குடும்ப
வளர்ச்சியே ஒரு நாட்டின் வளர்ச்சி
என்னும்
அடிப்படையைக் கொண்டவர் பாரதிதாசன். எனவே,
தனது
குடும்பவிளக்கு நூலில் நடுத்தரக் குடும்பம் ஒன்றைப் படைத்துக்
காட்டியுள்ளார். குடும்ப அமைப்பில் பலர் இடம் பெற்றிருப்பதை
உணர்த்தியுள்ள அவர் ஒவ்வொருவருக்கும் இடையில புரிதல்
வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இவ்வாறு
சிறந்த புரிதல் கொண்ட குடும்பத்தை அவர் நல்ல
குடும்பம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் நல்ல குடும்பத்தைப்
பல்கலைக் கழகத்துடன் ஒப்புமைப்படுத்தி ஒவ்வொரு குடும்பமும்
அறிவின் விளக்கமாக அமைய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
குடும்பத்தில்
பலர் இருந்தாலும் பெண்ணே முதன்மை இடத்தைப்
பெறுகிறாள் என்ற கருத்தில் குடும்ப விளக்கில்
தலைவியைப்
படைத்துக் காட்டியுள்ளார் பாரதிதாசன். அதிகாலையில் கதிரவன்
தோன்றுவதற்கு முன்பே துயில் எழும் தலைவி ஒருநாள் முழுவதும்
குடும்பத்தில் ஆற்றும் கடமைகளை ‘ஒருநாள் நிகழ்ச்சி’
என்ற
தலைப்பில் வெளிப்படுத்தியுள்ளார்.
காலை
முதல் மாலை வரை வீட்டு வேலை, குழந்தைகள் வளர்ப்பு
என்று சுழன்று வேலை செய்த பெண், தன் கணவனுக்காகக்
கடைக்குச் சென்று உதவியதையும் படைத்துக் காட்டியுள்ளார்.
குடும்பம்
என்றால் மாமனார், மாமியார், மருமகள் என்ற மூவருக்குள்
கருத்து வேறுபாடுகளும் சண்டைகளும் ஏற்படும் என்பதை நாம்
அறிவோம். அதற்கு மாறாக, கணவனின் பெற்றோரைத் தனது
பெற்றோரைப் போல் கருதும் தலைவியையும், மருமகளைத் தனது
மகளைப் போல் கருதும் மாமனார் மாமியாரையும் படைத்து,
குடும்பச் சிக்கலுக்கு விடை கண்டுள்ளார் பாரதிதாசன்.
குடும்ப
நலத்துடன் சமுதாய நலமும் இணைந்துள்ளது என்பதை
நன்கு அறிந்தவர் பாரதிதாசன். எனவே, தமது குடும்ப விளக்கில்
தலைவியைப் பொதுநல எண்ணம் கொண்டவளாகவும் தமிழ்ப் பற்று
மிகுந்தவளாகவும் காட்டியுள்ளார்.
|