2.3 நூற்று அறுபத்து மூன்றாம் பாட்டு

இப்பாட்டின் ஆசிரியர் பெருஞ்சித்திரனார். இப்பாட்டு, குறுநில மன்னனாகவும் பெருவள்ளலாகவும் விளங்கிய குமணனைப் போற்றுவது.

குமண வள்ளல் பெருஞ்சித்திரனாரின் புலமையைப் பாராட்டிப் பெரும் பரிசில் தந்தான். அதனைப் பெற்று வந்த புலவர் வீட்டிற்கு வந்து தன் மனைவியை நோக்கி உரைத்ததாக அமைந்தது இப்பாட்டு.

முதிரத்துக் கிழவன்

குமணன் முதிர மலைக்குத் தலைவன் (கிழவன் = உரிமையாளன்). தன்னை நாடி வந்தவர் அனைவர்க்கும் வரையாமல் பெரும் பரிசில்கள் தந்தவன். பெருஞ்சித்திரனார் இம்மன்னனைக் குறித்து மற்றொரு பாட்டில் பாரி, ஓரி, காரி, எழினி, பேகன், ஆய், நள்ளி ஆகிய ஏழு வள்ளல்களும் இறந்த பிறகு இரவலர் துன்பம் தீர்ப்பவன் எனப் போற்றியுள்ளார். குமணனின் நாடு அவன் தம்பி இளங்குமணனால் கொள்ளப்பட்டது. குமணன் காட்டில் சென்று தங்கினான். அந்நிலையிலும் இளங்குமணன் பகை தீரவில்லை. குமணனின் தலையைக் கொண்டு வருபவர்க்குப் பரிசில் தருவதாக அறிவி்த்தான். பெருந்தலைச் சாத்தனார் என்னும் புலவர் காட்டிற்குச் சென்று குமணனைப் பாடினார். பரிசில் ஒன்றும் கொடுக்க இயலாத நிலையில் அவன் புலவரிடம் வாளைத் தந்து என் தலையை வெட்டிச் சென்று இளங்குமணனிடம் பரிசில் பெறுக என்றான். புலவர் வாளைக் கொண்டுபோய் இளங்குமணனிடம் காட்டிக் குமண வள்ளலின் பெருந்தன்மையைப் புலப்படுத்தினார். (புறநானூறு, 165)

2.3.1 பாட்டும் கருத்தும்

நின்னயந்து உறைநர்க்கும் என்று தொடங்கும் இப்பாட்டு ஒன்பதடிகளைக் கொண்டது.

“எனது மனைக்குரியவளே! என்னிடம் அன்பு செய்து வாழும் உன்னைச் சார்ந்த மகளிர்க்கும், நீ அன்பு செய்தொழுகும் மகளிர்க்கும் பல குணங்களும் மாட்சிமை மிக்க கற்பும் உடைய உனது உறவினராகிய மூத்த மகளிர்க்கும், நம் சுற்றத்தின் பசி நீங்க நெடுநாட்களாகப் பொருள்களைக் கடனாக உதவியோர்க்கும், மற்றும் இவர் இத்தன்மையார் என்றெல்லாம் கருதாமல் பிறர்க்கும் வழங்குக! என்னைக் கேட்காமலும் வழங்குக! இப்பொருளைப் பலாப்பழம் முதலாயின விளைகின்ற முதிரமலைக்குத் தலைவனாகிய குமணன் நல்கினன். இதனை நீ எல்லார்க்கும் வழங்குக!”.

இன்னோர்க்கு என்னாது என்னொடும் சூழாது
வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும்
எல்லோர்க்கும் கொடுமதி மனைகிழ வோயே

(சூழாது = ஆராயாது, வல்லாங்கு = சிறப்பாக, கொடுமதி = கொடு, மனைகிழவோய் = மனைக்கு உரியவளே)

எனப் பிறர்க்குதவும் உள்ளம் வெளிப்பட்டது. பொருளற்ற வறுமை நிலையிலிருந்தும், பொருள் வந்தபின் அதனைத் தமக்கு வேண்டுமெனக் கருதாது எல்லார்க்கும் கொடு என்றது புலவரின் பெருந்தன்மையாகும்.

பாட்டின் திணை, துறை விளக்கம்

இப்பாட்டின் திணை பாடாண். குமணனின் கொடை மேம்பாடு பேசியமையின் பாடாண் ஆயிற்று. துறை பரிசில். குமணனிடம் தாம் பெற்ற பரிசில் பற்றிக் கூறுதலின் இத்துறையாயிற்று.


தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1. தொண்ணூற்றைந்தாம் புறப்பாட்டு எச்சூழலில் யாரால் பாடப்பட்டது?

2. இவ்வே பீலி அணிந்து எனத் தொடங்கும் செய்யுள் கருத்தைக் கூறுக.

3. அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின் என்ற பாட்டின் திணை, துறையை விளக்குக.

4. குமணனின் சிறப்பை எடுத்துரைக்க.