1.2 ‘அகம்’ - பொருளும் பொருத்தமும்

அகம் என்ற சொல்லின் பொருள் உள் - உள்ளே - உள்ளிருப்பது - அகத்துள் இருப்பது என விரியும். தலைவனும் தலைவியும் தம் உள்ளத்துள் உணர்ந்து அனுபவிக்கும் இன்பம் இத்தன்மையுடையது எனப் பிறர்க்கு விளக்க இயலாததாக இருப்பது. தம்முள்ளும் ஒருவர்க்கொருவர் விளக்க இயலாததாக இருப்பது. ஆகவே காதல் ஒழுக்கத்தை ‘அகம்’ என்றது மிகவும் பொருத்தமாகும். ‘அகம்’ என்பதை ‘ஆகுபெயர்’ என்றார் நச்சினார்க்கினியர். அகம் என்பது அகத்தே (உள்ளத்தே) நிகழும் இன்பத்திற்கு ஆகி வந்தது என்பது அவர் கருத்து.

காதலுக்கு உள்ளமே முதன்மை; உள்ளத்து ‘அவாவே’ (ஆசை) தூண்டுதலாகக் ‘காதல்’ வெளிப்படும்; உடல் கருவியேனும் உள்ளமே காரணம்; காதலில் மொழியும் செயலும் உள்ளத்தின் வழிச்செல்லும்; உள்ளத்துள் நினைக்கும் நினைவும் காதல் நுகர்ச்சிக்குச் சமம். இவையாவும் காதலை - அன்புணர்ச்சியை ‘அகம்’ என்று வழங்கும் சொல்லாட்சியின் பொருத்தத்தைப் புலப்படுத்துவன. தலை மக்கள் தத்தம் உள்ளத்து உள்ளேயே எண்ணி மகிழும் ஏற்றத்தைக் குறிப்பது அகம். பின்னர்த் தோன்றிய தொன்னூல் விளக்கம் என்னும் நூலும், ‘அகத்திணை என்பது மனத்தின் ஒழுக்கம்’ என்று வரையறுப்பது குறிப்பிடத்தக்கது.

1.2.1 அகப்பொருளின் தனிச்சிறப்பு

அகப்பொருள் பற்றிய இலக்கண நெறி தமிழுக்கே உரியது; இது உலகறிய வேண்டிய பேருண்மை! இதற்கான சான்றுகள் பல உள்ளன.

  • குறிஞ்சிப்பாட்டு
  • சங்க இலக்கியங்களில் ஒன்றான குறிஞ்சிப் பாட்டு களவொழுக்கத்தைப் பற்றியது. அது ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குப் பாடப் பெற்றது என்பர். ‘தமிழ் அறிவித்தல்’ என்பதற்குத் தமிழின் அகப்பொருள் சிறப்பை எடுத்துரைப்பது என்பது பொருள். ஆரிய மன்னன் இச்சிறப்பை அறியாதிருந்தான் என்பதிலிருந்து அகப்பொருள் இலக்கண மரபு தமிழுக்கேயுரிய தனிச்சிறப்பு என்பது புலப்படுகிறதல்லவா!

  • பரிபாடல்
  • பரிபாடலில் குன்றம்பூதனார் பாடிய ஒன்பதாம் பாடல் களவொழுக்கம் பற்றியது. அதனுள் ‘தள்ளாப் பொருளியல்பின் தண்டமிழ்’ என்ற தொடர் வருகிறது. அது பொருள் இலக்கணம் தமிழின் தனிச்சிறப்பு என்பதைக் காட்டுகின்றது.

  • இறையனார் அகப்பொருள்
  • இறையனார் அகப்பொருள் உரையில் வரும், ‘இந்நூல் என் நுதலிற்றோ எனின், தமிழ் நுதலிற்று’ (இந்த நூல் என்ன சொல்லுகிறது என்றால் தமிழ் சொல்கிறது.) என்ற பகுதி அகமே தமிழ் என்பதைச் சுட்டி நிற்கிறது.

