4.2
புறப்பொருட் சிறப்பு
மறவுணர்வு
புலவர்களாலும் சிறந்ததாக மதித்துப் போற்றப்பட்டு
இருக்கிறது. போர்க்களத்தில் உடம்பெல்லாம் கூறுபடச் சிதைந்து வேறாகிய மகனுடைய
மாண்பு கண்டு மறவுணர்வு மிக்க தாயின் மார்பகங்கள் சுரந்தன என்று புறநானூறு
பேசும்.
இடைப்படை
அழுவத்துச் சிதைந்து வேறாகிய
சிறப்புடை யாளன் மாண்பு கண்டருளி
வாடுமுலை யூறிச் சுரந்தன
ஓடாப் பூட்கை விடலைத் தாய்க்கே
(புறம். 295)
என, வீரனை ஈன்ற தாயின் மறவுணர்வு
போற்றப்படுவதைக் காணலாம்.
4.2.1 போரும்
வீரரும்
போர் புரிவதும் போரில் களிற்று யானைகளைக் கொல்வதும்
வீரனுக்குரிய கடமைகளாகக் கூறப்படுகின்றன. போரில்
இறந்துபடுதலைப் பெருமைக்குரியதாகப் பழந்தமிழ்ச் சமுதாயம்
நினைத்திருக்கின்றது. அரச குடியில் பிறந்தோர் களச்சாவே
(போர்க்களத்தில்
உயிர் விடுதல்) பெற வேண்டும் என்ற பெருமித
உணர்வு உடையவராக இருந்திருக்கின்றனர்.
வேந்தரும்
வீரரும் மறவுணர்வு மிக்க தம் வீரப்புகழைப் புலவர் பாட வேண்டும் என விழைந்தனர்.
போர்புரிவதும், போரில் களிற்று யானைகளைக் கொல்வதும் வீரனுக்குரிய கடமைகளாகக்
கூறப்படுகின்றன. புலவர்களும் இத்தகைய வீரர்களை மற்றைய மனிதர்களிலிருந்து
மிகவும் வேறுபடுத்திப் போற்றியுள்ளனர். இவ்வீரர்களைப் புகழ்ந்து போற்றும்
புலவருலகு, இவர்களின் பிறப்பு, வளர்ப்பு, இறப்புகளை மற்றைய மனிதரின் பிறப்பு,
வளர்ப்பு, இறப்புகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதை உலகமொழிகளிலும் காணலாம்
என்பர் அறிஞர்.
இறப்பும் புகழும்
புறநானூற்று
வீரன் ஒருவன் இறப்பும் புகழ்மிக்கதாகப் புனையப்படுகிறது.
செற்றன்
றாயினும் செயிர்த்தன் றாயினும்
உற்றன் றாயினும் உய்வின்று மாதோ
பாடுநர் போலக் கைதொழுது ஏத்தி
இரந்தன் றாகல் வேண்டும் பொலந்தார்
மண்டமர் கடக்கும் தானைத்
திண்டேர் வளவன் கொண்ட கூற்றே (புறம். 226)
என வீரனது உயிரிழப்பும் அவனது கொடைப் பண்பால்
நேர்ந்தது எனக் கூறுவர். நின்னைப் பகைத்தோ நின்னுடன்
போரிட்டோ நின் உயிரைப் போக்க இயலாத நிலையில்,
பாடும்
புலவர் போலக் கைதொழுது வணங்கி நின் உயிரைக்
கொடைப்பொருளாகக் காலன் பெற்றிருக்க வேண்டும்;
இல்லையெனில் நினக்கு இறப்பு ஏது? என்ற கருத்துப்பட
உரைப்பது காணத்தகும். குடும்பத்தில் பலரும் அடுத்தடுத்து
இறந்துபடவும் (அந்த நிலையிலும்) ஒரு மகனல்லது
இல்லாதவளாகிய ஒருத்தி அம்மகனைப் ‘பாறுமயிர்க்குடுமி
எண்ணெய் நீவி’ வேல் கைக்கொடுத்துப் போர்க்களம்
நோக்கிச்
செல்க என விடுக்கும் பண்பு காண்கிறோம். களிறெறிந்து பெயர்தல்
காளைக்குக் கடன் எனப்படுகின்றது. இவ்வாறு ஒரு சமூகம்
போர்த்தினவு கொண்டிருந்தமை அறியத்தக்கது.
