1.1 நாடகம்


முதலில், நாடகம் என்றால் என்ன என்றும், என்ன
பொருளில் இச்சொல் கையாளப்படுகிறது என்றும் பார்ப்போம்.
 

  • சொல் விளக்கம்

  •  
    நாடகம் என்னும் சொல்லை நாடு + அகம் என இரு
    சொல்லாக்கிப் பார்ப்போம்.

    “நாடு” என்பது நாட்டில் வாழ்கின்ற மக்களைக் குறிக்கும்.
    “அகம்” என்பது மக்களின் உள்ளங்களைக் குறிக்கும்.

    “மக்கள் உள்ளத்தை மகிழ்விக்கும் ஒரு கலை வடிவம்
    நாடகம்” என்னும் அளவில் இச்சொல் விளக்கம் பெறுகிறது.

    நாடு + அகம் என்பதை மாற்றி அகம்+நாடு என வைத்துப்
    பார்த்தாலும், ‘அகத்தை நாடு’, ‘உள்ளத்தை நாடு’ என்னும்
    பொருள் தருவதை உணரலாம்.

    நாடகம் என்னும் சொல்லைப் பகுத்துப் பார்த்து ஆராய்ச்சி
    செய்த நாடகக் கலைஞர் ஒளவை தி.க. சண்முகம்,
    பின்வருமாறு விளக்கம் தருகிறார்.

    ‘நாடு + அகம்= நாடகம். நாட்டை அகத்தில் கொண்டது
    நாடகம். அதாவது, நாட்டின் சென்ற காலத்தையும் நிகழ்
    காலத்தையும் வருங்காலத்தையும் தன் அகத்தே காட்டுவதால்
    நாடு-அகம்-நாடகம் என்று பெயர் பெற்றிருக்கிறது. நாடு-அகம்.
    அதாவது, அகம்-நாடு; உன்னுள் நோக்கு; உன்னை உணர்;
    அகத்தை நாடு என்றெல்லாம் பலவிதமாக அறிஞர்கள்
    இதற்குப் பொருள் கூறுவார்கள்’ என்கிறார் தி.க. சண்முகம்.
     
    1.1.1 நாடகமும் விளையாட்டும்

    இந்த நாடகம், விளையாட்டு உணர்ச்சியில் இருந்து
    தோன்றியது என்பது பலர் கருத்து. இந்த விளையாட்டு
    உணர்ச்சி, கலையுணர்ச்சி மிக்கவர்களிடம் இருந்து ஒரு
    கலையாக மாறியது.

    மனிதர்கள் விளையாடிய விளையாட்டு மரப்பொம்மைகளின்
    விளையாட்டாகவும்,    தோல்பாவை     விளையாட்டாகவும்,
    நிழற்பாவை விளையாட்டாகவும் மாறியது. இவற்றை
    ஒவ்வொன்றாகச் சுருங்கிய நிலையில் அறிவோம்.

  • பொம்மலாட்டம்

  • பொம்மலாட்டம்
            
        மரத்தால் ஆகிய பொம்மைகளைக் கையில் பிடித்து
    இப்படியும் அப்படியும் நகர்த்துவர்; எதிரெதிராக இரு
    பொம்மைகளை மோதச் செய்வர்; இரண்டையும் அன்புடன்
    நெருங்கச் செய்வர்; ஆரவாரத்துடன் குதிக்கச் செய்வர்.
    இவ்வாறு பல வகைகளில் பொம்மை விளையாட்டை முதலில்
    காட்டினார்கள். இது பொம்மலாட்டம் அல்லது மரப்பாவைக்
    கூத்து
    எனப் பெயர் பெற்றது.

    மரத்தால் செய்த பொம்மைக்குப் பதிலாக மண்ணாலும்
    பழைய துணிகளாலும் பொம்மை செய்து செயற்கையாகக்
    கைகால்களைப் பொருத்தினார்கள். இப்பொம்மைகளின் கை
    கால்கள், கழுத்து முதலிய உறுப்புகள் அசையும் விதமாகக்
    கயிறுகளைக் கட்டி அக்கயிறுகளை இயக்கும் வேலையைக்
    கலைஞர்கள் தம் கைகளில் வைத்துக் கொண்டனர். தம்
    கைகளின் அசைவிலேயே பொம்மைகளின் அசைவுகளைக்
    காட்டினார்கள். இந்த     விளையாட்டு பொம்மலாட்டம்
    எனப்பட்டது.

  • தோல்பாவைக் கூத்து

  • தோல்பாவைக் கூத்து

         மரப்பொம்மை, மண் பொம்மை செய்ததைப் போலவே
    விலங்குகளின் தோல்களைக் கொண்டும் உருவங்களை
    வடித்தனர். மென்மையான தோல்களின் மூலம் மனிதர்கள்,
    மிருகங்கள், பறவைகள் போன்ற உருவங்களைச் செய்தனர்.
    இப்பொம்மைகள் வளைந்து நெளிந்து விடாமல் இருப்பதற்காக
    இவற்றை மூங்கில் தப்பை (சிறு குச்சிப்பட்டைகள்) களில்
    தைத்தனர். இந்தத் தோல் பாவைகளைக் கொண்டு
    விளையாட்டுக் காட்டினார்கள். இது தோல்பாவைக் கூத்து
    எனப்பட்டது.

