ஆணவம்,
கன்மம், மாயை என்ற மூன்று மலங்களால்
(பாசங்கள்) ஆட்பட்ட உயிர்கள் அம்மலங்களின் சார்பால் பல
பிறப்புகளைப் பெறுகின்றன. பிறப்புகள் தோறும்
தத்தம்
வினைகளுக்கு ஏற்ப (ஊழ்) நுகர்ச்சிப்
பொருள்களைப்
பெறுகின்றன. நுகர்ச்சிப் பொருள்களை
அனுபவிக்கின்ற
பொழுது இன்ப துன்பங்களை அடைகின்றன.
இன்ப
துன்பங்களை அனுபவிக்கின்ற பொழுது
இறையருளைச்
சார்கின்றன. இறையருள் கிடைப்பதற்கு
உயிர்கள்
முயலுகின்றன. அவ்வாறு முயலுகின்ற பொழுது உயிர்களின்
தன்மைக்கு ஏற்ப முயற்சிகள்
நடைபெறுகின்றன.
இம்முயற்சிகளைத்தான் சமயநெறி என்கின்றனர்.
இச்சமய
நெறிகளைச் சைவ சித்தாந்த நூல்களும் திருமுறைகளும்
நான்காக வகுக்கின்றன.
சன்மார்க்கம் சகமார்க்கம் சற்புத்திர
மார்க்கம்
தாதமார்க்கம் மென்றுஞ்சங்
கரனை யடையும்
நன்மார்க்கம் நாலவைதாம் ஞான யோகம்
நற்கிரியா சரியையென
நவிற்றுவதும் செய்வர்
- (சுப. 270)
என்பது சிவஞானசித்தியார்
பாடலாகும். இப்பாடலின்
பொருள்: சைவம் சார்ந்து சிவனை
வழிபடுகிறவர்கள்
சிவனுடைய திருவருளைப் பெறவேண்டுமானால் நால்வகை
நெறிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும். தாதமார்க்கம்
(தாச மார்க்கம்), சற்புத்திர மார்க்கம், சகமார்க்கம்,
சன்மார்க்கம் என்பன சிவபிரானை அடையும் நன்மார்க்கங்கள்
ஆகும். அவை சரியை, கிரியை,
யோகம், ஞானம் என்ற
பெயராலும் வழங்கப் பெறுதல்
உண்டு என்பது
இப்பகுதியினுடைய பொருளாகும். எனவே மார்க்கம்
என்ற
சொல் நெறி அல்லது வழி என்ற பொருளைக் கொண்டு சைவ
சமய நெறிகள் நான்கைக் குறிப்பிடுகின்றது எனலாம்.
இத்தகைய நால்வகை நெறிகளும்
மக்கள் பின்பற்றக்
கூடிய எளிய நெறிமுறைகளே ஆகும். இந்த நெறிமுறைகளைப்
பின்பற்றினால் அடையும் பயன்கள் சாத்திர நூல்களிலும்,
தோத்திர நூல்களிலும் கூறப்பட்டுள்ளன.
அப்பயன்களும்
நான்காகக் கூறப் பெற்றுள்ளன. தாதமார்க்கத்தின்
வழி
நின்றால் இறைவனுடைய உலகத்தைச்
(சாலோகம்)
சென்றடையலாம். சற்புத்திர
மார்க்க நெறி நின்றால்
இறைவனுக்கு அருகில் செல்லும் அருளைப் பெறலாம். இது
சாமீபம் ஆகும். சகமார்க்கத்தின்
நெறி நின்றால் இறைவனின்
உருவ அடையாளங்களைப் பெறலாம். இது
சாரூபம்
எனப்படும். இறுதியான சன்மார்க்க வழி
நின்றால் இறைவனின்
திருவருளை முழுமையாகப் பெறலாம். இதனைச் சாயுச்சியம்
என்பர். வடமொழியில் இந்த சாயுச்சியம்
என்பது பரமுத்தி
என்றும் மற்ற மூன்றும் அபரமுத்தி என்றும் கூறப்படும்.
இவற்றின் விரிவைச் சாத்திரங்களும்,
தோத்திரங்களும்
தெளிவாக விளக்குகின்றன.
