1.2 செய்திகளின் பின்புலம்  
     ஒவ்வொரு     செய்தியும்     ஒவ்வொரு வகையான 
 பின்புலத்திலேயே தோன்றுகின்றது.   
 1.2.1 புதுமை (Novelty)  
  
     எவையெல்லாம் இதுவரை நடைபெறாமல் இப்பொழுது புதுமையாக     நடக்கின்றனவோ     அவை     எல்லாம் செய்திகளாகின்றன. ஏனெனில் புதுமைக்கு மக்களைக் கவரும் ஆற்றல் அதிகம். 
 
      கால் ஊனம் உற்ற பெண் அதிக நேரம் நாட்டியம் ஆடினால் அது செய்தி. மனிதன் பாம்புகேளாடும், தேள்கேளாடும் தங்கி     இருந்தால் புதுமை; அது செய்தியாகிறது. மனிதன் தனது உடல் முழுதும் தேனீக்களைத் தங்கவைத்துக் கொண்டால் அது செய்தியாகிறது.  
    பழவியாபாரி தனது கடையில் வாடிக்கையாளர்கள் பார்வையில் படும்படி பழங்களை மூன்று அல்லது நான்கு வரிசைகளில் அடுக்கி வைத்திருந்தால் அது வழக்கமான செயல். மாறாக மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக, அடுக்கு மாடி வீடுபோல் பழங்களை மிக உயரமாகப் பல அடுக்குகளில் அடுக்கி வைத்திருப்பது புதுமையாகப் படுகிறது. அது செய்தியாகப் படத்துடன் வெளிவருகிறது. இது போன்ற புதுமைகள்தாம் செய்தியாக மாறுகின்றன.  
1.2.2 குற்றம் (crime) தொடர்பானவை  
    நாட்டில் நடைபெறும் குற்றங்களைப் பற்றிய செய்திகள் சூடான செய்திகளாகும் (Hot news). கொள்ளை, கொலை, கற்பழிப்பு, திருட்டு போன்ற செய்திகளை அறிந்து கொள்ளப் பலரும்     விரும்புகின்றனர்     ஆதலால் பத்திரிகைகள் அவற்றிற்கு     முக்கியத்துவம் அளித்துச் செய்திகளாக வெளியிடுகின்றன. இச்செய்திகள் இடம் பெறாத நாளிதழே இல்லையெனலாம்.  
    தமிழ்நாட்டில், மதுரையில் டாக்டர் ஒருவர், தனது மனைவி குழந்தை உட்படக் குடும்பத்தினர் அனைவரையும் கொலை செய்த செய்தி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அவரைக் கைது செய்து நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் தற்கொலை செய்து கொண்ட செய்தி மக்களின் கவனத்தை ஈர்த்த செய்தியாகும். இதே போல் பல செய்திகள் தொடர் கதைபோல் பத்திரிகைகளில் வருவதை அறியலாம்.  
• பால் உணர்வு (Sex) தொடர்பானவை  
    ஆண்-பெண் பால்     உணர்வு தொடர்பானவற்றில் சமுதாயத்திற்கு எப்பொழுதும் ஈடுபாடு அதிகம் இருப்பது அனைவரும்     அறிந்ததே.     மிகவும் மரியாதைக்குரிய இதழ்களும் பால் உணர்வுச் செய்திகளுக்குச் சிறப்பிடம் கொடுக்கின்றன.      செய்தித்தாள்கள் இச்செய்திகளை, முக்கியத்துவம் கருதி வெளியிடுவதில் இருந்து இதன் தன்மையை 
அறிந்து கொள்ளலாம். கற்பழிப்பதும், அதனை 
மறைக்க அப்பெண்ணைக் கொலை செய்வதும் போன்ற 
நிகழ்ச்சிகளைப் பத்திரிகைகள் வெளியிட்டு மக்கள் கவனத்தை 
ஈர்க்கின்றன.  
• மோதல் (Conflict)  
    இரண்டு மனிதர்கேளா, இரண்டு அணிகேளா, இரண்டு நாடுகேளா மோதிக் கொள்ளும் பொழுது செய்தி பிறக்கின்றது. மோதலையும் அதன் விளைவுகளையும் அறிந்து கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். கணவன் மனைவி இடையே சண்டை, மண விலக்கு,     தொழிலாளர் போராட்டம், மாணவர்கள் விடுதியில் மோதிக் கொள்வது. மாணவர்களுக்கும் பேருந்து நடத்துநருக்கும் இடையே நடைபெறும் மோதல், சண்டை, அதனால் பேருந்துகள் நிறுத்தம், போக்குவரத்துத் தடை, மக்கள் அவதி போன்ற நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நிகழ்கின்றன.     இவைகள் எல்லாம்     செய்திகளாக வெளிவருகின்றன.  
• சமயம் (Religion)  
    மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான் என்ற கவிஞர் கண்ணதாசன் கூற்றுப்படி மக்கள் மதத்தில் அதிக அக்கறை காட்டத் தொடங்கி விட்டார்கள். அதனால் செய்தித்தாள்கள்     சமயச்     சார்புடைய செய்திகளைக் கவனமாக வெளியிடுகின்றன. சமய இதழ்கள் தனியாக வார, மாத இதழ்களாக வெளிவருகின்றன. தமிழகத்தில் பல மடங்கள் தோன்றிச் சமயத் தொண்டும் இலக்கியத் தொண்டும் ஆற்றி வருகின்றன. சமயத் தலைவர்களைப் பற்றிய     செய்திகளை அறிய     மக்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.  
    நாட்டின்     மதத்தலைவர்களைப் பெருந்தலைவர்கள் சந்தித்துப் பேசுவதும் ஆசி பெறுவதும் வழக்கமாக நடைபெறுகின்றன.     இந்தச்     செய்திகளுக்கு     அதிக முக்கியத்துவம் கொடுத்து, ஒளிப்படத்துடன் முதல் பக்கச் செய்தியாகச்      செய்தித்தாள்கள்     வெளியிடுவது குறிப்பிடத் தக்கது.  
    எனவே     செய்திகள்     மலர்வதற்கு     மதங்களின் செயல்பாடுகள் பின்னணியாக இருக்கின்றன என்பதில் ஐயம் இல்லை.  
1.2.3 அழிவும் (Disaster) துயரமும் (Tragedy)  
    நாட்டில் ஏதாவது ஓர் இடத்தில் அழிவு ஏற்படுமானால் அது செய்தித்தாளில் படத்துடன் செய்தியாக இடம் பெறுகின்றது. கப்பல் மூழ்குதல், விமானம் விழுந்து நொறுங்குவது, இரயில் கவிழ்தல், நிலநடுக்கம் (பூகம்பம்), தீ விபத்து, புயல், வெள்ளம் போன்றவை மக்களின் இதயத்தைத்     தொடுகின்றன. துயரமான நிகழ்ச்சிகள் நடைபெறுகிற நேரத்தில் அவை மக்களிடம் அதிக இரக்கத்தைப் பெறுகின்றன. இந்தியாவில் குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், தமிழ்நாட்டில் திருச்சியில் உள்ள திருவரங்கத்தில் திருமண மண்டபத்தில் 2004 ஜனவரி மாதம் ஏற்பட்ட தீ விபத்தில், மணமகன் உட்பட 67 பேர்களுக்கு மேல் மாண்ட துயரமான நிகழ்ச்சி, காந்தியடிகள், கென்னடி, இந்திரா காந்தி     ஆகியோர்     சுட்டுக் கொல்லப்பட்டவை உலகையே துயரத்தில் ஆழ்த்திய செய்திகள். பெருந்தலைவர் காமராசர், புரட்சித்தலைவர் எம்.ஜி். இராமச்சந்திரன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 
ஆகியோர் மறைவு நாட்டையே துயரத்தில் ஆழ்த்தியது 
எல்லாரும் அறிந்த செய்தியாகும். 
 1.2.4 பொழுதுபோக்கு (Entertainment)  
    பொழுதுபோக்குச் சாதனங்களைப் பற்றி அறியும் ஆர்வம்     மக்களிடம்     இருக்கின்றது.     அவற்றைச்  செய்தித்தாள்கள் தீர்த்து வைக்கின்றன. திரைப்படங்கள், நாடகங்கள், வானொலி, தொலைக்காட்சி, விளையாட்டு போன்றவை     பொழுது போக்குவதற்கு     மக்களுக்கு உதவுகின்றன. பத்திரிகைகளில் வெளிவரும் திரைப்படச் செய்திகள், தொலைக்காட்சிச் செய்திகள், விளையாட்டுச் செய்திகள் மக்களுக்குப் பொழுது போக்குவதற்கு உதவி செய்கின்றன.     திரைப்படச் செய்திகள் இடம் பெறாத  செய்தித்தாள்களே இல்லை     எனலாம்.     திரைப்பட நட்சத்திரங்கள் மீதும்,     விளையாட்டுப்     போட்டிகள் குறிப்பாக கிரிக்கெட் போட்டிகளின் மீதும், கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் மீதும் மக்கள் வைத்திருக்கும் குன்றாத ஆர்வம் பொழுது போக்கிற்குப் பயன்படுகின்றது.  
    மேலும் இசைக் கச்சேரிகள், நாட்டிய நிகழ்ச்சிகள், இலக்கியச் சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள், சமயச் சொற்பொழிவுகள்     ஆகியவற்றிலும் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இவைகளும் பொழுது போக்க அவர்களுக்கு உதவுகின்றன.     இதழ்கள்     இவைகள்     தொடர்பான செய்திகளைத் தெளிவாக வெளியிடுகின்றன.  
1.2.5 பிற பின்புலங்கள்  
    மேற்குறிப்பிட்டவற்றைத்     தவிர, மனிதத் தாக்கம் (Personal Impact), நகைச்சுவை,     மர்மம், அறிவியல், புகழ்பெற்ற மக்கள், தட்பவெப்ப நிலை ஆகியவையும் செய்தி உருவாவதற்கு உரிய பின்புலங்களாக அமைகின்றன.  