  • நிழற்பாவைக் கூத்து


  •     தோல் பாவைகளைப் பார்வையாளர்களுக்கு நேரடியாகக்
    காட்டாமல் வெள்ளைத் திரைச் சீலைகளுக்குப் பின்னால்,
    ஒளிபொருந்திய விளக்குகளை வைத்து அவ்வொளியில்
    தோல்பாவைகளைக் காட்டினார்கள்.இவ்வாறு காட்டும் போது,
    தோல் பாவைகளின் பிம்பம் தான் பார்வையாளர்களுக்குத்
    தெரியுமே தவிர நேரடியாகத் தோல் பாவைகளைப் பார்க்க
    முடியாது. இப்படிக் காட்டும் முறை தோல் பாவைக் கூத்து
    எனப்பட்டது.

    தோல் பாவைக் கூத்து, நிழற்பாவைக் கூத்து ஆகியவற்றில்
    இராமாயணம், பாரதம் ஆகியவற்றில் இருந்து எடுக்கப்பட்ட
    கதை நிகழ்ச்சிகளும் சேர்த்துக் கூறப்பட்டன. இக்கதை
    நிகழ்ச்சிகள் பெருகப் பெருக நாடகத் தன்மையும் பெருகிக்
    கொண்டே வந்தது.

    நிழற்பாவைக் கூத்து

    1.1.2 நாடக முன்னோட்டம்

    மரப்பாவைக் கூத்து, பொம்மலாட்டம், தோல்பாவைக்
    கூத்து, நிழற்பாவைக் கூத்து ஆகியவை தாம் நாடக
    உருவாக்கத்துக்கு முன்னோடிக் கலைகளாக விளங்கின.

    பொம்மை மனிதன் இருந்த இடத்தில் உண்மை மனிதன்
    வந்தான்; பொம்மைகளுக்குச் செய்த ஒப்பனை உண்மை
    மனிதனுக்குச் செய்யப் பட்டது. பொம்மை விளையாட்டு நாடக
    விளையாட்டாக மாறியது.

    இப்போதும் கூட நாடகத்தைத் தமிழ் நாட்டில் பல
    இடங்களில் விளையாட்டு என்று சொல்லும் பழக்கம்
    இருக்கிறது. ஆங்கிலத்திலும் கூட நாடகத்துக்குப் ‘பிளே’ (Play)
    என்னும் இன்னொரு சொல் உண்டு.

    விளையாட்டு நிலையில் தோன்றிய நாடகம் அறிவும்
    உணர்ச்சியும் சார்ந்த கலையாக மாறியது. அப்போது
    நாடகத்துக்கென்று     கதை     தேவைப்பட்டது. இந்திய
    நாடகங்களிலும், தமிழ் நாடகங்களிலும் தொடக்கத்தில் நாடகக்
    கதைகள் இராமாயணத்திலிருந்தும் மகாபாரதத்திலிருந்தும்
    தேர்ந்தெடுக்கப்பட்டன.     காலம்     செல்லச்     செல்ல
    நாடகத்துக்கெனத் தனிக்கதைகள் உருவாயின.

        நாடகக் கதைகள் இன்பியலாகவும் துன்பியலாகவும்
    வடிவமைக்கப்பட்டன. இந்திய நாடகங்கள் அனைத்தும்
    இன்பியல் முடிவினைக் கொண்டவையாகவே விளங்கின.
    மேனாட்டு நாடகங்கள் பெரும்பாலும் துன்பியல் முடிவைக்
    கொண்டவையாக இருந்தன. இந்திய நாடக அமைப்பில்
    துன்பியல் முடிவு வந்தால்கூட அதை இன்பியலாக மாற்றி
    அமைக்கும் பண்பு காணப்பட்டது. எதுவும் சுபமாகவே முடிய
    வேண்டும் என்னும் இந்திய மனோபாவமே அதற்குக்
    காரணமாகும்.

    1) நாடகம் என்பதை இரண்டு சொல்லாகப்
    பிரித்துக் காட்டுக.

    (விடை)
    2) நாடகம் என்பதற்கு, தி.க.சண்முகம் கூறும்
    விளக்கம் யாது?

    (விடை)
    3) பொம்மலாட்டத்தின் இன்னொரு பெயர்
    என்ன?

    (விடை)
    4) தோல்பாவை வளையாமல் இருப்பதற்கு
    எதைக்    கொண்டு தோல்பாவையைத்
    தைத்தார்கள்?
    (விடை)
    5) தொடக்கக்     காலத்தில்     தமிழ்
    நாடகங்களுக்குரிய கதைப் பொருளை
    எவற்றிலிருந்து எடுத்தார்கள்?

    (விடை)