இலக்கியத்தினின்று இலக்கணம் உருவாகின்றது.
ஆடற்கலையின் பல்வேறு நிலைகளைத் திரட்டி அவற்றை
இலக்கணப் படுத்தி உரைக்க வேண்டும் என்ற நிலையில்
இலக்கண நூற்கள் தோற்றம் பெற்றன. இவை கால வெள்ளத்தில்
அழிந்துவிட்டன. இலக்கியப் படைப்பாளர்களும் உரை
ஆசிரியர்களும் ஆங்காங்கே குறிப்பிட்டுள்ள நிலைகளின்
வாயிலாக இவ்விலக்கண நூல்கள் கண்டறியப்பட்டன.
கூத்த
நூல், பஞ்சமரபு என்ற பண்டைய
ஆடல்
இலக்கணம் உரைக்கும் நூற்கள் பழைய சுவடிகளின் வாயிலாகக்
கண்டறியப்பட்டு வெளியிடப் பட்டன. கூத்துக் கலை பற்றிய
நூலாகக் கூத்த நூலும், பஞ்சமரபின் மூன்று மரபுகள் கூத்தியல்
பற்றியனவாகவும் அமைந்துள்ளன. வடநூலைத் தழுவி மகாபரத
சூடாமணி, அவிநயதர்ப்பணம் என்ற
நூற்களும்
வெளியிடப்பட்டன. இந்நான்கு நூற்களும் ஆடலுக்குரிய
பல்வேறு இலக்கணப் பகுதிகளை உரைக்கின்றன.
சிலப்பதிகாரத்தின் அரங்கேற்று
காதை
ஆடலரங்கேற்றம் பற்றியும், ஆடலரங்கில் நடந்த
ஆடல்
நிகழ்ச்சி பற்றியும், ஆடற்கலையில் பங்குபெறும் கலைஞர்களின்
இலக்கணம் பற்றியும், ஆடற்பயிற்சி முறை, அரங்கில்
ஏறி
ஆடும் முறை, ஆடல் நங்கைக்குத் தரும் சிறப்பு முதலியவை
பற்றியும் உரைக்கிறது. ஒரு வகையில் ஆடலமைதி
பற்றி
உரைக்கும் இலக்கணப் பகுதியாக அமைந்து விளங்குகிறது.
தொன்மை மிகு
ஆடலிலக்கண நூற்களும்,
பிற்காலத்தில் தோன்றிய நூற்களும் ஆடல் பற்றிய பல்வேறு
நுட்பமான செய்திகளைத் தெரிவிப்பதோடு ஆடற் பயிற்சி
பெறுவோர்க்குரிய மிகச் சிறந்த பாட
நூற்களாகவும்
விளங்குகின்றன.
|