட்டுப்புறக் கதைகளும்
பாடல்களும் நகைப்பை ஏற்படுத்துவன. நகைச்சுவைக் கதைகளும் நகைச்சுவைத்
துணுக்குகளும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டவை. நகைச்சுவைத் துணுக்குகள்
கதைகளாக விரித்துக் கூறப்படுவது உண்டு. அதைப் போல் நகைச்சுவைக் கதைகள்
நகைச்சுவைத் துணுக்குகளாகச் சுருக்கிக் கூறப்படுவதும் உண்டு. அக் கதைகளின்
சிறப்புக் கூறுகள் நகைச்சுவை, அங்கதம், வாழ்வின் தன்மைகள் பற்றிய பொதுத்திறனாய்வு
ஆகியவையாக இருக்கும். நகைச்சுவைத் துணுக்குகளைப் பற்றிய இப்பாடத்தைப்
படிக்கப் புகு முன் இக்கருத்தினை மனதில் கொள்ள வேண்டும்.
நகைச்சுவைத்
துணுக்குகள் ஒரு குறிப்பிட்ட நாட்டு மக்கள்
அல்லது ஓர் இனம் அல்லது ஓர் ஊர், தனிமனிதர்கள், அரசியல்
கட்சிகள் பற்றியவையாக அமைந்திருக்கும். இவற்றை
உருவாக்கியவர் யார் என்று தெரியாது. அவர்கள்
படித்தவர்களாகவோ அல்லது படிக்காதவர்களாகவோ
இருக்கலாம். நகரத்தைச் சேர்ந்தவர்களாகவோ கிராமத்தைச்
சேர்ந்தவர்களாகவோ இருக்கலாம். ஆயினும் இவை
மக்களிடையே வாய்மொழியாக வழங்கி வருகின்றன. அரசியல்,
பொருளாதார, சாதி முதலிய காரணங்களால் ஒடுக்கி
வைக்கப்பட்ட மக்கள் அதற்குக் காரணமானவர்களைக் கேலி
செய்து நகைச்சுவைகளை உருவாக்குவதும் உண்டு.
சர்வாதிகார
ஆட்சி காரணமாகத் தங்கள் கருத்துகளை
வெளிப்படையாகக் கூற இயலாத நாடுகளைச் சேர்ந்த மக்கள்
அந்த அரசு பற்றியும் ஆட்சியாளர்கள் பற்றியும் ஏராளமான
நகைச்சுவைகளை உருவாக்கித் தங்களுக்குள்
கூறிக்
கொள்கின்றனர். இதன் வாயிலாகத் தங்களுக்குள் அடக்கி
வைக்கப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்தி ஆறுதல் தேடிக்
கொள்கின்றனர்.
6.1.1
கதை சொல்பவர்
பழங்காலத்தில் கிராமங்களில் நல்ல கதை சொல்லிகள் இருந்தார்கள். வாய்மொழியாகத்
தாம் கேட்டுச் சேமித்த கதைகளை ஆர்வம் உண்டாகும் வகையில் இந்தக் கதை
சொல்லிகள் உருக்கமான கதைகளையும், மக்களுக்கு நல்லது- கெட்டது தெரிவிக்கும்
கதைகளையும் சொல்வதோடு நகைச்சுவை ததும்பும் கதைகளையும் சொல்வார்கள்.
அவர்களுடைய நகைச்சுவை எளிமையானது; தெளிவானது; அதே நேரம் கொச்சையானதாகவும்
இருக்கும். அத்தகைய கதை சொல்லிகள் கதை சொல்வதற்கு முன்னாலேயே ஒரு நகைச்சுவையை
வழக்கமாகப் பயன்படுத்துவார்கள்.
கதை
சொல்லி கேட்பார்: ‘இந்த கதை உங்களுக்குத் தெரியுமா?’
