ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 27
27.2 படிப்போம்

ஆபிரகாம் பண்டிதர்

தமிழ்மொழிக்குச் சான்றோர் பலர் தொண்டு செய்துள்ளனர். இயல், இசை, நாடகம் என முத்தமிழிலும் அவர்கள் ஆற்றிய தொண்டு அளவிடற்கரியது. அத்தகைய சான்றோர்களுள் ஒருவர் ஆபிரகாம் பண்டிதர். அவர் இசைத்தமிழ் வளர்ச்சிக்கு ஆற்றிய பணி குறிப்பிடத்தக்கது.

ஆபிரகாம் பண்டிதர் பல்துறை வித்தகர். இசைத்துறையில் மட்டுமல்லாமல் சித்த மருத்துவம், சோதிடம், வேளாண்மை, சமயம், மொழி எனப் பல துறைகளிலும் தமது பணி சிறக்கச் செய்தவர். சிறந்த ஆளுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர்.

ஆபிரகாம் பண்டிதர் ஆசிரியப்பயிற்சி முடித்து ஆசிரியராகப் பணியாற்றினார். அவர் புகைப்படம் எடுப்பதிலும் ஆர்வம் கொண்டிருந்தார். அச்சுக்கூடம் அமைத்து நூல்களை அச்சிட்டு வெளியிட்டார். சித்த மருத்துவத்தில் சிறந்து விளங்கிய அவர், தமது தோட்டத்திலேயே மூலிகைச்செடிகளை வளர்த்தார். மூலிகைச்செடிகள் மட்டுமின்றி, மணமிக்க பூச்செடிகள், இனிய கனி தரும் மரங்கள் ஆகியவற்றையும் வளர்த்தார்.

ஆபிரகாம் பண்டிதர் தமது சிறுவயதிலேயே இசையின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். பல பாடல்களைத் தாமே இயற்றிப் பாடும் திறமை பெற்றிருந்தார். எனினும் இசையை முறையாகப் பயில விரும்பினார். இசை வல்லுநரிடம் சரளி வரிசை, அலங்காரம், கீதம், கீர்த்தனைகள், வர்ணங்கள் முதலியவற்றைக் கற்றுத் தேர்ந்தார். இளமையில் அவர் பெற்ற இசைப்பயிற்சி, பிற்காலத்தில் இசைத்தமிழ் ஆராய்ச்சியில் ஈடுபடப் பெரிதும் உதவியது.

இசைத்தமிழ் பற்றி மேலும் அறிந்துகொள்ளும் வகையில், “தஞ்சை சங்கீத வித்தியா மகாஜன சங்கம்” என்ற பெயரில் ஏழு இசை மாநாடுகளைத் தஞ்சாவூரில் தம் சொந்தச் செலவில் நடத்தினார். இம்மாநாடுகளில் இசை ஆய்வாளர்கள், இசைக்கலைஞர்கள், மொழியியல் அறிஞர்கள் பலர் பங்கேற்றனர். அவர்களின் மூலம் இசை தொடர்பான சுரங்கள், சுருதிகள், பண்கள் பற்றித் தமக்கு எழுந்த ஐயங்களைத் தீர்த்துக்கொண்டார்.

இசைத்தமிழ் பற்றித் தாம் கண்டறிந்த உண்மைகளையும் அறிஞர் பலர் கூறிய கருத்துகளையும் பழந்தமிழ் நூல்களில் சொல்லப்பட்ட விளக்கங்களையும் ஆபிரகாம் பண்டிதர் தொகுத்தார். ஏழு ஆண்டுகள் விடாமுயற்சியுடன் பாடுபட்டு, “கருணாமிர்த சாகரம் – முதல் புத்தகம்“ என்னும் இசைத்தமிழ் ஆராய்ச்சி நூலை 1917ஆம் ஆண்டு வெளியிட்டார். இசை தொடர்பான பல அரிய உண்மைகளைக் கொண்டுள்ள இந்நூலை ஓர் இசைக் களஞ்சியம் என்றே கூறலாம். இந்நூல் 1200 பக்கங்களைக் கொண்டது. இதில் நான்கு பாகங்கள் உள்ளன. முதல் புத்தகத்தைத் தொடர்ந்து, “கருணாமிர்த சாகரம் – இரண்டாம் புத்தகம்“ வெளியிடப்பட்டது. இந்நூலும் நான்கு பாகங்களை உடையதாய் இருந்தது.

