இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 30
30.2 படிப்போம்

மனிதம் போற்றும் மரியா

2015இல் ஐரோப்பா ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. அதில் ஈட்டி எறிதல் போட்டியில் மரியா மாக்டலேனா ஆண்ட்ரெசிக் என்பவர் தங்கப்பதக்கம் வென்றார். 2016 ரியோ ஒலிம்பிக்கில் 2 செ.மீட்டர் வித்தியாசத்தில் பதக்கத்தைத் தவறவிட்டார். 2017இல் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. வலியால் வருந்தினார். 2018இல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப்பின் நோயிலிருந்து விடுபட்டார்.

கனவுகள் விரியும் கண்களுடன் 2020இல் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் களத்துள் நுழைந்தார். சிங்கம் போல் கம்பீரமாய் ஈட்டியை எடுத்தார். எத்தனை தடைகள் வந்தாலும் தகர்த்தெறிந்தார். மனஉறுதியுடன் ஆற்றல் முழுவதையும் திரட்டினார். அதிக வேகத்துடன் ஈட்டி எறிந்தார்.

ஈட்டி 64.61 மீட்டர் தூரம் சென்றது; இலக்கை எட்டியது; இரண்டாம் இடத்தை அடைந்தது; வெள்ளிப்பதக்கம் கைகளில் தவழ்ந்தது.

வெற்றிப்பதக்கம் சில வாரங்களே வீட்டை அலங்கரித்தது. பயணம் முடித்துத் திரும்பினார் மரியா. முகநூலைப் பார்வையிட்டார். “இதயக் குறைபாடு உடைய எட்டுமாதக் குழந்தை மிலோசெக் மலிசா, தெற்குப் போலந்தைச் சேர்ந்தவர். அவரின் இதய அறுவைச் சிகிச்சைக்கு நிதி உதவி தேவை” என்ற வாசகத்தைப் படித்தார்.

இச்செய்தி ஈட்டிபோல் மரியாவின் இதயத்தைத் துளைத்தது. இளகிய இதயம் கருணையால் மலர்ந்தது. சற்றும் யோசிக்கவில்லை. அக்குழந்தையின் பெற்றோரிடம் பேசி விவரம் கேட்டறிந்தார்.

குழந்தையின் அறுவைச் சிகிச்சைக்கு ஐரோப்பிய மருத்துவமனைகள் மறுத்தன. அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழக மருத்துவமனை ஆதரவு தெரிவித்தது. அறுவைச் சிகிச்சைக்கான செலவு 3 கோடியாகும் என்றனர். பெற்றோர் பாதியளவு நிதி திரட்டினர்.

மரியா ஆண்ட்ரெசிக் தாம் பார்த்தறியாத அக்குழந்தைக்காக மனமிரங்கினார். தன் வாழ்நாள் இலக்கான முதல் ஒலிம்பிக் பதக்கத்தை அக்குழந்தையின் இதய அறுவைச் சிகிச்சைக்காக ஏலம்விட முடிவு செய்தார். அறிவிப்பை முகநூலில் பதிவிட்டார்.

போலந்து கன்வீனியன்ஸ் ஸ்டோர் சங்கிலி என்ற அமைப்பு 93 இலட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. அத்தொகையைச் சிகிச்சைக்குக் கொடுத்து உதவினார். இதை அறிந்த செய்தியாளர் இது உங்கள் கனவல்லவா ? எனக் கேட்டனர்.

இந்த வெற்றிக்கனவு எனக்கு மகிழ்ச்சிதான். வெள்ளிப்பதக்கம் அலமாரியை அலங்கரிப்பதைவிட உயிரைக் காப்பதே சிறப்பு. கனவைவிட உயிர் காப்பது மதிப்பும் மகிழ்ச்சியும் தருமே! என் வெற்றியை, மகிழ்ச்சியை இதன் மூலம் சிறு குழந்தைக்குக் கடத்த விரும்புகிறேன் என்றார் மரியா.

மனிதம் போற்றும் மரியாவின் மனிதநேயத்தைப் போற்றியது அந்த நிறுவனம். ஏலத்தில் எடுத்த பதக்கத்தைத் திரும்ப அவரிடமே தக்க வைக்குமாறு கேட்டுக்கொண்டது.

மனிதநேயத்தின் முன் எதுவும் பெரிதல்ல என்று தம் வெற்றியைத் தாரை வார்த்தார் மரியா. மனிதநேயமே மகத்தான வெற்றி என்பதைத் தம் செயலால் உலகறியச் செய்தார்.

மரியாவின் மனிதநேயம் என்றும் மரிக்காது. மனிதநேயம் போற்றுவோம் மாண்புடன் வாழ்வோம்.

பொருள் அறிவோம்

1. அலங்கரித்தது - அழகுபடுத்தியது
2. சிகிச்சை - மருத்துவம்
3. வித்தியாசம் - வேறுபாடு
4. தகர்த்தெறிந்தார் - உடைத்தெறிந்தார்
5. கருணை - இரக்கம்
6. விவரம் - செய்தி

விடை காண்போம்

டோக்கியோ

மரியா மாக்டலேனா ஆண்ட்ரெசிக்

வெள்ளி பதக்கம்

மரியா, குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்காக வெள்ளிப் பதக்கத்தை ஏலம் விட்டார்.

கனவைவிட உயிரைக் காப்பதே சிறப்பு.