என்று. ‘தெரியும்’ என்று பதில் வந்தால் ‘தெரிஞ்சவங்களுக்குச்
சொல்லி என்ன பிரயோசனம்’ என்பார். ‘தெரியாது’ என்று பதில்
வந்தால், ‘தெரியாதவங்களுக்குச் சொல்லி என்ன பிரயோசனம்’
என்பார். யாராவது ஒருவர் ‘கொஞ்சம் பேருக்குத் தெரியும்,
கொஞ்சம் பேருக்குத் தெரியாது’ என்று சொன்னால், அப்போது
கதை சொல்லி ‘தெரிஞ்சவங்க தெரியாதவங்களுக்கு
சொல்லுங்கோ’ என்று சொல்வார். இப்படி ஒரு கலகலப்பை
உண்டாக்கிவிட்டுக் கதைகள் சொல்லத் தொடங்கிவிடுவார்.
6.1.2
கதைகளில் இடம் பெறுவோர்
ஒருவரையொருவர் ஏமாற்றிக் கொள்வதாக அமையும்
எத்தர்களைப் பற்றிய ஏராளமான கதைகள் மக்களிடையே
உள்ளன. இவ்வகைக் கதைகளை ‘எத்துவாளிக் கதைகள்’ என்று
அழைப்பர். இதுபோன்ற கதைகளைக் கூறும் போது குறிப்பிட்ட
ஊரைக் கூறி, அந்த ஊர்ப் பெயராலேயே அக்கதையைச்
சுட்டுவர். உதாரணமாக
‘செஞ்சி
எத்தன், மதுரை எத்தன்’
என்று
சுட்டுவதைக் கூறலாம்.
•
குன்னத்தூரார் கதைகள்
இது போலவே குறிப்பிட்ட ஊரினரின் அறியாமை அல்லது முட்டாள் தனத்தை அடிப்படையாகக்
கொண்டு ஏராளமான நகைச்சுவைக் கதைகளும் துணுக்குகளும் கூறப்படுவதுண்டு.
குமரி மாவட்டத்திலுள்ள குன்னத்தூர் என்னும் ஊரில் வாழும் மக்களைப்
பற்றிய நகைச்சுவைக் கதைகளையும் துணுக்குகளையும் ஞா.ஸ்டீபன் சேகரித்து
வேடிக்கைக் கதைகளில் அமைப்பியல் ஆய்வு என்னும்
பெயரில் ஆய்வு செய்துள்ளார். அவர் சேகரித்த குன்னத்தூரான் நகைச்சுவைத்
துணுக்குகள் சில வருமாறு.
•
மகாராஜாவும் மக்களும்
குன்னத்தூரான்கள் சிலர் திருவிதாங்கூர் அரண்மனைக்கு மகாராஜாவைப் பார்க்க
வந்தனர். மகாராஜா அவர்களை இரண்டு நாள் தங்க வைத்தார். அவர்கள் சமைத்து
உண்பதற்குத் தேவையான உணவுப் பொருட்களையும் எரியும் விளக்கு ஒன்றையும்
கொடுத்தார். ஆனால் குன்னத்தூரார்கள் சமைக்கவில்லை.

பின்னர்
மகாராஜா அவர்களிடம் ‘ஏன் சமைக்கவில்லை’ என்று கேட்டார். அதற்கு அவர்கள்
‘சமைப்பதற்கு எல்லாம் தந்தீர்கள், தீப்பெட்டி தரவில்லையே’ என்றனர்.
அதற்காகத்தான் எரியும் விளக்கு தந்துள்ளேன் என்றார் மகாராஜா. அப்போது
குன்னத்தூரார்கள் ‘எரியும் விளக்கு வெளிச்சத்திற்குத் தானே ஆச்சி’
என்று பதிலளித்தனர்.
•
திருடனும் சாவியும்
குன்னத்தூரான் ஒருவன் கொஞ்சம் பொன்னும் பொருளும் சேர்த்து வைத்திருந்தான்.
அவற்றை ஒரு பெட்டிக்குள் பத்திரமாக வைத்துப் பூட்டி, சாவியை எப்போதும்
மடியில் வைத்திருந்தான். ஒருநாள் அவன் வீட்டில் திருடர்கள் நுழைந்தனர்.
காட்சி
அந்தப் பெட்டியை அவர்கள் தூக்கிச் சென்றனர். குன்னத்தூரான் நடப்பதையெல்லாம்
பார்த்துக் கொண்டே இருந்தான். திருடர்கள் பெட்டியோடு வெளியில் செல்லும்
போது குன்னத்தூரான் சிரித்துக் கொண்டே “சாவி என்னிடம் தானே உள்ளது;
பெட்டியை என்ன செய்ய போகிறீர்கள்” என்றானாம்.
