6.2 பஞ்சமரபு

    ஆடல் இலக்கணம் பற்றிக் கூறும் நூல்களுள் பஞ்சமரபும் ஒன்றாகும். சிலப்பதிகார உரையாசிரியரான அடியார்க்கு நல்லார் தம் காலத்தில் இது வழக்கில் இருந்தது என்று குறிப்பிடுகின்றார். இந்நூல், 1975-ஆம் ஆண்டு பதிக்கப்பட்டுள்ளது.

    இது இசை, வாக்கியம், தாளம், நிருத்தம், அவிநயம் ஆகிய ஐந்து பொருள்களின் மரபு கூறுவதால் பஞ்சமரபு என்று அழைக்கப்பட்டுள்ளது. இந்நூல் 241 வெண்பாக்களால் யாக்கப்பட்டுள்ளது.

· நூலமைப்பு

    நூல் தொடக்கத்தில் பாயிரம் இடம் பெற்றுள்ளது. பாயிரம் பகுதியில் காப்பு, செய்யுள் அவையடக்கம், நூற்பெயர்க் காரணம், நூலாசிரியர், நூற்பயன் போன்ற செய்திகள் ஆறு செய்யுட்களால் கூறப்பட்டுள்ளன.

    நூல் இரண்டு பிரிவுகளாக அமைந்துள்ளது. முதல் பிரிவு இசை மரபாக உள்ளது. இசைமரபில் யாழ்மரபு, வங்கியமரபு, கண்டமரபு, நிருத்த மரபு, வகையொழி மரபு என்ற ஐந்து சிறு பிரிவுகள் உள்ளன.

    இரண்டாம் பிரிவு வாச்சிய மரபாகும். இதில் முழவு மரபு, பிண்ட மரபு, எழுத்து மரபு என்ற மூன்று சிறு பிரிவுகள் உள்ளன.

6.2.1 நிருத்த மரபு

    பஞ்ச மரபு நூலின் முதற்பகுதியில் நிருத்த மரபும் கூறப்பட்டிருக்கிறது என்று கண்டோம். இந்த நிருத்த மரபில் நிருத்த வகை மரபு, தாண்டவ மரபு, சதி வரலாறு மரபு, அகமார்க்கப் பொருள், கூத்திலக்கண மரபு என்ற ஐந்து சிறு பிரிவுகள் உள.

· நிருத்த வகை மரபு

    நிருத்தம் என்பதற்கு இசைவழி நிகழும் நடனம் என்கிறது. இது நிருத்த வகை மரபு, தாண்டவமரபு, அகமார்க்கம் பொருள் சதி வரலாறு, அகமார்க்கம் பொருள் தருவரலாறு, கூத்திலக்கண மரபு     என்ற ஐந்து உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது.

    நிருத்த வகை ஏழு. தாண்டவம் முதலான எல்லாக் கூத்திற்குமுரிய பொதுப் பெயராக நிருத்தம் என்ற பெயர் அமையும். திவாகரம், பிங்கலம் முதலான நிகண்டு நூல்களில் நாடகம், நிருத்தம், பரதம் என்ற மூன்றும் கூத்து என்றே அழைக்கப்படுகின்றன. இவ்வகையில் நிருத்தவகை ஏழு. இவை கூத்து என்று பெயரிடப்படுகின்றன. (1) தாண்டவம் (2) நிருத்தம் (3) நாட்டியம் (4) குரவை (5) வரி (6) கோலம் (7) வகை

1) தாண்டவம்

    சிவபிரான் ஆடிய கூத்தினைத் தாண்டவம் என்பர். தாண்டவம் புரியவல்ல தம்பிரான் என்று பெரியபுராணம் இவரைக் குறிப்பிடுகின்றது. தாண்டல் என்பது கூத்தாடலின் பெயராகும்.

2) நிருத்தம்

    ஆங்கிகம், ஆகார்யம், வாசிகம், சாத்விகம் என்ற நான்கு வகை அவிநங்களுடன் நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை, சத்துவம் என்ற சுவைகளுடன் சதி, சுரம் முதலியவற்றுடன் நடிக்கும் கூத்தாகும். இதனை இசைவழிக் கூத்து என்பர்.

3) நாட்டியம்

    உள்ளத்துள் எண்ணிய பொருள்ளை அவிநயமாத்திரத்தால் நடித்துக் காட்டுவது நாட்டியமாகும். இதனை அவிநயக்கூத்து என்பர்.

4) குரவை

    பெண்கள் கைகோத்து ஆடும் கூத்து குரவையாகும்.

5) வரி     உலக நெறிகளை நாடக வழக்கில் காட்டுதல் வரி எனப்படும்.

