|
4.4
ஓவியர்களும் ஓவியங்களும் |
|
தமிழ்நாட்டிலும் வடநாட்டிலும்
திறமை வாய்ந்த ஓவியர்கள்
இருந்துள்ளனர். சங்க
காலத்தில் இவர்களின் திறமையை
வியந்து இவர்களைக்
`கண்ணுள் வினைஞர்' என்று
அழைத்துள்ளனர். மதுரைக்
காஞ்சியில் வரும் கண்ணுள்
வினைஞர் என்ற
சொல்லுக்கு, நோக்குகின்றவர்களின்
கண்ணிடத்தே தம் தொழில்
திறனை நிறுத்தும் வல்லமை
படைத்தவர்கள் ஓவியர்கள் என்று
நச்சினார்க்கினியர் என்ற
உரையாசிரியர் விளக்கம்
கூறுகின்றார். தமிழிலக்கியங்களில்
வித்தகர், வித்தக வினைஞர்,
வல்லோன், ஒண்வினை
ஓவியர் என்று பல
பெயர்களில் ஓவியர்கள் சிறப்பித்துக்
கூறப் படுகின்றனர்.
படிப்போரை ஈர்த்து
மகிழ்விக்கும்
காவியப் புலவனைப்
போன்று காண்போரை ஈர்த்து
மகிழ்விக்கும்
ஓவியங்களை ஓவியர்கள்
படைத்தனர்.
இதனால் இவர்களை ஓவியப்
புலவர் என்றும்
இலக்கியங்கள் குறித்துள்ளன. |
|
இந்திய
நாட்டில் ஓவியங்கள்
உள்ள இடங்களில்
அவற்றைப் படைத்த ஓவியனின்
பெயர்கள் காணப்படுவது
அரிதாக உள்ளது. இந்திய
ஓவியன், சிற்பியைப் போன்று
தன் கலைக்குத் தன்னை அர்ப்பணித்தான்.
தன்னை மறைத்து
விட்டு, தெய்வீகத்திற்குத் தன் கலையைப்
படைத்தான். இதன்
காரணமாக இந்தியாவில் இருந்த
பண்டைய கலைஞர்களில்
பெரும்பாலோர் பெயர்கள் மறைந்து
விட்டதாக இந்திய
ஓவியம் என்ற நூலை
எழுதிய க.சிவராம மூர்த்தி
கருதுகின்றார். மேலும் இவர் தனது நூலில்
இலக்கியங்களிலும்
கல்வெட்டுகளிலும் அருகிய
அளவில் காணும் சித்திரக்
காரர்களின் பெயர்களைச் சுட்டிக்
காட்டியுள்ளார். அவற்றில்
காணும் ஓவியங்களின் அரிய
பண்புகளை எடுத்துக்
காட்டியுள்ளார். சிற்ப
நூல்களிலும் ஓவியரின் பண்புகள்
எடுத்துக் கூறப் படுகின்றன. |
|
நாட்டில்
நிலவிய கலைகளின் தன்மைகளையும் அவற்றின்
போக்கினையும் நன்கு அறிந்த
கலைஞர்கள் அக்காலத்தில்
இருந்தனர். ஓவியனது அறையில் வீணை,
சித்திரப் பலகை,
தூரிகைகள் நிறைந்த பெட்டி,
அழகான சித்திரச் சுவடி,
மணம் வீசும் மலர் மாலைகள்
இருக்க வேண்டும் என்று
வாத்சாயனரின் காம
சூத்திரம் தெரிவிக்கிறது.
இதனால்
ஓவியக் கலைஞன் ஒரு சிறந்த
வாழ்க்கையையும் சூழலையும்
கொண்டவனாக விளங்கினான்.
இவர்களில் மட்டமான
கலைஞர்கள் `டிண்டி'
என்று அழைக்கப் பட்டனர்.
பாததாடிதகம் என்னும்
நூல் இவர்களைக் 'குரங்குகள்
போன்றவர்கள்.
சித்திரங்களைப் பாழ்
படுத்துகின்றனர்.
தங்களுடைய தொழிலால் சித்திரத்தை மாசு
படுத்துகிறார்கள்.
தூரிகைகள் கொண்டு
மாளிகையில் வண்ண அழுக்கை
அப்புகிறார்கள்' என்கிறது. |
|
அக்காலத்தில்
நல்ல ஓவியர்களுக்குச் சமூகத்தில்
மிகுந்த
மதிப்பு இருந்தது. பிற
கலைஞர்களோடு ஓவியர்களுக்கும்
அரசன் தனி மரியாதை
அளித்துள்ளான். அரசவை அறிஞர்
குழுவில் ஓவியர்களும் இடம்
பெற்றதாகக் காவிய மீமாம்சை
கூறுகிறது. |