ஓர் இராகத்தின் குறிப்பிட்ட முழு வடிவத்தைக் கண்டு அதில் கீதம், கீர்த்தனை முதலியவற்றிற்குப் பண் அமைக்கும் புதிய முறையை ஆபிரகாம் பண்டிதர் இசை உலகிற்கு அளித்துள்ளார். கருணாமிர்த சாகரம் – இரண்டாம் புத்தகத்திற்கு மதிப்புரை வழங்கிய நீதிபதி திரு. அனந்த நாராயணர் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்புகள், விவரங்கள், விதிகள் முதலியவற்றை இசைக்கலைஞர்கள் ஆழ்ந்து கவனிக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இதிலிருந்து இந்நூல் எத்தகைய சிறப்பு வாய்ந்தது என்பது நன்கு விளங்கும்.

ஆபிரகாம் பண்டிதர் ஈடுஇணையற்ற அறிவாற்றலைப் பெற்றிருந்தது மட்டுமின்றி, ஆன்றோர் போற்றும் நற்பண்புகளையும் கொண்டிருந்தார். அவர் வாழ்வில் ஒழுக்கம் முதன்மையான இடத்தைப் பெற்றிருந்தது. அவர், தமது பிள்ளைகளையும் சீரிய ஒழுக்கத்துடனும் கண்டிப்புடனும் வளர்த்தார். சுற்றத்தாரை மதிக்கும் மாண்பு அவரிடம் இருந்தது. தமிழிசைக் கலைஞர்களையும் புலவர் பெருமக்களையும் அவர் ஆதரித்தார்.

ஆபிரகாம் பண்டிதரைப் போலவே, அவருடைய வழித்தோன்றல்கள் இசைத்துறையிலும் மருத்துவத்துறையிலும் ஈடுபாடு கொண்டுள்ளனர். இது அவருக்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

பொருள் அறிவோம்

1. வித்தகர் - வல்லுநர்
2. சங்கீதம் - இசை
3. விடாமுயற்சி - இடைவிடாது செய்தல்
4. பண் - பாடல்
5. மாண்பு - பெருமை
6. வழித்தோன்றல் - பரம்பரை

விடை காண்போம்

ஆபிரகாம் பண்டிதர் இசைத்துறையில் மட்டுமல்லாமல் சித்த மருத்துவம், சோதிடம், வேளாண்மை, சமயம், மொழி எனப் பல துறைகளிலும் சிறந்து விளங்கினார்.

ஆபிரகாம் பண்டிதர் சிறு வயதிலிருந்து இசையின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். பல பாடல்களைத் தாமே இயற்றிப்பாடும் திறமை பெற்றிருந்தார். எனினும் இசையை முறையாகப் பயில விரும்பி இசை வல்லுநரிடம் சரளி வரிசை, அலங்காரம், கீதம், கீர்த்தனைகள், வர்ணங்கள் முதலியவற்றைக் கற்றுத் தேர்ந்தார்.

கருணாமிர்த சாகரம் – முதல் புத்தகம் நான்கு பாகங்கள் ; கருணாமிர்த சாகரம் – இரண்டாம் புத்தகம் நான்கு பாகங்கள் என இசைத்தமிழ் ஆராய்ச்சி குறித்து இரண்டு புத்தகங்களை ஆபிரகாம் பண்டிதர் வெளியிட்டார்.

ஆபிரகாம் பண்டிதர் நடத்திய இசைத்தமிழ் மாநாட்டில் இசை ஆய்வாளர்கள், இசைக் கலைஞர்கள், மொழியியல் அறிஞர்கள் ஆகியோர் பங்கேற்றனர். அவர்களின் மூலம் இசை தொடர்பான சுரங்கள், சுருதிகள், பண்கள் பற்றித் தமக்கு எழுந்த ஐயங்களைக் கேட்டு தெளிந்தார்.

ஆபிரகாம் பண்டிதர் ஈடு இணையற்ற அறிவாற்றலையும் ஆன்றோர் போற்றும் நற்பண்புகளையும் பெற்றிருந்தார். அவர் ஒழுக்கத்துடனும் சுற்றத்தாரை மதிக்கும் மாண்புடனும் வாழ்ந்தார். தமிழிசைச் செல்வர்களையும் புலவர் பெருமக்களையும் அவர் ஆதரித்தார்.