  • தமிழ்நெறி விளக்கம்
  • அகப்பொருள் இலக்கணத்தைப் பற்றிக் கூறும் பழந்தமிழ் இலக்கண நூல் ஒன்றுக்குத் ‘தமிழ்நெறி விளக்கம்’ என்றே பெயர் அமைந்திருப்பதும் இங்கு எண்ணத்தக்கது.

  • கலைக் களஞ்சியம்
  • கலைக் களஞ்சியத்தில் பேராசிரியர் மு. அருணாசலம், ‘இக் காதல் ஒழுக்கத்தை இலக்கண நெறியால் வரையறுத்துக் கூறுதல் தமிழர்க்கே உரிய தனிப் பெருஞ் சிறப்பாகும்’ (தொகுதி - 1) என்று வரைந்துள்ள விளக்கமும் குறிப்பிடத்தக்கது. மேற்காட்டியவற்றுள் ‘தமிழ்’ என்ற சொல் தமிழ் அக இலக்கியம், அக இலக்கணம், தமிழர் அகவாழ்வு நெறி என அனைத்துப் பொருளும் தருவதை உணரலாம்.

  • தமிழுக்கே உரியது
  • அகப்பொருட் பாடல்கள் வடமொழி உள்ளிட்ட வேறு பல மொழிகளிலும் உண்டு. எனினும் அகப்பொருள் பாடல்களின் அமைப்புக்கு வழிகாட்டும் இலக்கணப் பாகுபாடுகள் தமிழில் மட்டுமே உண்டென்பது உணர்தற்குரியது.

    தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சி என்ற நூலின் ஆசிரியர் ஏ.வி.சுப்பிரமணிய அய்யர் குறிப்பிடும் கீழ்க்காணும் செய்திகள் ஒப்பிட்டு உணரத்தக்கன.

    “வடமொழியில் சில பாடல்களையும், பாடல் தொகுதிகளையும் ஊன்றிக் கவனித்தால், அவற்றில் தமிழ் அகப்பொருள் இலக்கணத்தின் இயல்புகள் காணப்படுகின்றன.”

    “வடமொழி இலக்கண நூல்களில், பொருள் இலக்கணத்தைப் போல் ஒரு பகுதி இருப்பதாகத் தெரியவில்லை.”

    இவ்வாறே - “தொல்காப்பிய முதல் சூத்திர விருத்தி” என்ற உரை வரைந்த சிவஞான முனிவர் வடமொழியில் இருந்து பெறப்படாமல் தமிழில் மட்டுமே உள்ளதாகப் பல இலக்கணக் கூறுகளைப் பட்டியலிட்டுள்ளதைக் குறிப்பிடலாம். அவற்றுள் ஒன்று ‘அகம்-புறம் என்ற பொருட்பாகுபாடு’ என்பதாகும்.

    பூவின் மணமெனப் புனிதத் தமிழினுக்கு
    ஆவி ஆகும் அகப்பொருள் இயல்பே

    மலருக்கு நறுமணம் இன்றியமையாதது; அதுபோலத் தூய தமிழுக்கு அகப்பொருள் இலக்கணம் இன்றியமையாதது என்பது பொருள்.

    இது அறுவகை இலக்கணம் எனும் நூலை இயற்றிய வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அறுதியிட்டு உரைக்கும் பேருண்மை!

    தன் மதிப்பீடு : வினாக்கள்-I
    1. தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்?

    விடை

    2. பொருள் என்பது இலக்கணத்தில் எதனைக் குறிக்கும்?

    விடை

    3. இருவகைப் பொருள் யாவை?

    விடை

    4. அகப்பொருள்- ‘அகம்’ என்பதன் பொருள் யாது?

    விடை

    5. குறி்ஞ்சிப் பாட்டின் சிறப்பு யாது?

    விடை