5.3. பகுபத உறுப்புகள்

ஒரு பதத்தைப் பிரித்தால் அது பொருள் தருமானால் அது பகுபதம் என்று கண்டோம் அல்லவா? அவ்வாறு ஒரு பகுபதம் பிரிந்து நிற்கும் நிலையில் அமையும் உறுப்புகள் பகுபத உறுப்புகள் எனப்படுவன. இப்பகுபத உறுப்புகள் ஆறு. அவை,

(1) பகுதி
(2) விகுதி
(3) இடைநிலை
(4) சாரியை
(5) சந்தி
(6) விகாரம்

ஆகியன.

இப்பகுபத உறுப்புகளைப் பின்வரும் நன்னூல் நூற்பா தொகுத்துக் கூறுகின்றது.

பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை,
சந்தி, விகாரம் ஆறினும் ஏற்பவை
முன்னிப் புணர்ப்ப முடியும் எப்பதங்களும்

என்பது நூற்பா(133).

இந்த ஆறு உறுப்புகளையும் அறிவுடையோர் கூட்டிச் சேர்த்தால் எல்லாவிதமான பகுபதங்களும் அமையும் என்பது பொருள்

இனி, இந்த ஆறு உறுப்புகள் ஒவ்வொன்றிற்கும் எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.

பெயர்ப்பகுபதம் : வேலன்
வேல் + அன்.
இதில் வேல் - பகுதி
அன் - விகுதி
வினைப் பகுபதம் : செய்தான்
செய்+த்+ஆன்
இதில் செய் - பகுதி
த் - இடைநிலை
ஆன் - விகுதி.

எனவே ஒருபகுபதம் பகுதி, விகுதி ஆகிய இரு உறுப்புகளைப் பெற்றுவரலாம்: இவ்விரண்டோடு இடைநிலையைப் பெற்றும் வரலாம்.

மேற்கண்ட எடுத்துக்காட்டுகள் பகுபத உறுப்புகளை உங்களுக்கு அறிமுகப்படுத்தும் பொருட்டுத் தரப்பட்டன. இனி ஆறு பகுபத உறுப்புகளையும் பற்றிக் காண்போம்.

5.3.1 பகுதி

பகுதி ஒரு பகுபதத்தின் முதலில் அமையும் உறுப்பு ஆகும். எனவே இதனை முதனிலை என்றும் வழங்கலாம்.

உண்டான் என்னும் பகுபதத்தில் (உண்+ட்+ஆன்) உண் என்பது பகுதியாகும்.

5.3.2 விகுதி

விகுதி பகுபதத்தின் இறுதியில் நிற்கும் உறுப்பு என்பதால் இதனை இறுதிநிலை என்றும் வழங்குவது மரபு. பகுதியின் பொருளை, அதற்குப் பின்னால் வந்து நின்று விகாரப் படுத்துவதால் (வேறுபடுத்திக் காட்டுவதால்) இது விகுதி என்ற பெயர் பெற்றது என்பர்.

உண்டான் என்னும் பகுபதத்தில் (உண்+ட்+ஆன்) ஆன் என்பது விகுதி ஆகும். இது திணை, பால், எண், இடம் ஆகியவற்றைக் காட்டுகிறது.

5.3.3 இடைநிலை

இடைநிலை, முதனிலைக்கும் (பகுதி) இறுதிநிலைக்கும் (விகுதி) இடையில் நிற்கும் உறுப்பு என்பதால் இடைநிலை என்னும் பெயர் பெறுகின்றது. வினைப் பகுபதத்தில் இடைநிலை காலம் காட்டும் உறுப்பு ஆகும்.

உண்+ட்+ஆன் என்னும் பகுபதத்தில் - உண் : முதனிலை
ட் : இடைநிலை
ஆன் : இறுதிநிலை.

என ‘இடைநிலை‘ - பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் அமைந்திருத்தலைக் காணலாம்.

5.3.4 சாரியை

சாரியை, பெரும்பான்மையாக, இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் வரும் உறுப்பு ஆகும். சிறுபான்மையாகச் சந்திக்கும் விகுதிக்கும் இடையிலும் வரும். சாரியை = சார்ந்து இயைந்து நிற்பது. தனக்கெனப் பொருள் எதுவும் இன்றிப் பிற உறுப்புகள் இணையும்போது இடையில் வருவது.

வந்தனன் என்னும் சொல் ‘வா+த்+த்+அன்+அன்‘

என்று பிரிந்து நிற்கும். இதில்,

வா - பகுதி
த் - சந்தி
த் - இடைநிலை
அன் - சாரியை
அன் - விகுதி,

‘த் இடைநிலைக்கும், ‘அன்‘ விகுதிக்கும் இடையில் சாரியை வந்துள்ளதைக் காணலாம்.

5.3.5 சந்தி

சந்தி பெரும்பாலும் முதனிலை (பகுதி)க்கும் இடைநிலைக்கும் இடையில் வரும். பகுதிக்கும் விகுதிக்கும் இடையிலும் சிறுபான்மை வரக்கூடும். உறுப்புகளின் இணைவில் (சந்தி), அவற்றை இணைக்க வருவது சந்தி.

நடத்தல் என்னும் பகுபதம் நட+த்+தல் என்று பிரிந்து வரும்.

இதில் - நட - பகுதி
த் - சந்தி
தல் - விகுதி

பகுதிக்கும், விகுதிக்கும் இடையில் ‘த்‘ சந்தி வந்திருப்பதைக் காண முடிகிறது.

5.3.6 விகாரம்

விகாரம் என்று தனியாக ஓர் உறுப்பு இல்லை. பகுதியும் சந்தியும் மாற்றம் அடையலாம். அல்லது சந்தி மட்டும் மாற்றம் அடைந்து வரலாம். இவ்வாறு மாற்றம் பெறுவதை ‘விகாரம்‘ என்பர்.

எடுத்துக்காட்டு :

வந்தனன் - வா+த்+த்+அன்+அன்
வா - பகுதி
த் - சந்தி
த் - இடைநிலை
அன் - சாரியை
அன் - விகுதி

இதில் வரும் வா என்னும் பகுதி எனக் குறுகியும், த் என்னும் சந்தி ந் என்று மாற்றம் அடைந்தும், விகாரமாகியுள்ளன.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1. பகாப்பதம் எத்தனை வகைப்படும்? அவை யாவை? விடை
2. எவையேனும் இருவகைப் பகாப்பதத்திற்கு எடுத்துக்காட்டுத் தருக. விடை
3. பகுபதம் எத்தனை வகைப்படும்? அவை யாவை? விடை
4. பெயர்ப் பகுபதத்தில் எவையேனும் மூன்றினை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக. விடை
5. வினைப் பகுபதத்தின் வகைகளை விளக்குக. விடை
6. பகுபத உறுப்புகள் யாவை? விடை
7. பகுபத உறுப்புகளில் இரண்டினை எடுத்துக் காட்டுகளுடன் விளக்குக. விடை
8. பகுபத உறுப்புகளுள் விகாரம் தோன்றுவதை விளக்குக. விடை