ழகரம்
(முதல் பருவம்)
கீழ்க்காணும் கதையைப் படித்து, முடிவு கூறுக.
அறிவானந்தம் பெரும் தொழிலதிபர். அவரிடம் தொழில்நுணுக்கத்தைக் கற்றுக்கொள்ளப் பலர் முன்வந்தனர். அவரும் பல மாநாடுகளில் கலந்துகொண்டு, தம் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். அவருக்கு ஒரே ஒரு மகன். அவன் பெயர் முகிலன். அவனுக்குத் தந்தையிடம் மதிப்பும் மரியாதையும் இருந்தது. ஆனால், அவருடைய செல்வாக்கின் மூலம் தான் உயர்ந்த இடத்தில் வருவது அவனுக்குப் பிடிக்கவில்லை. தானும் சொந்தக்காலில் நின்று சுயதொழில் செய்து முன்னேற நினைத்தான். அலுவலக வேலையின் காரணமாக அப்பா இலண்டனுக்குச் செல்லவிருந்தார். அவனையும் வருமாறு அழைத்தார். ஆனால், முகிலன் மறுத்துவிட்டான். ஒருநாள், இலண்டனிலிருந்து அவனுக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய மேலாளர், “தம்பி, உங்க அப்பாவுக்குத் திடீர்னு நெஞ்சுவலி. உடனே மருத்துவமனையில் சேர்த்திட்டோம். இப்போது பரவாயில்லை. இரண்டு நாளில் வீடு திரும்பலாம்னு மருத்துவர் சொன்னார். அடுத்த வாரம் உலகப் புகழ்பெற்ற நிறுவனத்தோட அப்பா தொழில்முறை ஒப்பந்தம் செய்ய உள்ளார். அந்தத் திட்டம் நடக்கலேன்னா பல கோடி இழப்பு ஏற்படும். என்ன செய்றதுன்னு தெரியல“ என்றார் நிறுவன மேலாளர். இப்போது, முகிலன் சிந்தித்தான். அப்பாவின் நிறுவனத்தில் வேலை செய்யும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் நிலையை எண்ணினான்.
இப்போது முகிலன் என்ன முடிவு எடுத்திருப்பான்?
நீங்கள் முகிலனாக இருந்தால் என்ன செய்வீர்கள்? கதையைத் தொடர்ந்து கூறுக.
கீழ்க்காணும் பாடலைப் படித்து, நீங்கள் புரிந்துகொண்ட கருத்துகளை வெளிப்படுத்துக.
ஏட்டில் படித்ததோடு இருந்துவிடாதே -நீ
ஏன்படித்தோம் என்பதையும் மறந்துவிடாதே
நாட்டின் நெறிதவறி நடந்துவிடாதே – நம்
நல்லவர்கள் தூற்றும்படி வளர்ந்துவிடாதே
மூத்தோர்சொல் வார்த்தைகளை மீறக்கூடாது – பண்பு
முறைகளிலும் மொழிதனிலும் மாறக்கூடாது
மாற்றார்கைப் பொருளைநம்பி வாழக்கூடாது – தன்
மானமில்லாக் கோழையுடன் சேரக்கூடாது.
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
உலகப் புகழ்பெற்ற தொழில் முனைவோர்களின் படங்களையும் செய்திகளையும் திரட்டிப் படத்தொகுப்பு ஒன்றை உருவாக்குக.