4.6 தொகுப்புரை

திருமாலுக்குப் பூமாலை தொடுத்து, பூத்தொண்டின் வழி
இறைத்தொண்டு     செய்த     பெரியாழ்வாரையும்
தொண்டரடிப்பொடியாழ்வாரையும் பற்றி அறிந்தோம்.

இரு     ஆழ்வார்களும்     முறையே     பிள்ளைத்தமிழ்,
திருப்பள்ளிஎழுச்சி என்னும் புதிய சிற்றிலக்கிய வகைக்கு
வித்திட்டு, பக்தியோடு தமிழ் இலக்கிய வகைக்கும்
வளம்சேர்த்த பெருமைக்குரியவர் ஆவர்.

இசையோடு பாசுரங்கள் பாடி இறைவனைக் கண்ட
திருப்பாணாழ்வாரின் இசைத்தொண்டும் தமிழ்த்தொண்டும்
தனிச்சிறப்புக்குரியது.

இராம அவதாரத்தில் நனைந்து இராமனிடம் அன்புகொண்ட
குலசேகர ஆழ்வார் தசரதன் புலம்பல் வழி மகன்மைக்
காதலையும் பக்தியையும் பறை சாற்றுவதோடு நம்மையும்
இராமனுக்காகப் புலம்ப வைக்கிறார்.

பன்னிரு ஆழ்வார்களுள் ஒரே பெண்பிள்ளையாகிய
ஆண்டாள் ஆழ்வார் திருப்பாவையில் பாவை நோன்பையும்,
நாச்சியார் திருமொழியில் அரங்கனுக்கு ஆட்பட்ட நிலையையும்
அழகு தமிழால் புலப்படுத்துகின்றார். அவளின் திருமணம்
பற்றிய பாசுரங்கள் பக்திக் காதலைப் பறை சாற்றுவதோடு
ஆய்ப்பாடிக்கே நம்மை அழைத்துச் செல்கின்றன. ஆண்டாள்
அரங்கனுள் கரைய, அவள் காட்டும் மணச்சடங்கில் நாமும்
அவளுக்காகக் கரைந்து போகின்றோம்.

ஆழ்வார்களின் திருத்தொண்டும் காதலும் ஒரு நிமிடம் நம்மை
- நம் மனத்தை இழுத்துப் பிடிக்கின்றன அல்லவா?



தன்மதிப்பீடு : வினாக்கள் - II

1.
பெருமாள் திருமொழி அருளியவர் யார்?
2.
‘தசரதன் புலம்பல்’ பாடி மகன் மேல்
கொண்ட காதலைப் புலப்படுத்தியவர் யார்?
3.
‘படியாய்க் கிடந்து பெருமானின் பவளவாய்
எங்குக் காண விரும்பினார் ஆழ்வார்?
4.
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் பாவை
பாடிய ஆழ்வார் யார்?
5.
பன்னிரு ஆழ்வார்களுள் நாயக நாயகி பாவம்
வேண்டாது கண்ணன் மீது கொண்ட காதலைப்
பாடிய ஒரே ஒரு பெண்பாவை யார்?