தமிழ் மொழியின் வளர்ச்சியில் அயராது பாடுபட்ட
சமணர்களே தமிழ் மொழியில் முதன் முதலாக இலக்கண
நூல்களையும், காப்பிய நூல்களையும், நிகண்டு நூல்களையும்
உருவாக்கினர். “தமிழின் இலக்கண அழகிற்குப் பலர் காரணர்
எனினும் சமணரே தலையாய காரணியர். அவர்தம் பணிகள்
தமிழிலக்கணத்தைப் பல கோணங்களில், கோலங்களில்
வலிமைப்படுத்தின. எழுத்து, சொல், அகப்பொருள், புறப்பொருள்,
யாப்பு, பாட்டியல் என இலக்கண மூலப் படைப்பில் அவை
விரிந்தன. ஆக, சமணரின் இலக்கணப் பணிகள் இலக்கணம்
படைப்பது, உரை வரைவது, நிகண்டுகள் எழுதுவது என்று
மும்முனைகளில் அமைந்தன. ஓரிடத்தை நோக்கி, மூன்று
முனைகளிலிருந்து ஒளி பாய்ச்சப்படும்போது, அவ்விடம்
ஒளிமயம் ஆவது போல், இலக்கணத் தமிழுலகம், சமணரின்
மும்முனை ஒளிப்பாய்ச்சலால், ஒளிமயம் ஆயிற்று” என்று
க.ப.அறவாணன் அவர்கள் சமணர்களின் தமிழ்ப் பணியை வியந்து
போற்றுகிறார்.
● இலக்கண நூல்கள்
சமணர்கள்தாம் முதன்முதலில் இலக்கண நூல்களையும்
நிகண்டு நூல்களையும் உருவாக்கினர். அவர்கள் இயற்றிய
இலக்கண மற்றும் நிகண்டு நூல்களுள் சில வருமாறு:
- அவிநயனார் இயற்றிய அவிநயம், அவிநயனார் யாப்பு,
அவிநயனார் புறனடை, அவிநயனார் புறத்திணைப்
படலம்.
- இந்திரகாளியார் இயற்றிய இந்திர காளியம்.
- அமுதசாகரர் இயற்றிய யாப்பருங்கலம், யாப்பருங்கலக்
காரிகை.
- குணவீரபண்டிதர் இயற்றிய நேமிநாதம், வெண்பாப்
பாட்டியல்.
- பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல்.
- நாற்கவிராச நம்பி இயற்றிய அகப்பொருள் விளக்கம்.
- மண்டல புருடர் இயற்றிய சூடாமணி நிகண்டு.
- திவாகரர் இயற்றிய திவாகர நிகண்டு.
- பிங்கலர் இயற்றிய பிங்கல நிகண்டு
- தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியமும் சமண சமய
நூல் என்று கூறுவர்.
● காப்பியங்கள்
நிகண்டு நூல்களை முதன் முதலில் சமணர்கள் இயற்றியது
போலவே காப்பியங்களையும் அச்சமயத்தார் முதன் முதலில்
எழுதினர். ஐம்பெருங் காப்பியங்களில் சிலப்பதிகாரம்,
வளையாபதி, சீவகசிந்தாமணி ஆகிய மூன்று
காப்பியங்களையும் எழுதியவர்கள் சமணர்களே. அதுபோல
ஐஞ்சிறு காப்பியங்களாகிய சூளாமணி, நீலகேசி, யசோதர
காவியம், நாக குமார காவியம், உதயண குமார காவியம்
ஆகியவற்றை எழுதியவர்களும் அவர்களே. உதயணன் கதை
என்று கூறப்படும் பெருங்கதையும் கொங்குவேளிர் என்ற
சமணர் இயற்றியதே ஆகும். ஐம்பெருங்காப்பியங்களில்
மணிமேகலையும் குண்டலகேசியும் பௌத்த நூல்கள்.
● கேசி நூல்கள்
சமணர், பௌத்தர்களிடையே சமயப் பூசல்கள் ஏற்பட்டன.
அதனால் அவர்கள் தம்முள் சொற்போர் புரிந்தனர். ஒருவரை
ஒருவர் எதிர்த்தும் கண்டித்தும் நூல்கள் இயற்றினர். இவை
கேசி நூல்கள் என்று அழைக்கப்படுகின்றன. நீலகேசி,
பிங்கலகேசி, அஞ்சனகேசி என்பவை அவ்வகையில் எழுந்த
நூல்கள் ஆகும். இவற்றுள் நீலகேசி மட்டுமே கிடைத்துள்ளது.
மற்ற இரண்டும் கிடைக்கவில்லை. அவை இரண்டும் சமணர்கள்
இயற்றியன என்றும், பௌத்தர்கள் இயற்றியன என்றும்
வேறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.
● கீழ்க்கணக்கு நூல்கள்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் நான்கு நூல்கள்
சமணர்கள் இயற்றியவை. அவை:
- சமண முனிவர்கள் இயற்றிய நாலடியார்.
- முன்றுறையரையனார் இயற்றிய பழமொழி.
- காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்.
- கணிமேதாவியார் இயற்றிய ஏலாதி
- திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் சமண நூல் என்ற
கருத்தும் உண்டு.
● புராணங்கள்
சமணர்கள் ஸ்ரீ புராணம், மேருமந்தர புராணம், சாந்தி
புராணம், ஜைன ராமாயணம், நாரத சரிதை ஆகியவற்றை
எழுதி உள்ளனர்.
● வேறு நூல்கள்
ஜீவ சம்போதனை, அருங்கலச் செப்பு,
அறநெறிச்சாரம், நரி விருத்தம், எலி விருத்தம், கிளி
விருத்தம், திருநூற்றந்தாதி, திருமேற்றிசையந்தாதி,
திருக்கலம்பகம், கலிங்கத்துப்பரணி, கொங்குமண்டல சதகம்,
நெல்லணி இலக்கம், சிறுகுழி, பெருங்குழி, கணக்கதிகாரம்
ஆகிய நூல்களும் சமணர்கள் எழுதியவை.
|