இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 28
28.3 பாடி மகிழ்வோம்

பாட்டுப் பாடுவேன்

இனிக்கும் பாட்டுப் பாடுவேன் – காலை
எழுச்சிப் பாட்டுப் பாடுவேன்
கனி பிழிந்த சாற்றைப் போலக்
காதில் இனிக்கப் பாடுவேன்

குயிலைப் போலப் பாடுவேன் – சின்னக்
குருவி போலப் பாடுவேன்
அயலில் ஓடும் அருவி போல
ஆற்றைப் போலப் பாடுவேன்

வண்டு போலப் பாடுவேன் – தேன்
வண்டு போலப் பாடுவேன்
உண்டு உறங்கிக் கண்விழித்த
உடன் எழுந்து பாடுவேன்

தந்தை வாழ்த்திப் பாடுவேன் – ஈன்ற
தாயை வாழ்த்திப் பாடுவேன்
எந்த நாளும் தமிழை வாழ்த்தி
இனிக்க இனிக்கப் பாடுவேன்

- அழ. வள்ளியப்பா