3.4 காப்பிய வருணனை

    காப்பியங்களில் கதையைத் தொடங்குவதற்கு முன் கதைத் தலைவர், நாட்டு இயற்கைக் காட்சிகள், மலை, கடல், ஆறு, நாடு, நகரம், பொழுதுகள், சூரிய சந்திர உதயங்கள் ஆகியவற்றை நயம்பட வருணித்துப் பாடுதல் இன்றியமையாததாகும். இவற்றுள் சில கதையின் இடையிடையே வருதலும் உண்டு.

    எடுத்துக்காட்டாகச் சிலவற்றைக் காணலாம் :

3.4.1 கடல், ஆறு

    தண்டியலங்காரத்தில் கடல் வருணனை எனக் குறிக்கப் பெறினும், ஆற்று     வருணனையையே     காப்பியங்களில் மிகுதியாகக் காண முடிகின்றது.

முல்லையைக் குறிஞ்சி ஆக்கி,
    மருதத்தை முல்லை ஆக்கி,
புல்லிய நெய்தல் தன்னைப்
    பொருஅரு மருதம் ஆக்கி,
எல்லைஇல் பொருள்கள் எல்லாம்
    இடைதடு மாறும் நீரால்
செல்லுறு கதியில் செல்லும்
    வினைஎனச் சென்றது அன்றே
(கம்ப-ஆற்றுப்படலம்-17)

(புல்லிய = பொருந்திய
பொருஅரு =
நிகரற்ற)

    சரயு நதியானது முறையே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய திணைநிலங்களில் பாயும் நிலையில் அடித்து வரும் பொருள்களால் திணைப் பொருள்களையே மாற்றி விடுகின்றது. இது விதிவழியே உயிர்களின் செயல்கள் நடைபெறுவதுபோல் உள்ளது.

3.4.2 நாடு

காய்மாண்ட தெங்கின் பழம்வீழத் கமுகின் எற்றிப்
பூமாண்ட தீந்தேன் தொடைகீறி வருக்கை போழ்ந்து
தேமாங் கனிசிதறி வாழைப் பழங்கள் சிந்தும்
ஏமாங் கதம்என்று இசையால்திசை போயது உண்டே
(சீவக-நாமகள்-2)

(தெங்கு = தேங்காய்
கமுகு = பாக்கு
வருக்கை
= பலா
இசை = புகழ்)

    தேங்காய், பாக்கின் மீதும், பலாக்கனியின் மீதும், தேமாங்கனியின் மீதும் முறையே வீழ்ந்து புகழ்சேர்க்கும் என்பது பொருள். ஏமாங்கத நாட்டுவளம் இவ்வாறு பேசப் படுகிறது.

3.4.3 நகர்

எறிசுறவு இளையவர் ; ஏந்து பூங்கொடி
மறிதிரை ; வரைபுரை மாடம் மாக்கலம் ;
பெறலரும் திருவனார் அமுதம் ; பேரொலி
அறைகடல் வளநகர் ஆயது என்பவே
(சீவக-கேமசரி-35)

(சுறவு = சுறாமீன்
மாடம் = மாளிகை
மாக்கலம் = கப்பல்)

    பேரொலியை உடைய நகர், வீரர் சுறாமீனாகவும், கொடி    அலைகளாகவும், மாளிகைகள் மரக்கலமாகவும், மகளிர் அமுதமாகவும் அமைய ஒரு கடல்போல அமைகின்றது.

3.4.4 சூரிய உதயம்

காலன் மேனியில் கருகுஇருள் கடிந்து உலகு அளிப்பான்
நீல ஆர்கலித் தேரொடு நிறைகதிர்க் கடவுள்
மாலின் மாமணி உந்தியில் அயனொடு மலர்ந்த
மூல தாமரை முழுமலர் முளைத்தென முளைத்தான்
(கம்ப-பால-அகலிகை-41)

(காலன் = எமன்
கடிந்து = நீக்கி
ஆர்கலி = கடல்
உந்தி = கொப்பூழ்)

    சூரியன், எமனையொத்த கரிய இருளை நீக்கி, திருமாலின் கொப்பூழில் பிரமனொடு சேர்ந்து மலர்ந்த தாமரை மலர் உதித்தாற் போல உதித்தான்.

3.4.5 சந்திர உதயம்

தெரிந்துஒளிர் திங்கள்வெண் குடத்தி னால்திரை
முரிந்துஉயர் பாற்கடல் முகந்து மூரிவான்
சொரிந்ததே ஆம்எனத் துள்ளும் மீனொடும்
விரிந்தது வெண்நிலா மேலும் கீழுமே
(கம்ப-சுந்தர-ஊர்தேடு-53)

(மூரி = வலிமை
மீன்
= விண்மீன்)

    திங்களாகிய குடத்தினால் பாற்கடலிலிருந்து முகந்து, விண்ணிலிருந்து ஊற்றினாற்போன்று, வெண்ணிலவின் ஒளி, நட்சத்திரங்களுடன் கூடி விரிந்து நின்றது.

    இவ்வாறு இயற்கை வருணனைகள் காப்பியங்களில் அமைகின்றன.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1.
காப்பியத்திற்கான இலக்கணத்தைக் குறிப்பிடுக. விடை
2.
பெருங்காப்பியத்திற்கும்     காப்பியத்திற்கும் இடையிலான வேறுபாடு யாது? விடை
3.
காப்பிய முகப்பு எவ்வாறு அமையும்? விடை
4. காப்பியங்களின் இயற்கை வருணனைகளாக எவை எவை அமையும்? விடை