•
மழைநீரும் கிணற்றில் குதித்தலும்
ஒரு குடும்பத்தில் தாயும் மகளும் இருந்தனர்.
மகள் தாயுடன்
ஓயாமல் சண்டை போட்டுக் கொண்டிருப்பாள். ஒரு நாள் நடந்த
சண்டையின் போது மகள் கோபம் அடைந்து, “இனி நான் உன்
முகத்தில் முழிக்க மாட்டேன். கிணற்றில் குதித்து சாகப்
போகிறேன்” என்று சொல்லி வெளியே வந்தாள். மழை பெய்து கொண்டிருந்தது.
காட்சி
உடனே அவள் வீட்டிற்குள் வந்து முறம்
(சுளகு) ஒன்றை எடுத்து மழைநீர் படாமல் தலைமீது பிடித்துக்
கொண்டு கிணற்றில் குதித்தாள்.
•
மாடும் ஓட்டையும்
ஒரு விவசாயி காளைமாடு ஒன்று வாங்கி வளர்க்க ஆசைப்பட்டான். நீண்ட நாட்களாக
உழைத்துப் பணம் சேர்த்து, சந்தைக்குச் சென்று காளை மாடு ஒன்று வாங்கி
வந்தான். வீட்டிற்கு வரும் வழியில் மாடு சிறுநீர் கழிப்பதைக் கண்ட
விவசாயி அதிர்ச்சி அடைந்தான். ‘மாடு குடித்த தண்ணீர் எல்லாம் வயிறு
வழியாக ஒழுகுகிறது; மாட்டின் வயிற்றில் ஓட்டை இருக்கிறது.
காட்சி வியாபாரி
நம்மை ஏமாற்றிவிட்டான்’ என எண்ணி மாட்டை வேகமாகச் சந்தைக்கு எடுத்துச்
சென்று வியாபாரியிடம் திருப்பிக் கொடுத்துப் பணத்தைத் திருப்பிக் கேட்டானாம்.
•
எருமைமாடும் தேனும்
குன்னத்தூரான் எருமை மாடு ஒன்று வளர்த்தான்.
ஒரு நாள்
அதன் மூக்கின் அருகில் தேனீக்கள் வட்டமிடுவதைக் கவனித்தான்.
காட்சி
இதனைக் கண்ட குன்னத்தூரான் எருமையின்
மூக்கில் தேன் இருக்கிறது என்று முடிவு செய்தான். தேனை
எப்படி எடுப்பது என்பது அவனுக்குப்
புரியவில்லை.
இறுதியாக அவனுக்கு ஒரு யோசனை வந்தது. வெட்டுக் கத்தி
எடுத்து எருமையின் மூக்கை ஓங்கி வெட்டினான். எருமை
இறந்தது. மூக்கில் சளி மட்டுமே இருந்தது.
மேற்காட்டப்பட்ட நகைச்சுவைத் துணுக்குகள் ஒரு குறிப்பிட்ட ஊரைச் சேர்ந்த
மக்களை முட்டாள்களாகச் சித்தரித்துள்ளன. உண்மையில் அந்த ஊரைச் சேர்ந்தவர்கள்
முட்டாள்களா? இத்தகைய துணுக்குகளை யார் உருவாக்கியிருப்பார்கள்? என்ற
வினாக்களை எழுப்பி ஆய்வு நிகழ்த்திய ஞா.ஸ்டீபன், அவ்வூரில் வசிக்கும்
ஒதுக்கப்பட்ட ஏழை மக்களைப் பற்றி அண்டை ஊர்களில் வசிக்கும் மேல் தட்டு
மக்கள் இத்தகைய துணுக்குகளை உருவாக்கியிருப்பார்கள் என்று முடிவுக்கு
வருகிறார். மேலும், இக்கதைகள் ‘மூடர்கள்’ என்று இழிவுக்குள்ளாக்கப்பட்ட
குன்னத்தூர் மக்களிடமும் தற்போது வழக்கில் உள்ளன என்று கூறுகிறார்.
|