• மனிதத் தாக்கம் 
    சராசரி மனிதனுக்குச் சுவையூட்டுவதும், அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கக் கூடியதும் செய்தியாகப் பிறக்கிறது. நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய்     போன்றவற்றின்     அளவுகளிலும், விலைகளிலும் மாற்றம் ஏற்படும் பொழுது மனிதனைப் பாதிக்கும் நிகழ்ச்சியாக மாறி அது செய்தியாகிறது. வேலை நிறுத்தத்தின்போது பேருந்துகள்     ஓடாமல்     மக்கள் அவதிப்படுவதும் செய்தியாக இடம் பெறுகிறது.  
• நகைச்சுவை  
    தமிழில்     பழமையான     இலக்கண      நூலாகிய தொல்காப்பியத்தின்     ஆசிரியர்     மெய்ப்பாட்டியலில் மெய்ப்பாடுகள் பற்றிக் கூறும்பொழுது 'நகையே' என்று நகைச்சுவையை     முதலாகக் குறிப்பிடுகிறார். மக்கள் நகைச்சுவையைப் பெரிதும் விரும்புகின்றனர். அவர்களின் நகைச்சுவை உணர்வுக்குத்     தீனியாக     நகைச்சுவைச் செய்திகளைப்     பத்திரிகைகள்     வெளியிடுகின்றன. நாடாளு மன்றம், சட்ட மன்றம் போன்ற முக்கிய இடங்களில் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகும் வகையில் ஒருவர் நடந்துகொண்டால், அதனைச் செய்தியாக வெளியிடுகின்றன. சட்ட மன்றத்தில் விவாதம் நடைபெறுகிற பொழுது, பகலில் குறட்டைவிட்டுத்     தூங்குவது போன்ற நிகழ்ச்சிகளை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.  
• மர்மம் (Mystery)  
    நாட்டில் புரிந்து கொள்ள முடியாத மர்மமான நிகழ்வுகள் எங்கு நடந்தாலும் அவை செய்தி மதிப்பினைப் பெறுகின்றன. ஓரிடத்தில் கத்திக் குத்துக் காயங்களுடன் ஓர் உடல் கிடந்தால் அதனைப் பற்றி அறிய எல்லாரும் ஆர்வம் காட்டுவார்கள். அந்த உடல் யாருடையது? எப்படி இது நடந்தது? போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் எழும். விடை கிடைக்கிற பொழுது சுவையான செய்தியாக மலரும்.  
    மர்மமான நிகழ்ச்சி பற்றிய செய்திகள் துப்பறியும் கதை போல     இருப்பதால் மக்களிடையே செல்வாக்குடன் விளங்குகின்றன.     அதனால்     சில     பத்திரிகைகள் இச்செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றன.  • அறிவியல் (science)  
    அறிவியலால் இன்று உலகம் சுருங்கிவிட்டது என்று கூறலாம். அறிவியல் விந்தைகளும், சாதனைகளும் தினமும் நடைபெறுகின்றன. அவை செய்திகளாக வருகின்றன. மக்கள் அறிவியல் செய்திகளைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். முதன்முதலில் விண்ணில் உலகைச் சுற்றி வந்த விண்வெளி வீரர்களைப் பற்றி அறிந்து கொள்ள மக்கள் காட்டிய ஆர்வம் எல்லாரும் அறிந்த செய்தியாகும். புதிய கண்டுபிடிப்புகளும்,     கண்டுபிடித்த அறிவியல் அறிஞர்களின் விவரங்களும் செய்தியில் இடம் பெறுகின்றன. நோபல் பரிசு பெற்ற அறிவியல் அறிஞர்களை உலக மக்கள் அனைவரும் அறிந்து பாராட்டிப் புகழாரம் சூட்டுகின்றனர். எனவே அறிவியல் தொடர்பான புதுமைகள் செய்திகளாக மலர்கின்றன. அறிவியல் செய்திகளை மட்டும் வெளியிடும் அறிவியல் இதழ்கள், செய்தித்தாள்கள் நாட்டில் இருப்பது நமது     நாட்டின்     அறிவியல்     முன்னேற்றத்தைக் காட்டுவதாகும்.  
 • புகழ்பெற்ற மக்கள் (Famous People)  
    சமுதாயம்,     சமயம்,     அரசியல்,     விளையாட்டு, அறிவியல், திரைப்படம், மருத்துவம், இலக்கியம் போன்ற துறைகளில் புகழ் வாய்ந்த மனிதர்களின் அனைத்து விவரங்களும்     செய்திகளாக வருகின்றன. கிரிக்கெட் விளையாட்டில் சாதனை படைத்த புகழ்பெற்ற டெண்டு்ல்கர் பற்றிய செய்திகள் வந்ததை அனைவரும் அறிவர். 
  