4.2.1
தாதமார்க்கம் (தொண்டு நெறி - தாச மார்க்கம்)
தாதமார்க்கத்தைப் பேச்சு நடையில்
தாசமார்க்கம் என்று
சொல்வதுண்டு. தாசானதாசன் என்றால்
தொண்டனுக்குத்
தொண்டன் என்று பொருள்படும். எனவே தாத அல்லது தாச
என்பது தொண்டு என்ற பொருளில் கையாளப் பெறுகிறது.
இறைவனை வழிபடுகின்ற பொழுது உள்ளத்தில் இறையுணர்வு
ஏற்படச் சில செயல்கள் செய்ய வேண்டும்.
அதுவே
வழிபாடாகும். இந்த வழிபாடுகள்தான் இங்கு நெறிமுறைகளாகக்
கூறப் பெறுகின்றன. அந்த அடிப்படையில் சமய வழிபாட்டின்
தொடக்கமாகக் கூறப்படுவது தொண்டு நெறியாகும்.
தொண்டு
என்பது திருக்கோயிலுக்கும், திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள
இறைவனுக்கும், இறைவனை வழிபட்டு ஞானம்
பெற்ற
அடியார்களுக்கும் பணி செய்வதாகும். அதாவது தன்னை
அடியவனாகப் பணி செய்யும் ஆளாகக் கருதிக் கொண்டு
சிவபிரானையும் அவனருள் பெற்ற
அடியாரையும்
தலைமக்களாக எண்ணி அவர்களுக்குத் தொண்டு செய்வதாகும்.
அவ்வாறு தொண்டு செய்யும் பொழுது
என்னென்ன
செய்யலாம் என்பதைச் சாத்திரங்களும், தோத்திரங்களும்
சொல்லுகின்றன. இம்மார்க்கத்தைக் குறிக்கின்ற சரியை என்ற
சொல்லும் தொண்டு என்ற பொருளைத்தான் தரும். அதாவது
சரீரம் என்ற உடம்பினால் செய்யப் பெறும் தொண்டாகும்.
இந்தத் தொண்டுகளைத் திருமுறைகள்
வரையறுத்துக்
காட்டுகின்றன. அப்பரின் கீழ்க்காணும் பாடல்
இதனை
விளக்கும்.
நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா
நித்தலுமெம் பிரானுடைய
கோயில் புக்குப்
புலர்வதன்முன் னலகிட்டு மெழுக்கு மிட்டுப்
பூமாலை புனைந்தேத்திப்
புகழ்ந்து பாடித்
தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச்
சங்கரா சயபோற்றி
போற்றி யென்றும்
அலைபுனல் சேர் செஞ்சடையெம் மாதீயென்றும்
ஆரூரா வென்றென்றே
யலறா நில்லே
- (அப்பர் தேவாரம் -6.31.3)
இப்பாடலைப்
போலவே சிவஞானசித்தியார்
என்ற
சாத்திர நூலும் 271ஆம் பாடலில்
இம்மார்க்கத்தின்
செயல்முறைகளைக் குறிப்பிடுகிறது. அதாவது தொண்டு நெறி
என்பது திருக்கோயில்களில் குப்பைகளைப்
பெருக்கி,
திருக்கோயில் முழுவதும் தண்ணீர் கொண்டு
மெழுகி,
இறைவனுடைய திருவுருவத்தில் அணிவிப்பதற்குப்
பூமாலைகளைக் கட்டி, பூக்கள் பூப்பதற்கு நந்தவனங்கள்
அமைத்து, கோயில்களில் திருவிளக்கு ஏற்றி,
இறைவனை
வாயாரப் போற்றிப் புகழ்வது
ஆகும். மேலும்
சிவனடியார்களைக் கண்டால் தங்களுக்கு ஏதேனும் தொண்டு
செய்ய வேண்டுமா என்று கேட்டு அவர்களின் விருப்பத்தை
நிறைவேற்றுவதும் ஆகும். இந்த நெறியில்
நின்றால்
இறைவனுடைய உலகத்திற்குச் செல்லுகின்ற திருவருளைப்
பெறலாம்.
4.2.2
சற்புத்திர மார்க்கம் (மகன்மை நெறி)
சற்புத்திர
நெறியைக் கிரியாபாதம்
என்று கூறுவர்.
கிரியை என்றால் மந்திரங்கள் வழி இறைவனுக்கு
வழிபாடு
செய்வதாகும். அதாவது இறைவனின் அருவுருவ வடிவமாகிய
சிவலிங்கத்திற்கு அண்மையில் இருந்து மந்திரம்,
கிரியை,
பாவனை என்ற மூன்றினாலும் அகத்திலும்
புறத்திலும்
பலவகைச் செயல்களை முறைப்படி செய்து வழிபடுதல் ஆகும்.
