பொதுவாக இரண்டுவகையான முடிவுகள் நாடகத்தில் ஏற்பட
இயலும். நாடகம் கொண்டுள்ள அவ்வகை முடிவின் மூலம்
இருவகை நாடக வகைப்படுத்தலை நாம் அறிந்து கொள்ளலாம்.
அவை
1. துன்பமான முடிவு (துன்பியல்)
2. இன்பமான முடிவு (இன்பியல்) |
துன்பியல் என்னும் வகைப்பாடே நாடகத்தின் தன்மையை
வெளிப்படுத்தி நிற்கிறதல்லவா? நாடகத்தின் நோக்கும், போக்கும்
துன்ப நிகழ்வுகள் நிறைந்து அமையும். காட்சியமைப்பும்,
கதையமைப்பும் அழுத்தம் நிறைந்தும், சிக்கலாகவும்
ஆக்கப்பட்டிருக்கும். நாடகத்தில் ஏற்படும் முரண்பாடுகள் துன்ப
முடிவுக்கு இட்டுச் செல்வதாய் அமையும்.
இரண்டு வேகமான கூறுகள் மோதும் போது இவ்வகைத்
துன்ப முடிவு ஏற்பட ஏதுவாகிறது. மேலை நாடுகளில் துன்பியல்
நாடகங்கள் பார்வையாளரிடையே பெரும் வரவேற்பைப்
பெற்றுள்ளன. தமிழிலும் துன்பியல் நாடகங்கள் (tragedy)
படைக்கப்பட்டுள்ளன.
எடுத்துக்காட்டாக, பம்மல் சம்பந்த முதலியாரின் ‘இரண்டு
நண்பர்கள்' நாடகத்தினைக் குறிப்பிடலாம். நாடகத்தின்
தலைமைப் பாத்திரமான சுந்தராதித்தியனின் தவறான கணிப்புகள்
துன்ப முடிவுக்கு இட்டுச் செல்லும் விதம் இந்நாடகத்தில்
சிறப்பாகக் கையாளப் பட்டுள்ளதைக் காணலாம். இந்நாடகத்தின்
தலைமைப் பெண்பாத்திரமான ‘சத்தியவதி' என்பாரின் தியாகம்
இந்நாடகத்தில் குறிப்பிடத்தக்க காட்சிப் படைப்பாகும்.
‘இரண்டு நண்பர்கள்' நாடகத்தின் இப்பகுதி மூலம்
துன்பியலின் பண்பினை உணர்ந்து கொள்ளலாம்.
‘இரண்டு நண்பர்கள்' இடம்: பொற்றூண் மண்டபம். காலம் - நடுநிசி
(சத்தியவதி கொலையாளிகளால் கொல்லப்பட்டுப் படுக்கை மீது
கிடக்கிறாள். சுந்தராதித்யன் தலைவிரிகோலமாய் அதிவேகத்துடன்
அறைக்குள் பிரவேசிக்கிறான்)
சுந். : |
சத்தியவதி! சத்தியவதி! (தீபத்தையேற்றி
சத்தியவதியின் உடலைப்பார்த்து, ஸ்தம்பித்தவனாய்
அப்படியே கீழே விழுகிறான். பிறகு சற்றுப்பொறுத்து
எழுந்திருக்கிறான்.) |
|
நான்தான் கொன்றேன்! நான்தான் கொன்றேன்
சத்தியவதியை! சந்தேகமில்லை என் பொருட்டே
இறந்தாள்! நான் தான் கொன்றேன்! என்ன, என்
புத்தி சுவாதீனமில்லாதிருக்கிறதே! என் தலையில்
ஏதோ பளுவாயாயிருக்கிறதே! ஏன் என்னால் அழ
முடியவில்லை... |
(இரண்டு நண்பர்கள் : காட்சி :3) |
மேலே சுட்டப்பெற்றுள்ள பகுதியில் ‘சுந்தராதித்யன்'
தன்னிலையில் தனக்குத்தானே பேசிப் புலம்பும் நிலை
துன்பியலின் குறிப்பிடத்தக்க வெளிப்பாட்டு உத்தியாகக்
கருதப்படுகிறது.
ஒரு நாடகம் மகிழ்ச்சியான முடிவினைக் கொண்டு விளங்கும்
நிலையில் அதை இன்பியல் (comedy) நாடகம் எனலாம்.
இயல்பான கதை அமைப்புடன், மகிழ்வு தரத்தக்க
காட்சிகளுடன் இஃது ஆக்கப்பட்டிருக்கும், நாடகத்தன்மைக்காகப்
பல்வேறு திருப்பங்களுடன் கதைப்போக்கு அமைந்து வரினும்,
முடிவு இன்பமாகவே அமைந்து நிற்கும். பொதுவாக நகைச்சுவை
உணர்வு ததும்பும் நாடகங்கள் இன்பியல் நாடகங்களாகவே
விளங்குவதுண்டு.
தமிழின் பெரும்பாலான நாடகங்கள் இன்பியல் நாடகங்களே
எனலாம். பார்வையாளரை மகிழ்ச்சிப்படுத்தி அவர்கள் விரும்பும்
வண்ணம் இன்பியல் முடிவுக்கு நாடகத்தை இட்டுச்செல்லுதல்
இயல்பான ஒன்று தானே!
|