உகரம்
(முதல் பருவம்)
| அகிலன் | : | ஐயா வணக்கம். |
| ஆசான் | : | வாங்க தம்பி. . .வணக்கம். |
| அகிலன் | : | ஐயா! என் பெயர் அகிலன். சிறந்த சிலம்பாட்டக் கலைஞரான உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. எங்கள் பள்ளி ஆண்டுவிழா மலருக்காக நான் உங்களை நேர்காணல் செய்ய வந்துள்ளேன். |
| ஆசான் | : | அப்படியா... ! மிக்க மகிழ்ச்சி! |
| அகிலன் | : | ஐயா, சிலம்பாட்டம் பற்றி விளக்கிக் கூற முடியுமா? |
| ஆசான் | : | தம்பி ! சிலம்பாட்டம், தமிழக நாட்டுப்புற மக்களின் வீர விளையாட்டு. சிறந்த தற்காப்புக் கலையும்கூட… |
| அகிலன் | : | அப்படியா, ஐயா? இந்தச் சிலம்பாட்டம் எப்படித் தோன்றியது? |
| ஆசான் | : | தொடக்கத்திலே கொடிய விலங்குகளிடமிருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளக் கையில் கம்பு வைத்திருந்தனர். கம்பை ஓய்வு நேரங்களில் சுழற்றிப் பார்த்தனர். அதுவே, சிலம்பாட்டக் கலையின் தோற்றம் என்று கூறலாம். அக்காலத்தில் சிலம்பம் சிறந்த போர்க்கலையாகவும் விளங்கியது. |
| அகிலன் | : | ஓ ! இதனை ஏன் சிலம்பாட்டம் என்று கூறுகிறோம்? |
| ஆசான் | : | ‘சிலம்பு’ என்பதற்கு ‘ஒலித்தல்’ என்று பொருள். கம்பை மாற்றி மாற்றிச் சுழற்றி அடிப்பதால் ஓசை வரும். அதனால், இதைச் சிலம்பம், சிலம்பாட்டம் என்று சொல்லுவார்கள். |
| அகிலன் | : | அப்படியா ! எந்தக் கம்பைச் சிலம்பாட்டத்திற்குப் பயன்படுத்த வேண்டும் |
| ஆசான் | : | இதற்கு, மூங்கில் இனத்தைச் சேர்ந்த சிறுவாரைக் கம்பைப் பயன்படுத்த , இதற்கு விளையாடுவோரின் நெற்றி உயரத்திற்கு இருக்க வேண்டும். உயரம் அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கக் கூடாது |
| அகிலன் | : | அப்போ வேறு கம்பைப் பயன்படுத்தக் கூடாதா, ஐயா? |
| ஆசான் | : | சிலர் பிரம்பைப் பயன்படுத்துகின்றனர் தம்பி. ஆனால், அது வளையும் தன்மையுடையது. எதிரிகளைச் சரியாகக் குறிவைக்க முடியாது. மேலும், அடிதாங்கும்போது நார் நாராகப் பிரிந்தவிடும். |
| அகிலன் | : | ஓ.... அப்படியெனில் மூங்கில் கம்புதான் ஏற்றது. சிலம்பாட்டத்துக்கு வேறு பெயர்கள் உண்டா? |
| ஆசான் | : | ம்ம்... இருக்கு தம்பி. கம்பு சுழற்றுதல், சிலம்பம் ஆடுதல், சிலம்பம், சிலம்பொலி ஆட்டம், சிலம்ப விளையாட்டு, தடியடி என்றெல்லாம் வேறு பெயர்கள் சொல்வதும் உண்டு. |
| அகிலன் | : | ஐயா, சிலம்பாட்டத்தை எப்படிக் கற்றுக்கொள்ள வேண்டும்? எத்தனை நாளில் கற்றுக்கொள்ளலாம்? |
| ஆசான் | : | இதை முறையாகக் கற்கவேண்டும் தம்பி. குறைந்தது, 6 மாதமாவது தொடர் பயிற்சி வேண்டும் |
| அகிலன் | : | ஐயா! சிலம்பம் கற்றுக்கொள்வதால் என்னென்ன பயன்கள் அடைகிறோம்? |
| ஆசான் | : | சிலம்பம் தற்காப்புக்கலை என்பதால், அதனைக் கற்றால், முழு உடல் வலிமையுடன் மன வலிமையும் பெற்றுப் பாதுகாப்புடன் வாழலாம். |
| அகிலன் | : | சிறப்பு. சிலம்பாட்டம் எங்கெல்லாம் கற்றுக் கொடுக்கப்படுகிறது? |
| ஆசான் | : | இந்தியாவில், தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் சிலம்பம் கற்றுக் கொடுக்கப்படுகிறது. மேலும், இலங்கை, மலேசியா, பிரான்சு, கனடா முதலிய நாடுகளிலும் சிலம்பத்தைக் கற்றுக் கொடுக்கின்றனர். தமிழ்நாடு அரசு சிலம்பாட்டத்தைப் பள்ளி விளையாட்டாக ஏற்றுக்கொண்டுள்ளது. மேலும் வேலைவாய்ப்பில் தமிழ்நாடு அரசின் 3% இடஒதுக்கீடு பெறும் விளையாட்டுகளுள் சிலம்பமும் ஒன்று. |
| அகிலன் | : | மிகச்சிறப்பு. உங்களை நேர்காணல் செய்தது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. சிலம்பம் கற்றுக்கொள்ள எனக்கும் விருப்பமாக உள்ளது. |
| ஆசான் | : | நல்லது தம்பி. மிக்க மகிழ்ச்சி. |
| 1. | ஆசான் | - | ஆசிரியர் | |
| 2. | தற்காப்பு | - | தன்னைத்தானே பாதுகாத்தல் | |
| 3. | நேர்காணல் | - | கேள்விகளைக் கேட்டுப் பதில்களைப் பெறும் ஓர் உரையாடல் | |
| 4. | மூங்கில் | - | புல் வகைகளுள் ஒன்று | |
| 5. | பயிற்சி | - | தெரியாத ஒன்றைக் கற்றுக்கொள்ளத் தொடர்ந்து பழகுதல் |
அகிலன் சிலம்பு ஆசான் சின்னத்தம்பியை நேர்காணல் செய்தான்.
சிலம்பாட்டத்திற்கு ஏற்ற கம்பு மூங்கில் இனத்தைச் சேர்ந்த சிறுவாரைக் கம்பு.
தொடக்கக் காலத்தில் கொடிய விலங்குகளிடமிருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள கையில் கம்பு வைத்திருந்தனர். கம்பை ஓய்வு நேரங்களில் சுழற்றிப் பார்த்தனர். அதுவே, சிலம்பாட்டக் கலையின் தோற்றம் என்று கூறலாம்.
இந்தியாவில், தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் சிலம்பம் கற்றுக் கொடுக்கப்படுகிறது. உலக அளவில் இலங்கை, மலேசியா, பிரான்சு, கனடா முதலிய நாடுகளிலும் சிலம்பம் கற்றுக் கொடுக்கப்படுகிறது.
சிலம்பம் கற்றுக்கொள்வதால் முழு உடல் வலிமையுடன் மன வலிமையும் பெற்றுப் பாதுகாப்புடன் வாழலாம்.