அதாவது முதல் நெறியில் வெறும் பணிகளைச் செய்தவர்கள்
இந்த நெறியில் அபிடேகம் செய்தல்,
மாலை சாற்றுதல்,
தூபதீபம் காட்டுதல் ஆகியவற்றைச் செய்யும்
பொழுது
மந்திரத்தைச் சொல்லிச் செய்ய வேண்டும். முதல்
வழியில்
அகத்திலும் புறத்திலும் மந்திரம் சொல்வது நிகழாது. செயல்
மட்டுமே நிகழும். இந்நெறியில் மந்திரங்களைச் சொல்லுவதும்
ஆகமங்கள் சொல்லுகின்ற சடங்குகளைச் (கிரியை) செய்வதும்,
சடங்குகளைச் செய்யும் பொழுது தன்னை இறைவனுடைய
அன்பராகப் பாவித்துக் கொண்டு செய்வதும்
ஆகும்.
திருக்கோயிலில் இருக்கும் இலிங்க
உருவத்திற்கு
இத்தகைய வழிபாட்டைச் செய்தால் அது
பரார்த்தம்
எனப்படும்.
ஒருவர் தன் பொருட்டாக
ஞான ஆசிரியரிடத்தில்
இருந்து இலிங்க வடிவத்தைப் பெற்று இத்தகைய வழிபாட்டைச்
செய்தால் அதற்கு ஆன்மார்த்தம்
என்று பெயர். இத்தகைய
சமய நெறியைச் செய்தால் இறைவனுக்கு அருகிலிருக்கும்
அருளைப் பெறலாம். இத்தகைய செய்திகளைச் சாத்திரங்களும்
தோத்திரங்களும் சுட்டிக் காட்டுகின்றன.
புத்திரமார்க் கம்புகலின், புதியவிரைப்
போது
புகைஒளிமஞ் சனம்அமுது
முதல்கொண்டு ஐந்து
சுத்திசெய்துஆ சனம்,மூர்த்தி, மூர்த்தி மானாம்
சோதியையும் பாலித்துஆ
வாகித்து, சுத்த
பத்தியினால் அருச்சித்து, பரவிப் போற்றிப்
பரிவினொடும், எரியில்வரு
காரியமும் பண்ணி
நித்தலும், இக்கிரியையினை இயற்று வோர்கள்
நின்மலன்தன் அருகிருப்பர்,
நினையுங்காலே
- (சிவஞான சித்தியார் - சுப. 273)
என்று சிவஞான சித்தியார் குறிப்பிடுகிறது. இதே வழிமுறைகள்
சம்பந்தர் தேவாரத்தில் முதல்
திருமுறை 21ஆவது பதிகத்தின்
4ஆம் பாடலிலும் கூறப்பெற்றுள்ளன.
4.2.3
சகமார்க்கம் (தோழமை நெறி)
இந்நெறி யோகமார்க்கம்
எனவும் கூறப்பெறும்.
யோகம் என்பதற்குப் பொருள் ஒன்றுதல்
என்பதாகும்.
அதாவது உயிரானது இறைவனோடு ஒன்றுதல்
ஆகும்.
அவ்வாறு ஒன்றும்பொழுது மனத்தால் ஒன்றி நிற்பது ஆகும்.
மனம், புத்தி, கண், கை, கால் ஆகியவற்றைப் புறத்தே ஒன்றச்
செய்து அடக்கி அகத்திலே கொண்டு வந்து இறைவனோடு
ஒன்றச் செய்தலாகும். இது எட்டு வகையாகக் கூறப்படுவதும்
உண்டு. அவை இயமம், நியமம்,
ஆசனம், பிராணாயாமம்,
பிரத்தியாகாரம், தாரைணை, தியானம், சமாதி
என்பனவாகும்.
