ஒவ்வொரு மனித சமுதாயத்திற்கும் ஒரு பண்பாடு உண்டு. மனிதன்
பேசும் மொழி, அவன் அணியும் ஆடை, உண்ணும் உணவு, வாழும் முறை, செய்யும் பணி,
நம்பிக்கை உணர்வு ஆகியவை பண்பாட்டை வெளிப்படுத்தும் கூறுகளாகும். தமிழரின்
பண்பாட்டுப் பெருமையைப் பாரதி புகழ்ந்துரைக்கிறார். முதலில் தமிழரின் நம்பிக்கையும்
கடமை உணர்வும் 1.2.1 நம்பிக்கையும் கடமை உணர்வும் ஒருவனது உள் உணர்வுகளும், நம்பிக்கைகளும் அவன் பேசும் பேச்சிலும்,
அவன் செயல்களிலும் வெளிப்படும். அவை அவனது பண்பாட்டை வெளிப்படுத்தும். தமிழர்கள் பல்வேறு காரணங்களால் ஆப்பிரிக்கா, சாவா, சுமத்திரா,
மலேயா, சிங்கப்பூர், பர்மா போன்ற பிற நாடுகளுக்குச் சென்றனர். அங்குப் பல்வேறு
வகையான துன்பங்களை அனுபவித்தனர். இருப்பினும் பாரம்பரியமாகத்
தங்கள் முன்னோர்கள் கொண்டிருந்த நம்பிக்கைகளிலிருந்து கொஞ்சம் கூட நெகிழாமல்
வாழ்ந்து வந்தனர். குறிப்பாகச் சமய நம்பிக்கையைப் பொறுத்த வரையில் அதைத்
தங்கள் பண்பாட்டுக் கூறாகப் பாதுகாத்து வந்தனர். இதனை,
(தேசியகீதங்கள், தமிழச்சாதி: 31-36, 43-45)
என்று புலம் பெயர்ந்த தமிழர்களின் சமய நம்பிக்கையினையும், கடமை உணர்வினையும் புகழ்ந்து கூறுகிறார் பாரதியார்.
தமிழர்கள் சென்று குடியேறிய நாடுகளில் தமிழர்களுக்கு அறிமுகம் இல்லாத பிற சமயங்கள் இருந்தன. சூழலுக்கு அடிமையாகியோ,எப்படியாவது வாழவேண்டும் என்பதற்காகவோ அவர்கள் தாம் சென்றடைந்த நாடுகளிலுள்ள சமயங்களைத் தழுவவில்லை. தங்களுக்கு ஈடுபாடு உடைய, முழுநம்பிக்கை உடைய, தங்கள் சமயத்தையே உறுதியாகப் பற்றிக் கொண்டிருந்தனர். இன்றைக்கும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள், தங்களது அடையாளச் சின்னமாக, தங்கள் தனித் தன்மையைப் புலப்படுத்த, முருகன் கோயில்களை அமைத்தும், மாரியம்மன் கோயில்களை அமைத்தும், காவடி எடுத்தல், அலகு குத்துதல், தீ மிதித்தல் போன்ற சமயச் சடங்குகளைப் பின்பற்றியும் வாழ்ந்து வருகின்றனர். இவை அவர்கள் தமது பண்பாட்டை உறுதியாகப் பின்பற்றி வருவதற்கு உரிய சான்றுகளாகத் திகழ்கின்றன.
உழைப்பின் அருமையை உணர்ந்தவர்கள் தமிழர்கள். எனவேதான் வணிகர்களாகவும், ஒப்பந்தக் கூலிகளாகவும் தாம் குடிபெயர்ந்து சென்ற நாடுகளிலெல்லாம், தம் உழைப்பால் பிறரின் நன்மதிப்பைப் பெற்றதோடு, தாமும் தம் உழைப்பால் முன்னேறினர். கடமை உணர்வுடன் எப்பொழுதும் உழைக்க வேண்டும் என்ற மனப்பான்மை ஓர் இனத்தின் பண்பாட்டை வெளிப்படுத்தும் என்பர். கடல் கடந்து சென்றாலும் தம் கடமையிலிருந்து வழுவாதவர்கள் தமிழர்கள் என்று புகழ்கிறார். இந்தப் பண்பாட்டைத் தாம் சென்ற நாடுகளில் விடாமல் பாதுகாத்தவர்கள் தமிழர் என்பதால் பாரதியார் ‘செய்யுங்கடன் பிழையார்’ என்று சுட்டிக்காட்டிப் பாராட்டுகிறார்.
|