2.3 திராவிட மொழிகளில் மொழிபெயர்ப்புகள்

வடமொழியான சமஸ்கிருதம் இந்திய மொழிகளில் தாக்கம் செலுத்தியுள்ளது. தமிழில் எப்படிச் சொல் நிலையிலும், பொருள் நிலையிலும் தழுவலிலும் மொழிபெயர்ப்பிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை இதுவரை கண்டோம். இனி, திராவிட மொழிகளான தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகள் தமக்கிடையே எத்தகைய தாக்கங்களைத் தமக்குள் ஏற்படுத்திக் கொண்டன எனக் காண்போம்.

வடமொழிக்குப் பின், ஆங்கிலம் முதலிய உலக மொழிகள் மொழிபெயர்ப்புக்கு இடம் அளிக்கும் முன், திராவிட மொழிகள் தம்முள் இலக்கியப் பரிமாற்றத்தை மொழிமாற்றம் மூலம் செய்தமை தெரிகின்றது. நான்கு மொழிகளின் கலந்துறவாடலாக அல்லாமல் தமிழும் மலையாளமும் ஓர் இணையாகவும், கன்னடமும் தெலுங்கும் மற்றொரு இணையாகவும் உறவு கொண்டிருந்தன.

2.3.1 தமிழும் மலையாளமும்

தமிழிலிருந்து முதன்முதலாக 1595இல் திருக்குறள் மலையாளத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டது. பழைய உரைநடையில் அமைந்த இம்மொழிபெயர்ப்பு, ராமவர்ம கவிராஜனால் தரப்பட்டது.

இதே காலத்தில் தமிழிலிருந்து பரமஞான விளக்கம் என்பதும் மலையாளத்தில் வழங்கப்பட்டது. இந்நூலின் ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர் போன்ற விவரங்கள் கிடைக்கவில்லை.

‘உள்ளூர்’ பரமேஸ்வரய்யர் என்பவர் திருக்குறளைப் பற்றிக் குறிப்பிடும்போது மொழிபெயர்ப்பாளரையும், மொழிபெயர்க்கச் செய்தவராகிய கொச்சி ராம வர்ம மகாராஜாவையும் (கொல்லம் ஆண்டு, 740-776) குறிப்பிடுகிறார். அந்நூலின் பெயரை, திரு(வள்ளுவ)வுள்ளப் பயன் என்று சுட்டுகிறார்.

2.3.2 தெலுங்கும் கன்னடமும் தமிழும்

12ஆம் நூற்றாண்டில் கன்னடமும் தெலுங்கும் அறிந்திருந்த ‘பல்குரிகி சோமநாத’ என்பவர் பசவ புராணத்தைத் தெலுங்கில் தந்துள்ளார். இந்நூற்றாண்டில் கருநாடகத்தில் வாழ்ந்த வீர சைவ இயக்கப் பெரியோராகிய பசவேசுவரன் இந்நூலின் நாயகன். கன்னடத்தில் பீமகவி (14ஆம் நூற்றாண்டு) அளித்த மொழிபெயர்ப்புக்கு மூலமாகத் தெலுங்கின் பசவ புராணம் சுட்டப்படுகிறது.

தெலுங்கும் கன்னடமும் தவிரத் தமிழும் கன்னடமும் கூட மொழிபெயர்ப்புக்கு வாய்ப்பு அளித்துள்ளதைப் பிரபுலிங்கலீலை காட்டுகின்றது. சாமரசனின் (1430) பிரபுலிங்க லீலை, பிதுபர்த்தி சோமநாத கவியால் (1480) தெலுங்கு த்விபத (இருசொல்) யாப்பிலும், மீண்டும் பிதுபர்த்தி சோமநாத கவியின் இளைய சகோதரன் பசவனால் (1510) பத்ய (கவிதை நூல்) காவியமாகவும் தெலுங்கில் தரப்பட்டது. பசவ புராணமும் பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழில் தரப்பட்டது. தமிழ் பிரபுலிங்க லீலையை இயற்றியவர் சிவப்பிரகாசர்.