4.2.2 போரும் காரணங்களும்
முற்காலத்தில் போர் தோன்றுவதற்குரிய காரணங்களாகப்
பற்பலவும்
கூறப்படுகின்றன. 1) மறக்குடியினரின் குருதிவழிப் பண்பு
2) மண்ணாசை 3) தன் ஆளுகைப் பரப்பை அகலமாக்கிக்
கொள்ளும் ஆவல் 4) அரசர்க்கரசராகத் திகழ வேண்டும் என்னும்
கருத்து 5) அரசுரிமைக்குத் தடையேற்படுதல் 6) அரசுரிமை
யார்க்கு என்னும் சிக்கல் 7) மானக் குறைபாடு நிகழ மற்றையோர்
நடத்தல் 8) மகள் வேண்டி எழுந்தவரோடு மாறுகொள்ளல் ஆகிய
காரணங்களால் போர் உண்டாகக் கூடும் என்பார் அறிஞர்.
சு.
வித்தியானந்தன்.
போர் தோன்றுதற்குரிய உளவியற் காரணங்களை ஆராய்ந்த
அறிஞர்
இராமச்சந்திர தீட்சிதர் பழைய இந்துச் சமூகத்தில் போர்
தோன்றிய சூழல்களாகப்
பின்வருவனவற்றைக் குறிக்கின்றார்:
- சாதி, சமூகப் பிரிவுகளில் போரைத் தொழிலாகப்
பெற்றவரின்
மனத் தூண்டுதல்.
- போர்த்தொழில் இன்றி அமைதியாக வாழ இயலாத உளநிலை.
- வீரச்செயல்களில் ஈடுபாடு.
- உடற்செருக்கு
- தற்காப்பு எண்ணம்
- வெகுளியும் பொறாமையும்
- பிறரை அடிமைப்படுத்தி வாழ நினைக்கும் மனப்பாங்கு
4.2.3 தலைமையும் தகுதியும்
இத்தகைய
காரணங்களுக்காகப் போரிடுதலை ஆடவர்க்குரிய தகுதியாக மதித்தது அன்றைய காலச்
சமுதாய அமைப்பு. இம்மறவுணர்வே பழங்காலத்தில் தலைமைக்குரிய தகுதியாகக் கருதப்பட்டிருக்கிறது.
வேட்டைத் தொழிலிலும், உணவு சேகரிக்கும் முயற்சியிலும் ஈடுபட்ட இனக்குழு மக்களிடையே
வலிமையும், தறுகண்மையும் மிக்கவன் தலைவன் ஆனான். அறிவாற்றலாலும், நிர்வாகத்
திறனாலும், பெரும்பான்மையோர் விருப்பத்தாலும் தலைமையெய்தும் நாகரிக நெறிமுறைகள்
உருவாகாத காலத்தில் உடல்வலியும் தறுகண்மையுமே தலைமைக்குரிய தகுதிகளாயின.
களம்புகல் ஓம்புமின் தெவ்விர் போரெதிர்ந்து
எம்முளும் உளன்ஒரு பொருநன் வைகல்
எண்தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த காலன் னோனே (புறம்:
87)
(களம்புகல் = போர்க்களம்
வருதல்;
ஓம்புமின் =
தவிருங்கள்;
தெவ்விர் = பகைவர்களே;
பொருநன் = வீரன்;
வைகல்
=
ஒருநாள் ; எண்தேர் = எட்டுத்தேர்கள்; திங்கள்
=
மாதம்;
வலித்து = முயன்று)
என்று தலைவனின் வலிமை மிகுதியை
ஒளவையார் பாடுவார். சங்கச் சமூகம் வீர உணர்வைச் சமூக உறுப்பினர் யாவர்க்கும்
இன்றியமையாத பண்பாகப் போற்றியது. களிறு தரும் புணர்ச்சி பெறும் காதலனும்,
கொல்லேற்றுக் கோடஞ்சாதவனையே (காளையின் கொம்புக்கு அஞ்சாதவன்) கணவனாக வரிக்கும்
ஆய்மகளும்,
யானை
தாக்கினும் அரவுமேற் செலினும்
நீல்நிற விசும்பின் வல்லேறு சிலைப்பினும்
(பெரும்பாண்.