• தட்பவெப்ப நிலை (Weather)  
     அதிக மழை,     புயல்,     அதிகமான     வெயில் போன்றவை     மக்களைப்     பாதிக்கின்றன. மனிதனின் வாழ்க்கை     இயற்கைக்குத் தகுந்தபடி அமைந்துள்ளது. பருவ மழை தவறுமானால் நாட்டில் வேளாண்மைத் தொழில் பாதிக்கப்படுகிறது. கடுமையான வெப்பம் மனிதனைப் பெரிதும் பாதிக்கிறது. சிலர் வெயிலின் கொடுமைக்குப் பலியாவதைப் பார்க்கிறோம்.     இவ்வாறு மனிதனைப் பாதிக்கும் தட்பவெப்ப நிலையினைப் பத்திரிகைகள் கவனித்துச் செய்தியாக அளிக்கின்றன.  
    இங்கிலாந்து     போன்ற     நாடுகளில்     மாலைப் பொழுதை     மிகவும்     விலைமதிப்பு உடையதாகக் கருதுவார்களாம்.     அப்படிப்பட்ட     மாலைப் பொழுது இயற்கைச் சீற்றத்தால் சேதம் ஏற்பட்டு வீணாகிவிடாமல் இருக்க வேண்டிக் கொள்வார்களாம். அதனால் அன்றைய வானிலை அறிக்கையை     முன்கூட்டியே     அறிந்து கொள்ளத் துடிப்பார்கள் என்று செய்திகள் கூறுகின்றன. சில நேரங்களில் முக்கிய விளையாட்டின் முடிவைத் தீர்மானிக்கும் நடுவராக மழை  அமைந்த நிகழ்ச்சிகள் செய்தியாக வந்துள்ளன.  
    மக்களைப் பெரிதும் பாதிக்கும் இயற்கைச் சீற்றங்கள் தொடர்பான செய்திகளை முன்கூட்டியே தெரிவித்து மக்களைக் காப்பதில்      செய்தித்தாள்கள் கண்ணும் கருத்துமாக உள்ளன.  
     மேலும், உள்ளூர் நடவடிக்கைகள், மனித ஆர்வம், உடல் நலம், உணவுப் பொருள், முதலியவையும் செய்திகளைப் பிறப்பிக்கின்றன. 
 
 
 
 
 
 | 
   தன் மதிப்பீடு : வினாக்கள் - I   | 
  
 
 | 1. | 
 
  செய்திக்குச் சொல்லப்படும் மாதிரி விளக்கம் யாது?  | 
 விடை | 
  
 
 | 2. | 
 
  செய்தியின் ஆற்றலைப் பாடியுள்ள கவிஞர் யார்? 
  | 
 விடை | 
  
 
 | 3. | 
 
  
பாரதிதாசன் பத்திரிகையை எதற்கு ஒப்பிடுகிறார்?  
  | 
 விடை | 
  
 
 | 4. | 
 NEWS என்ற சொல்லின் விளக்கம் என்ன?   | 
 விடை | 
  
 
 | 5. | 
 செய்தி என்பது எது? - என்று வரையறை செய்யும் இதழியல் அறிஞர் யார்? | 
 விடை | 
  
   | 
  
  
 |