இயமம் |
- |
நூல்களில்
கூறிய தீய ஒழுக்கங்களை
அறவே விலக்குதல். |
நியமம் |
- |
நூல்கள் கூறுவனவற்றைக் கடைப்பிடித்தல். |
ஆசனம் |
- |
உடற்பயிற்சிகளின்
மூலம் ஆசனங்களைக்
கைக் கொள்ளுதல். |
பிராணாயாமம் |
- |
இயற்கையாக
இயங்கும் மூச்சுக் காற்றினை
வசப்படுத்துதல். |
பிரத்தியாகாரம் |
- |
தான்
நினைத்த பொருளின் வடிவாக
மாற்றிக் கொள்ளுதல். |
தாரணை |
- |
மனத்தை அடக்கி ஒருவழியில்
நிறுத்துதல். |
தியானம் |
- |
இறைவனைத்
தன்னுடைய தியான
வடிவினால் ஒளி வடிவினனாக எண்ணுதல். |
சமாதி |
- |
அந்த
எண்ணத்தில் தன்னை மறந்து
இறைவனோடு ஒன்றுதல். |
இத்தகைய வகைகளால் இறைவனை
நோக்கித் தவம்
செய்வதே யோகம் எனப்படும். இத்தகைய
தவத்தால்
இறைவனோடு ஒன்றிவிடுகின்ற காரணத்தால் இறைவனுக்குத்
தோழமையாகின்ற அருள் கிடைக்கின்றது. எனவேதான்
இந்நெறி தோழமை நெறி ஆயிற்று. இந்நெறியை உயிராவணம்
என்று தொடங்கும் நாவுக்கரசர் தேவாரப் பாடலும், தேடுவேன்
தேடுவேன் என்று தொடங்கும் சுந்தரர்
தேவாரப் பாடலும்,
சிவஞான சித்தியாரின் 273ஆம் பாடலும் குறிப்பிடுகின்றன.
இந்த நெறி நின்றால் சிவவடிவாகிய சிவஞானியாகலாம்.
4.2.4
சன்மார்க்கம் (நன்னெறி)
நான்காவது நெறி சன்மார்க்கம்
என்ற நன்னெறியாகும்.
இதை ஞானபாதம்
என்று குறிப்பிடுவர். ஞானம் என்பதற்கு
அறிவு என்பது பொருள். இந்த அறிவு மெய்ப்பொருளை
அறிவதைக் குறிக்கும். முன்னைய மூன்று
நெறிகளும்
ஞானத்தை அடையும் வழி என்றாலும் இந்த
நெறியே
மெய்ப்பொருளாக விளங்கும் இறைவனை முழுமையாக அறியும்
வழியாகும். எனவே இதனைச் சிவஞானம் என்பர்.
சமய
நூல்கள் பலவற்றையும் அறிந்து தெளிந்து பதி, பசு,
பாசம்
என்ற மூன்றினுடைய இலக்கணங்களை அறிதல் வேண்டும்.
இலக்கணங்களை அறிவதோடு தத்துவங்களைப் பற்றிய
ஆய்வுகளைச் செய்து உண்மைப் பொருளை அறிய வேண்டும்.
பல சமய நெறிகளில் செல்லாது சைவ சமயத்தின் வழியில்
சென்று மூலமுதற் பொருளை அறிய வேண்டும். இத்தகைய
ஞானம் கைவரப் பெற்றால் அதுவே நன்னெறியாகும்.
இந்த
நெறியைத்தான் சைவ சித்தாந்த சாத்திரங்கள்
வலியுறுத்தி
எழில்ஞான பூசை
என்று குறிப்பிடுகின்றன. குறிப்பிட்டுச்
சொன்னால் இந்த நெறி ஞானநூல்களின் வழி இறைவனாகிய
மெய்ப்பொருளை அறிவதாகும். இந்நெறியினுடைய பயன்
சாயுச்சியமாகிய இறைவனுடைய திருவருளைப் பெறுவதாகும்.
இந்நெறியின் சிறப்பைச் சிவஞான சித்தியார் கீழ்க்கண்டவாறு
குறிப்பிடுகிறது.
ஞானநூல் தனை ஓதல், ஓது வித்தல்,
நல்பொருளைக் கேட்பித்தல்,
தான்கேட்டல், நன்றா
ஈனம்இலாப் பொருள் அதனைச் சிந்தித்தல் ஐந்தும்
இறைவன்அடி அடைவிக்கும்
எழில்ஞான பூசை
(சித். சுப - 275)
இவ்வாறு சைவ சமய நெறிகளாக நால்வகை
நெறிகளைச்
சிவாகமங்கள் குறிப்பிடுகின்றன. சிவாகமங்கள் வழி சாத்திர
நூல்களும், தோத்திர நூல்களாம்
திருமுறைகளும்
குறிப்பிடுகின்றன.
|