ழகரம்
(முதல் பருவம்)
| குழு | : | அண்ணே! இன்னைக்கு என்னண்ணே தெரிஞ்சுக்கப் போறோம்? | |
| தலைவர் | : | இன்னைக்குத் தமிழ் மன்னர்களின் கொடைச்சிறப்பைத் தெரிஞ்சுக்கப் போகிறோம். | |
| குழு | : | அது சரிங்கண்ணே. கொடை, கொடை அப்படின்னு சொல்றீங்களே? அதைப்பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன். | |
| தலைவர் | : | சொல்றேன் கேளுங்க. பொருள் உள்ளவங்க பொருள் இல்லாதவங்களுக்குக் கொடுக்கறதுதான் கொடை. | |
| குழு | : | அடடே, அப்படியாங்கண்ணே! | |
| தலைவர் | : | ஆமா! புறநானூறுல கூட “செல்வத்தின் பயனே ஈதல்” அப்படின்னு சொல்லியிருக்காங்க. சரி, சரி, நாம இப்ப கொடையில் சிறந்து விளங்கிய வள்ளல்களைப் பற்றிப் பாடலாமா? | |
| குழு | : | ஓ, பாடலாம் அண்ணே. | |
| தலைவர் | : | கதைகேளு கதைகேளு கடையெழு வள்ளல்களின் கதைகேளு கொடையில் சிறந்து விளங்கிய குறுநில மன்னர்களின் கதைகேளு |
| குழு | : | ஓஹோ, அப்படியா அண்ணே! | |
| தலைவர் | : | ஆமா. பாரின்னு ஒரு வள்ளல். அவர் என்ன செய்தார் தெரியுமா? முல்லைக்கொடிக்குத் தன்னோட தேரையே கொடுத்தாரு. | |
| குழு | : | அட, முல்லைக்கொடிக்கே தேரைக் கொடுத்தாரா? எப்படிண்ணே? | |
| தலைவர் | : | அட, ஆமாங்க. பாரி வள்ளலுக்கு அவ்வளவு இரக்கக் குணம். அவரு தேர்ல ஒருநாள் நகர்வலம் போனாராம். அப்போ, ஒரு முல்லைக்கொடி படருவதற்கு எதுவுமில்லாம தரையில் படர்ந்து இருந்ததாம். அதைப் பார்த்ததும் அவரு மனம் வருந்தினாராம். உடனே தன்னோட தேரை முல்லைக்குப் படரக் கொடுத்துவிட்டு, அரண்மனைக்கு நடந்தே சென்றாராம். | |
| குழு | : | அட, பாரி வள்ளல் பெரிய ஆளா இருப்பார்போல. அடுத்ததா, பேகனைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கண்ணே. | |
| தலைவர் | : | சொல்றேன் தம்பி, நல்லா கேட்டுக்கங்க. ஒரு மயிலு தன்னோட தோகைய விரிச்சு ஆடிக்கிட்டு இருந்ததாம். அதைப் பார்த்த பேகன் என்ன நினைச்சாரு தெரியுமா? அடடா! இந்த மயிலு குளிரால நடுங்குதே, என்ன செய்யலாம்னு யோசிச்சு, உடனே தம் உடல்மேல போர்த்தியிருந்த போர்வையை எடுத்து, மயிலுக்குப் போர்த்தினாராம். | |
| குழு | : | ஓஹோ! அப்படிப்பட்டவரா, அந்தப் பேகன்? | |
| தலைவர் | : | ஆமாங்க. இவரும் பாரியைப்போலத்தான். தம்மை நாடி வந்தவர்களுக்கு மட்டுமல்லாம, ஐந்தறிவு உயிர்களுக்குக்கூட நல்லது செஞ்சிருக்காரு. | |
| குழு | : | ஓஹோ! மற்றவர்களைப் பற்றியும் சொல்லுங்க, தெரிஞ்சுக்கிறோம். | |
| தலைவர் | : | ஓ! தெரிஞ்சுக்கலாமே. ஆனா, இன்னொரு நாள் சொல்றேன். அதனால நேரம் கருதி இப்ப விடைபெறுவோம். |
| 1. | இரத்தல் | - | யாசித்தல் | ||
| 2. | ஈதல் | - | கொடுத்தல் | ||
| 3. | இரக்கம் | - | பரிவு | ||
| 4. | நகர்வலம் | - | ஊரைச் சுற்றி வருதல் | ||
| 5. | வருந்துதல் | - | துன்பப்படுதல் |
பொருள் உள்ளவர்கள் பொருள் இல்லாதவர்களுக்குக் கொடுப்பது கொடை ஆகும்.
“செல்வத்தின் பயனே ஈதல்” என்பதன் பொருள் பொருளுடையவர்கள் பொருள் இல்லாதவருக்குக் கொடுப்பதே அவர்கள் வைத்திருக்கும் செல்வத்தின் பயன் ஆகும்.
பாரி
பேகன், குளிரால் நடுங்கிய மயிலுக்கு தம் உடல் மேல் போர்த்தியிருந்த போர்வையை எடுத்துப் போர்த்தினார். இதன் மூலம் ஐந்தறிவு உயிர்களிடத்திலும் அவர் கொண்டுள்ள இரக்கப்பண்பு வெளிப்படுகிறது.
வில்லினைப் பயன்படுத்திப் பாடப்படும் பாட்டு வில்லுப்பாட்டு எனப்படும்.