உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 11
11.2 படிப்போம்

பழந்தமிழர் வாணிகம்

வாணிகம் என்பது, ஒரு பொருளை வாங்குவதும் விற்பதும் ஆகும். பழந்தமிழர், இச்செயலைப் ‘பண்டமாற்று’ என்று குறிப்பிட்டனர். பண்டம் என்பது பொருள். மாற்று என்பது மாற்றுதல். முல்லை நிலத்தில் வாழ்ந்த மக்கள், பால் முதலான பொருள்களைக் கொடுத்து அதற்கு மாற்றாகத் தானியங்களைப் பெற்றனர் என்னும் செய்தி, சங்கப்பாடல் ஒன்றில் (குறு.221) இடம்பெற்றுள்ளது.

காலம் செல்லச் செல்ல, பண்டமாற்று முறைக்கு மாற்றாகப் பொருள்களை விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டது. இவ்வாறு பொருள்களை வாங்குவதிலும் விற்பதிலும் நாணயங்கள் பயன்படுத்தப்பட்டன. பொருள்களை விற்பனை செய்யும் வணிகரும் வாங்கும் நுகர்வோரும் ஒருவரையொருவர் ஏமாற்றுவதில்லை. இதிலிருந்து, பழந்தமிழர் வாணிகத்தில் அறத்தைப் பின்பற்றினர் என்பதை அறிந்துகொள்ளலாம்.

வாணிகத்தில் உள்நாட்டு வாணிகம். வெளிநாட்டு வாணிகம் என இருவகை உண்டு. வெளிநாட்டிலிருந்து சில பொருள்கள் வருவிக்கப்படும். இஃத இறக்குமதியாகும், பட்டு, கண்ணாடி போன்ற பொருள்கள் பிற நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. அதேபோன்று, தம் நாட்டிலிருந்து வெளிநாட்டுக்குச் சில பொருள்கள் அனுப்பப்படும். இஃது ஏற்றுமதியாகும், மிளகு, ஏலக்காய், சந்தனம், முத்து, பவளம் முதலிய பொருள்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

பண்டைத்தமிழர்கள் தரைவழியாகவும் கடல்வழியாகவும் வாணிகம் செய்தனர். இத்தாலி, கிரேக்கம், பர்மா, மலேசியா முதலான நாடுகளோடு அவர்கள் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். தமிழகத்தில் நடைபெற்ற அகழாய்வுச் சான்றுகள் வாயிலாகக் கிரேக்க, ரோமானிய நாணயங்கள் கிடைத்துள்ளன. இவை, வெளிநாட்டுடன் தமிழர்கள் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதை உறுதிசெய்கின்றன.

தமிழர்கள் வெளிநாட்டவருக்கு வாணிகம் மேற்கொண்டதால், அந்நாட்டுச் சொற்கள் பலவும் தமிழில் கலந்தன. அதுபோல் தமிழ்ச்சொற்கள் வெளிநாட்டினர்பேசும் மொழிகளில் கலந்தன. ‘அரிசி’ என்னும் தமிழ்ச்சொல் கிரேக்கம், இலத்தீன் மொழிகளில் கலந்தது. இஃது ‘ஒரைசா’ என்றழைக்கப்படுகிறது. இதுவே ஆங்கிலத்தில் Rice என்றானது.

கடல்வழி வாணிகம் எளிதாக நடைபெறும் வகையில், துறைமுகங்கள் அமைக்கப்பட்டன. தொண்டி, முசிறி, கொற்கை என்பவை துறைமுகங்கள் ஆகும். ஒவ்வொரு துறைமுகத்திலும் ஒரு கலங்கரை விளக்கம் கட்டப்பட்டது. இது, கப்பல்களுக்கு வழிகாட்டியாகச் செயல்பட்டது. துறைமுகங்களில் கப்பல்களை நங்கூரமிட்டு நிறுத்துவர்; இக்காட்சி, யானைகளைத் தூணில் கட்டி வைத்திருந்ததைப் போல் இருந்தது எனச் சங்கப்பாடல் (பட்டினப்பாலை) ஒன்று கூறுகிறது.

பொருள் அறிவோம்

1. பண்டமாற்று - பொருளை மாற்றுதல்
2. வணிகர் - பொருளை விற்பவர்
3. நுகர்வோர் - பொருள் வாங்குபவர்
4. அகழாய்வு - நிலத்தைத் தோண்டி ஆராய்தல்
5. நங்கூரம் - கப்பலை நிறுத்துவதற்குப் பயன்படும் கருவி

விடை காண்போம்

வாணிகம் என்பது ஒரு பொருளை வாங்குவதும் விற்பதும் ஆகும்.

முல்லை நிலத்தில் வாழ்ந்த மக்கள், பால் முதலான பொருள்களைக் கொடுத்து அதற்கு மாற்றாகத் தானியங்களைப் பெற்றனர்.

வெளிநாட்டிலிருந்து சில பொருள்கள் வருவிக்கப்படும். இஃது இறக்குமதியாகும். நம் நாட்டிலிருந்து வெளிநாட்டுக்குச் சில பொருள்கள் அனுப்பப்படும். இஃது ஏற்றுமதியாகும்.

தமிழர்கள் வெளிநாட்டவருடன் வாணிகம் மேற்கொண்டதால், அந்நாட்டுச் சொற்கள் பலவும் தமிழில் கலந்தன. அதுபோல் தமிழ்ச்சொற்கள் வெளிநாட்டினர் பேசும் மொழிகளில் கலந்தன.

கலங்கரை விளக்கம் கப்பல்களுக்கு வழிகாட்டியாகச் செயல்பட்டது.