தமிழிலிருந்தும் கூட ஆண்டாளின் கதையும், நாயன்மார் வரலாறும், இறைவன் திருவிளையாடற் பாடல்களும் தெலுங்கு, கன்னட மொழிகளுக்குச் சென்றுள்ளன. ஆனால் அவை முழுமையான மொழிமாற்றம் பெற்றனவா என்பது தெரியவில்லை. ஆனாலும் 1672இல் சிக்குபாத்யாய என்பவர் நம்மாழ்வாரின் திருமொழியைக் கன்னடத்தில் தந்ததாக, சிவகாமி குறிப்பிடுகின்றார்.

2.3.3 வடமொழி

திராவிட மொழிகளுக்கும் வடமொழியான சமஸ்கிருத மொழிக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டதிலிருந்து மொழிபெயர்ப்பு, தழுவல் ஆகிய மொழிமாற்ற நிகழ்வுகள் நடந்த வண்ணம் உள்ளன.

வடமொழியிலிருந்து காதம்பரி (15ஆம் நூற்றாண்டு) செய்யுள் நடையில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.

காளிதாசனின் ரகுவம்சமும், அரிச்சந்திர புராணம், புரூரவ சரித்திரம், நைடதம் போன்றனவும் தமிழில் வந்துள்ளன.

செவ்வைச் சூடுவார், அருளாளதாசர் ஆகியோரின் பாகவத ஆக்கங்களும் இக்காலத்தில் ஏற்பட்டன.

மாதை திருவேங்கட நாதரால் இரண்டாயிரம் செய்யுட்களில் பிரபோத சந்திரோதயம் (17ஆம் நூற்றாண்டு) காவிய அமைப்புடன் வெளிவந்தது. அத்வைதச் சார்பில் குறியீட்டுப் பொருள் கொண்டது இந்நூல்.

சிவப்பிரகாசர் (17ஆம் நூற்றாண்டு) சங்கரரின் வேதாந்த சூடாமணியை 180 செய்யுளில் தமிழ்ப்படுத்தியுள்ளார்.

இவ்வாறு, வசு சரிதை, மனுசரிதை, குசேலோ பாக்கியானம் (17ஆம் நூற்றாண்டு), பஞ்ச தந்திரம் என வடமொழி இலக்கியங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன.

2.3.4 பைபிளும் திருக்குறளும்

உலகளாவிய நிலையில் தமிழுக்கு வந்த முதல் மொழிபெயர்ப்பாக 1774 இல் ஜே.பி. பாப்ரிஷியஸ் தமிழில் தந்த பைபிள் அமைகிறது. இந்திய மொழிகளில் தமிழில் விவிலியத்தின் முதல் மொழிபெயர்ப்பாக இது அமைகிறது. அதுபோலவே தமிழிலிருந்து முதன்முதலாகத் திருக்குறள் திராவிட மொழிகளில் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டது போல உலகமொழிக்கும் சென்றுள்ளது. 1730இல் இலத்தீன் மொழியில் வீரமாமுனிவர் திருக்குறளை மொழிபெயர்த்துத் தந்துள்ளார்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1. தமிழும் பிறமொழிகளும் கொண்டுள்ள உறவை மதிப்பிடுக. விடை
2. பழங்காலத்தில் மொழிபெயர்ப்பு எவ்வாறு இருந்தது? விடை
3. தொல்காப்பியம் குறிப்பிடும் மொழிபெயர்ப்பு வரையறை என்ன? விடை
4. காப்பியங்களில் பெயர்மாற்றம் குறித்துக் குறிப்பிடுக. விடை
5. பக்திப் பாடல்களில் இதிகாசங்கள் பற்றிய குறிப்பு எவ்வாறு உள்ளது? விடை
6. பகவத் கீதை மொழிபெயர்ப்பு வரலாற்றைச் சுருக்கமாக எழுதுக. விடை
7. திராவிட மொழிகளில் தமிழ்மொழி இலக்கியங்கள் மொழிபெயர்க்கப்பட்ட தன்மையை விவரிக்க. விடை