இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 25
25.4 தெரிந்து கொள்வோம்

இரட்டைக்கிளவி

“இரட்டைக்கிளவி போல் இணைந்தே வாழுங்கள் பிரித்தால் பொருளில்லை…” - கவிஞர் சுரதா
குழந்தை கலகல எனச் சிரித்தது.
மரம் மடமட என முறிந்தது.
ஓடையில் நீர் சலசல என ஓடியது.
வைர மோதிரம் பளபள என மின்னியது.

இரட்டைக்கிளவி என்பது, ஒரே சொல் இரண்டு முறை சேர்ந்து வரும். இவற்றைப் பிரிக்க முடியாது. பிரித்தால் பொருள் தராது. ஒலிக்குறிப்புகளாகவே சேர்ந்து வரும்.

இரட்டைக்கிளவி

கடகட கணகண கருகரு கமகம
கிடுகிடு கிறுகிறு கீச்கீச் குளுகுளு
சடசட சரசர சிடுசிடு தடதட
நறநற படபட பரபர பொலபொல
மடமட மளமள வளவள வெளுவெளு

அடுக்குத்தொடர்

ஒரு சொல் இரண்டு முறையும் அதற்கு மேலும் அடுக்கி வந்தால் அதனை அடுக்குத்தொடர் என்போம். சொல்லைப் பிரித்தால் பொருள் தரும் துல்லியமாகச் சொல்லவும் உணர்வுகளை வெளிப்படுத்தவும் இவை அடுக்கி வரும்.

காட்டில் மான்கள் துள்ளித்துள்ளி ஓடின.
அம்மா வாழை இலையில் சுடச்சுட உணவு பரிமாறினாள்.
பறவைகள் கூட்டம்கூட்டமாகப் பறந்தன.
பூங்காவில் வண்ணவண்ணப் பூக்கள் பூத்திருந்தன.
மரத்தில் தொங்கிய குரங்குளைக் கண்ட சிறுவர்கள் குரங்கு! குரங்கு! என்று கத்தினர்.