134-135)
(அரவு = பாம்பு;
நீல் = நீலம்;
விசும்பு = வானம்;
ஏறு= இடி;
சிலைப்பினும்
= இடித்தாலும்; சூல்மகள் =
கருவுற்ற பெண்)
அஞ்சாத சூல்மகளும், ‘புலிசேர்ந்து போகிய கல்லளை’
என்று
வீரமகனை ஈன்ற தன் வயிற்றைக் குறிக்கும் தாயும், மார்பில்
புண்பெற்று மடிந்த மகனைக்
களத்திற்குச் சென்று கண்டு, ஈன்ற
பொழுதினும் பெரிது உவந்த முதியவளும், களத்தே தான் பெற்ற
விழுப்புண்ணைக் கிழித்துத் தன் உயிர்முடிக்கும் மற மைந்தரும்
சங்க காலச் சமூக உறுப்பினர் ஆவர். இவ்வகை வீரம்
அக்காலத்தில் ‘சால்பு’ எனப்பட்டது. வீரர் ‘சான்றோர்’
எனப்பட்டனர்.
அறவுணர்வுகளும் சமய எண்ணங்களும் வாழ்க்கை நெறியில்
புகுந்த
பின்பு சால்பு, சான்றோர் முதலிய சொற்கள் அன்பு
முதலாகிய பண்புகளையும், அப்பண்புகள் நிரம்பிய
பெரியோரையும் குறிக்கத் தொடங்கின. இதன் விளைவாகவே சங்க
காலத்தில் ‘சான்றோர்’ என்னும் சொல் வீரர்களையும்
ஆன்றவிந்தடங்கிய (கற்றுணர்ந்து) ஐம்புலன் அடக்கிய
கொள்கையினரையும் குறிக்க வழங்கப்பட்டிருந்தது.
4.2.4 வெற்றியும் புகழும்
மேலே கூறிய பல்வேறு காரணங்கள் குறித்துப் போர்கள்
தோன்றியிருப்பினும்
அனைத்திற்கும் மலோகச் சங்க காலத்து அரச
குடியினர் போரை விரும்பி ஏற்கும் மனநிலையைப்
பெற்றிருந்தனர்
என்பது மட்டுமல்லாமல் போரில் பெறும் வெற்றிப் புகழைப்
போற்றியமையும் போர்கள் பலவற்றிற்கு அடிப்படையாக
அமைந்தது எனலாம். “மறம் வீங்கு பல்புகழ்” என்று
பதிற்றுப்பத்து இப்புகழ்ப் பெருமையைக் காட்டும். போரில்
பெறும் வெற்றியும், அவ்வெற்றியைப் புலவர்கள் பாடுதலால்
பெறும் புகழும் வேந்தரின் போர்வேட்கையை மேலும்
தூண்டியிருக்கின்றன. மண் காரணமாகவோ, பெண் காரணமாகவோ
பிறவற்றிற்காகவோ நிகழும்
போர்கள் அனைத்திற்கும்
இவையெல்லாம் புறத்தே நிகழும் காரணங்களாகத் தோன்றுகின்றன;
எனினும் போர்த்தொழில் புரியாமல் இருக்க இயலாத மனநிலையும்
புலவராற் பாடப்பெறும் புகழ் விருப்பமுமே அடிப்படைக்
காரணங்களாக அமைகின்றன.
4.2.5 வீரமும் ஈகையும்
இடம் சிறிதெனினும், ஊக்கம் துரத்தப் பிறர் நாடுகளின் மீது
படையெடுத்துச் சென்ற அரசர்கள் வென்றபின், பகைநாட்டை
ஒள்ளெரி மடுத்தும் (தீ வைத்தல்)
வெள்வரகு விதைத்தும் (வரகு
முளைத்தால் வேறு எப்பயிரும் பின்னால் விளையாது)
பாழாக்கியிருக்கின்றனர். பகையரசர் பணிவாராயின் திறை பெற்று
அவரிடமே நாட்டைக் கொடுத்துத் திரும்பியிருக்கின்றனர்.
பகைப்புலத்தைத் தமதாக்கி, நாட்டெல்லைகளை விரிவாக்கி,
நிலைபெற அந்நாடுகளை ஆள்வதைக் காண்பது மிக அரிதாகவே
இருக்கின்றது. இமயம்
வரை படையெடுத்துச் சென்ற பண்டைத்
தமிழ் மன்னர்கள் இமயவெற்பில் புலி, வில் பொறிபதித்து
மீண்டனரேயன்றித் தாம் வென்ற பகுதிகளைத் தாமே வைத்துக்
கொள்பவராக இல்லை.
