ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 4
4.2 படிப்போம்

வேற்றுமையில் ஒற்றுமை

செப்டம்பர் – 14 உலகப் பண்பாட்டு ஒற்றுமை நாள், இந்நாளில், அமெரிக்காவிலுள்ள ‘வின்னர்ஸ் அகாடமி’ என்னும் பள்ளியில் கண்காட்சி நடைபெறுகிறது. கண்காட்சியின் முகப்பில், ‘ஒற்றுமை கொள், உலகை வெல்’ என்னும் தொடர் காணப்படுகிறது.

இனியன் : செல்வா, கண்காட்சியின் தலைப்பைப் பார்த்தாயா?
செல்வன் : ஆம், இனியா, அருமையான தலைப்பு. இது, சிறப்புமிக்க கண்காட்சி என்று நினைக்கின்றேன்.
இனியன் : அதோ பார், ‘ஆடை அணிகலன்கள்’ என்னும் தலைப்பில் ஓர் அரங்கம். வா, அங்கே போகலாம்.
செல்வன் : அகன்ற திரையில் காணொலிக் காட்சி உள்ளது. வா, பார்க்கலாம்.

(ஆஸ்திரேலியத் தலைநகர் கான்பெராவில் நடைபெற்ற தேசிய பன்முக பண்பாட்டு விழாவின் காணொலிக் காட்சிகள் திரையிடப்படுகிறது.)

இனியன் : செல்வா, காணொலிக் காட்சிகள் மிகவும் அருமை.
செல்வன் : ஆமாம். நைஜீரிய மக்களின் ஆடை, அணிகலன்கள் அழகாக இருந்தன. அவர்கள் ஆடிய நடனமும் மிகவும் அருமை.
இனியன் : மக்கள் பிறநாட்டு ஆடை, அணிகலன்களை அணியும் போது மகிழ்கின்றனர். இதனால், உலக மக்களிடையே நன்மதிப்பும் நல்லுறவும் ஏற்படுகின்றன. இந்நிகழ்வு, உலக ஒற்றுமைக்கு ஓர் அடித்தளமாக உள்ளது.

(இருவரும் ‘இசைமொழி’ அரங்கிற்குள் நுழைகின்றனர்.)

செல்வன் : மக்களை ஒன்றிணைப்பதில் இசைக்குக் குறிப்பிடத்தக்க இடம் உண்டு.
இனியன் : ஆம், இசையை அனுபவிக்க மொழிகள் தேவையில்லை. உலக மக்கள் அனைவரும் புரிந்துகொள்ளும் ஒரே மொழி இசைதான்.
செல்வன் : ஆம். இசை, பல்வேறு வேறுபாடுகளைக் கடந்து மக்களை ஒன்றிணைக்கிறது.

(இருவரும் ‘விளையாட்டு உலகம்’ என்னும் அரங்கிற்குள் செல்கின்றனர்.)

இனியன் : செல்வா, விளையாட்டுகள் உலக மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கின்றன.
செல்வன் : உண்மைதான். மக்களை ஒன்றிணைப்பதில் விளையாட்டுக்கும் பங்கு உண்டு. பல நாட்டு வீரர்கள் இணைந்து ஒற்றுமையாக விளையாடுவது மிகவும் சிறப்பு. உனக்குக் கால்பந்து விளையாட்டில் எத்தொடர் பிடிக்கும்?
இனியன் : இந்தியாவில் நடக்கும் இந்தியன் சூப்பர் லீக் (ISL) தொடர் எனக்கு மிகவும் பிடிக்கும்.

(இருவரும் ‘சுற்றுலா’ அரங்கிற்குள் செல்கின்றனர்.)

செல்வன் : இனியா, இங்கே பார். சுவிட்சர்லாந்து நாடு எவ்வளவு அழகாக உள்ளது! இத்தாலியின் வெனிஸ் நகரமும் என் மனத்தைக் கவர்கிறது.
இனியன் : ஆம். இவற்றைப் பார்க்கும்போது வானில் பறப்பதுபோல் உள்ளது.
செல்வன் : புதிய தகவல்களையும் சூழல்களையும் அறிந்துகொள்வதற்கு மூலதனமாக இருப்பவை வெளிநாட்டுச் சுற்றுப் பயணங்கள்.
இனியன் : ஆம். மனமகிழ்ச்சி, தொழில், அரசியல் போன்ற காரணங்களுக்காக மக்கள் வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செல்கின்றனர்.
செல்வன் : இந்தச் சுற்றுப்பயணத்தின் மூலம் பிற நாட்டின் தொழில்நுட்பத் திறனை அறிந்து, தங்கள் நாட்டிலும் பின்பற்றுகின்றனர். இப்பயணங்கள் உலக மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துகின்றன.
இனியன் : ஆம். மேலும், ஒரு நாட்டின் பண்பாட்டுக் கூறுகள் பிறநாடுகளுக்கு விரிவடைகின்றன.
செல்வன் : உலக மக்களிடையே மொழி, இனம், சமயம், பண்பாடு, வாழிடம் எனப் பல வேற்றுமை காணப்பட்டாலும் விழாக்கள், இசை நிகழ்ச்சிகள், விளையாட்டுகள், விருந்து நிகழ்வுகள், சுற்றுலாக்கள், திரைப்படங்கள் முதலான நிகழ்வுகளில் ஒன்றிணைகின்றனர். நாமும் உலக மக்களின் ஒற்றுமைக்காக நம்மால் இயன்ற ஒத்துழைப்பினை வழங்குவோம்.
இனியன் : அப்படியே செய்வோம்.

பொருள் அறிவோம்

1. அகன்ற திரை - பெரிய திரை
2. கவர்கிறத - ஈர்க்கிறது
3. மூலதனம் - அடிப்படை
4. வாழிடம் - இருப்பிடம்
5. ஒத்துழைப்பு - இணக்கமான உதவி

உலக மக்களிடையே மொழி, இனம், சமயம், பண்பாடு, வாழிடம் எனப் பல வேற்றுமைகள் காணப்படுகின்றன.

உலக மக்களை விழாக்கள், இசை நிகழ்ச்சிகள், விளையாட்டுகள், விருந்து நிகழ்வுகள், சுற்றுலாக்கள், திரைப்படங்கள் முதலான நிகழ்ச்சிகள் ஒற்றுமைப்படுத்துகின்றன.

சுற்றுலா மூலம் ஒரு நாட்டின் பண்பாட்டுக் கூறுகள் பிறநாடுகளுக்கு விரிவடைகின்றன. பிற நாட்டின் தொழில்நுட்பத் திறனைத் தங்கள் நாட்டிலும் பின்பற்ற சுற்றுப்பயணங்கள் உதவுகிறது. இந்தப் பயணங்கள் உலக மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துகின்றன.

மக்களை ஒன்றிணைப்பதில் விளையாட்டுக்கும் பங்கு உண்டு. பல நாட்டு வீரர்கள் இணைந்து ஒற்றுமையாக விளையாடுகின்றனர். எனவே விளையாட்டுகள் மூலம் உலக மக்களிடையே ஒற்றுமையுணர்வு ஏற்படுகிறது.

இசையை அனுபவிக்க மொழிகள் தேவையில்லை. உலக மக்கள் அனைவரும் புரிந்துகொள்ளும் ஒரே மொழி இசைதான். எனவே இசை, பல்வேறு வேறுபாடுகளைக் கடந்து மக்களை ஒன்றிணைக்கிறது.