6) கோலம்

    வேடம் புனைந்து ஆடல் கோலம் எனப்படும்.

7) வகைக்கூத்து

    நின்றாடல், வீழ்ந்தாடல் என பலநிலைக் கூத்தினை வகைக்கூத்து என்பர்.

    இவைபோல் தாண்டவ மரபு, அகமார்க்கப் பொருள், சதி வரலாறு,     தரு வரலாறு, கூத்திலக்கண மரபுகளும் கூறப்பட்டுள்ளன.

6.2.2 அவிநயமரபு

    அவிநயக் கை மரபு, கால் செயல் மரபு என அவிநயமரபு இரண்டு வகைப்படும். இதனைக் கையால் செய்யப்படும் அவிநயம் காலினால் செய்யப்படும் அவிநயம் என்பர். ஆட்டமும் பாட்டும் அவிநயமும் சேர்ந்தது கூத்தாகும். இதில் ஒற்றைக் கைமரபு, இரட்டைக் கை மரபு அங்கக் கிரியை மரபு, கால் தொழில்மரபு, அரங்க இலக்கண மரபு, பிரம்பிலக்கண மரபு என்ற ஆறு உட்பிரிவுகள் உள. அவிநயத்திற்குரிய உறுப்புகளான கரம் (கை), சிரம் (தலை), பாதம், கண் முதலியன உள. ஆனால் பஞ்சமரபு ஆசிரியர் கரம் வகை ஒன்றினையே குறிப்பிடுகின்றார். கரத்தினால் உலகத்தில் உள்ள எல்லாப் பொருள்களையும் அவிநயித்துக் காட்ட முடியும் என்ற கொள்கையுடையவராக விளங்குகிறார்.

    தணிக்கை என்பது ஒற்றைக் கையைக் குறிப்பிடும். இதனைப் பிண்டி என்பர். இரண்டு கைகளால் காட்டப்படும் அவிநயத்தைப் பிணையல் என்பர். இவைகளை ஒற்றைக் கை முத்திரை என்றும், இரட்டைக் கை முத்திரை என்றும் கூறுவர்.

6.2.3 தாள மரபு

    கூத்து, இசை, வாச்சியம் என்ற மூன்றையும் பொருந்தி நின்று அவற்றை ஒரு வரையறைக்குள் கொண்டு செலுத்தும் தன்மையதாகும், தாளம். இசைக் குழுவினர் அனைவரையும் ஒழுங்குபடுத்தும் கருவியாகும். அவற்றுள் மிகுதியும் குறைவும் தோன்றாதபடி பாதுகாக்கும். இதனை வடநூலார் இலயம் என்பர். தாளம் தேசிய தாளம், மார்க்க தாளம் என இரு வகைப்படுத்தும். அனுத்திருதம், திருதம், இலகு, குரு, புலுதம், காகபாதம் என்னும் ஆறு உறுப்புகளால் ஆன தாளத்தை மார்க்க தாளங்கள் என்பர். தேசிய தாளம் பெரும்பாலும் இசையிலும், மார்க்க தாளம் பெரும்பாலும் கூத்திலும் பயில்வன என்பர்.

    இவ்வாறு பஞ்சமரபு என்ற இலக்கண நூல், இசை ஆடலுக்குரிய இலக்கண நூலாகத் திகழ்கிறது. வெண்பாவில் அமைந்துள்ள பாங்கும் வடமொழி சொல் மிகுதியும் பிற்காலத்தது என்று கொள்ள இடம் இருப்பினும் இது மிகப் பழமையான இலக்கண நூலாகத் திகழ்கிறது. இலக்கியத்தினின்று எடுப்பது இலக்கணம் என்ற வகையில் ஆடல் இலக்கிய மரபுகளையெல்லாம் தொகுத்து அளித்த இலக்கண நூலாக விளங்குகிறது.

தன்மதிப்பீடு : வினாக்கள் - I

1.

கூத்தநூல் ஆசிரியர் யார்?

2.

கூத்தநூல்     எத்தனைப்     பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது?

3.

சுவை நூல் கூறும் பொருள் பற்றிக் குறிப்பிடுக.

4.

வேத்தியல், பொதுவியல் பற்றிக் கூறுக. ?

5.

தொகைநூல் கூறும் கருத்து யாது?

6.

பஞ்சமரபு பெயர்க்காரணம் உரைக்க.

[விடை]

7.

நிருத்தம் என்பதற்குப் பஞ்சமரபு கூறும் விளக்கத்தைக் கூறுக.

[விடை]

8.

அவிநயமரபு உரைக்கும் செய்திகள் யாவை?

[விடை]

9.

தாளம் எத்தனை வகைப்படும்?

[விடை]