உலகச் சமயங்களில் தொன்மைச்
சமயமாகிய சைவ
சமயம் பன்னூறு ஆண்டுகளாக வழக்கில் இருந்துவரும் சமயம்
ஆகும். அச்சமயம் தோன்றிய காலம் தொட்டுப் படிப்படியாகப்
பல்வேறு நிலைகளில் வளர்ந்தது. இத்தகைய வளர்ச்சி நிலைகள்
பக்தி இயக்கம் என்ற முறையில் இப்பாடத்தில் தொகுத்துத் தரப்
பெற்றுள்ளன. சைவ சமயம் உருவ வழிபாட்டுச்
சமயம்
என்பதால் இறைவனுக்குப் பல்வேறு வடிவங்களைக் கொடுத்துப்
பக்தி இயக்கத்தைப் போற்றி வளர்த்தது என்பது, பல்வேறு
தலைப்புகளில் கூறப்பெற்றிருப்பதை அறியலாம்.
பக்தி இயக்கம் சங்க
காலம் தொடங்கி இன்றளவுவரை
எவ்வாறு வளர்ந்தது என்பது அவ்வக்கால
இலக்கியச்
சான்றுகள் மூலம் நிறுவப் பெற்றுள்ளது. உருவ வழிபாட்டைத்
திருக்கோயில்கள் நிலைநாட்டின. திருக்கோயில்களில் வழிபாடுகள்
விழாக்களாக நடைபெற்று மக்களுக்கு மகிழ்ச்சியைத்
தந்தன;
தீமையைப் போக்கின. வழிபாடுகளுக்கும் விழாக்களுக்கும்
தத்துவப் பொருள்கள தரப் பெற்றன. இறைவன் உயிர்களோடு
கலந்திருப்பதால் உயிர்களுக்குச் செய்யும்
தொண்டு
இறைத்தொண்டாகக் கருதப் பெற்றது. தொண்டுகள் மனிதநேய
அடிப்படையில் விளங்கின. இவற்றையெல்லாம் இப்பாடத்தில்
அறிந்து கொண்டோம்.
|