சிறுசிறு நிலப்பரப்பை ஆண்ட குறுநில மன்னர்களைப்
புலவர்கள் போற்றிப்பாடும் ஆற்றுப்படைகளில் நெடிய
நிலப்பரப்பை அவர்கள் ஆள்வதுபோல் தோன்றுமாறு
நானில
(நால்வகை நிலம்) வருணனை பேசப்படும். அதனால் மிகப்பெரிய
நிலப்பரப்பைத் தாம்
ஆளவேண்டும் என்ற எண்ணம் பண்டைத்
தமிழ் வேந்தர்க்கிருந்தது என்பது தெளிவாகின்றது. வையம்
காவலர் (மன்னர்) வழிமொழிந்து போற்றி ஒழுகியதாகவும்,
குமரியொடு வடஇமயத்து ஒருமொழி வைத்து உலகாண்டதாகவும்,
கங்கை, கடாரங்கொண்டதாகவும், தமிழ் மன்னர்கள் வழிவழிக்
கூறிக் கொள்ளுதல் அன்றி, அந்தந்த நாடுகளில் கொடியும்
படையும் நிறுவி, மொழியும் பண்பாடும்
வேரூன்றப் பல்லாண்டுகள்
ஆட்சி செய்திலர். அவ்வாறு செய்திருப்பின் தமிழ் பன்னாட்டு
மொழியாகவும், தமிழர் பண்பாடு உலகவர்
பண்பாடாகவும்
ஆகியிருக்கும். பெரிய நிலப்பரப்பை ஆளவேண்டும் என்னும்
ஆவல் இருந்தும், தாம் கொண்ட நாடுகளில்
அரசு
புரியாமைக்குரிய காரணம் என்ன? பிறர் தோற்ற அளவிலும்,
புலவர்கள் தம் வெற்றியைப் புகழ்ந்த அளவிலும், போர்த்தினவு
தணிந்த அளவிலும் நிறைவடைந்த தமிழனின் பெருமித
உணர்வே பிற நாடுகளைக் கைக்கொள்ளாமைக்கும், தமிழக
எல்லை விரியாமல் போனமைக்கும் காரணமாயின. “ஒடுங்கா
உள்ளத்து ஓம்பா ஈகை” என்பதால்
வீரத்தால் பெற்ற நாடுகளை
ஈகையுணர்வால் பிறர்க்குத் தந்து புகழ் ஈட்டும் விருப்பம்
தமிழ்வேந்தருக்கிருந்தமை
அறியப்படும். ஆகவே தமிழ்வேந்தரின்
மண் ஆசைக்குக் காரணம் நாடுபிடித்து ஆளவேண்டும்
என்பதன்று;
புகழ் விருப்பமே என்பது தெரியவரும்.
4.2.6 மகள் மறுத்தலும் மகட்பாற்காஞ்சியும்
பெண் காரணமாகப் போரெழுந்தது என்று கூறப்படும் மகள்
மறுத்தல் துறைக்குரியனவாகப்
புறநானூற்றில் காணப்பெறும் மூன்று
பாடல்களும் உண்மையில் பெண் காரணமாக எழுந்தனவல்ல.
நொச்சித் திணையோ, மகள் மறுத்தல் துறையோ
தொல்காப்பியத்தில் இல்லை. புறப்பொருள் வெண்பா மாலையின்
இலக்கணப்படி மகள் மறுத்துமொழிதல் (மறுத்தல்) மறவர் கூற்றாக
அமைதல் வேண்டும்.
ஆனால் புறநானூற்றின் மூன்று பாடல்களும்
புலவர் கூற்றாக அமைந்துள்ளன (புறம் 109, 110,
111).
இதேபோல, மகட்பாற்காஞ்சித் துறைக்கு உரியனவாகக்
காணப்பெறும் பத்தொன்பது பாடல்களும், பெருவேந்தர்களைக்
காட்டிலும் சிற்றூர்த் தலைவர்கள் மான உணர்வும் மறப்பண்பும்
மிக்கவர்
எனக் காட்டுவதற்காகப் புலவர்கள் மேற்கொண்ட
இலக்கியப் புனைவு வகையில் தோன்றியவையேயாகும்.
தன்
மதிப்பீடு : வினாக்கள் - I |
1. |
எட்டுத்தொகை நூல்கள் யாவை?
|
|
2. |
பத்துப்பாட்டு நூல்கள் யாவை?
|
|
3. |
‘அகம்’ என்றால்
என்ன? |
|
4. |
புறத்திணை என்றால் என்ன?
|
|
5. |
‘உலகத்தியற்கை’ யாது?
|
|
6. |
போர்க்குரிய காரணங்களாக அறிஞர்
சு. வித்தியானந்தன் கூறுவன யாவை? |
|
|