தமிழ்நாட்டில் பூக்கும் பூக்களுள் முக்கியமானதாகக் கருதப்படுவது குறிஞ்சிப்பூ. இது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும். குறிஞ்சிச் செடிகள் புதர்வகையைச் சேர்ந்தவை. இவை, தமிழ்நாட்டில் கொடைக்கானல், நீலகிரி ஆகிய பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகின்றன. அப்பகுதியில் வாழும் மக்கள் இந்தப் பூக்கள் பூக்கும் காலத்தை வசந்த காலமாகக் கருதுகின்றனர். குறிஞ்சி மலர்கள் பெரும்பாலும் நீல நிறத்திலும் கருநீல நிறத்திலும் இருக்கும். இவை மணி போன்ற வடிவம் கொண்டவை. ஆகஸ்டு மாதத்தில் பூக்கத் தொடங்கும் இம்மலர்கள், டிசம்பர் வரை பூத்துக்குலுங்கும் தன்மை உடையவை.