பழங்கால
இலக்கிய வடிவம் காப்பியம். அதில் தற்காலத்திற்கு
ஏற்ப, புதுக்கருத்துகளை ஏற்றிப் பாடியுள்ளார் பாரதிதாசன். தமது
கொள்கைகளுக்கு ஏற்ப, தாம் பாடியுள்ள காப்பியங்களில்
பகுத்தறிவுக் கருத்துகளையும் பொது உடைமைச் சிந்தனைகளையும்
பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.
பெண்களால்
எல்லாக் காரியங்களையும் சிறப்பாகச் செய்ய முடியும்
என்ற நம்பிக்கை கொண்டவர் பாரதிதாசன். அந்த நம்பிக்கைக்கு
ஏற்ப, சஞ்சீவி பர்வதத்தின் சாரலில் வஞ்சியையும் புரட்சிக்கவியில்
அமுதவல்லியையும் வீரத்தாயில் விஜயராணியையும் கடல் மேல்
குமிழிகளில் பொன்னியையும் பாரதிதாசன் படைத்துள்ளார்.
பாரதிதாசன்
உவமைகளைப் பயன்படுத்துவதில் கைதேர்ந்தவர்
என்பதை அவரது காப்பியங்கள் நமக்கு உணர்த்துகின்றன.
எக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் பல உவமைகளை அவர்
பயன்படுத்தியுள்ளார். இக்காலத்தில் பயன்பாட்டில்
உள்ள
பொருள்களையும் அன்றாட வாழ்வில் காணும் காட்சிகளையும்
அவர் உவமைகளாகக் கையாண்டுள்ளார்.
இருபதாம்
நூற்றாண்டு, குடியாட்சித் தத்துவம் மலர்ந்த நூற்றாண்டு.
இந்தியாவில் குடியாட்சி மலர்வதற்கு முன்பே குடியாட்சியின்
நன்மைகளைப் பாரதிதாசன் பாடியுள்ளார்.
|