ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 30
30.2 படிப்போம்

ஜீன் ஹென்றி டுனாண்ட்

உலகம் முழுவதும் மே மாதம் எட்டாம் நாளன்று ‘செஞ்சிலுவை நாள்‘ கொண்டாடப்படுகிறது. இந்நநாள் ஜீன் ஹென்றி டுனாண்ட்டின் பிறந்த நாள். அவர் செய்த அருஞ்செயல்கள், செஞ்சிலுவைச் சங்கத்தைத் தோற்றுவிக்கக் காரணமான நிகழ்வுகள் முதலியவற்றைப்பற்றி நாம் அறிந்துகொள்வோம்.

ஜீன் ஹென்றி டுனாண்ட் சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள ஜெனிவா நகரில் 1828ஆம் ஆண்டு மே மாதம் எட்டாம் நாள் பிறந்தார். இவரது குடும்பம் வாணிகத்தொழிலை அடிப்படையாகக் கொண்டது.

ஜீன் ஹென்றி டுனாண்ட் ஒருமுறை இத்தாலிக்குச் சென்றார். அங்குச் சிறிதுகாலம் தங்கியிருந்தார். அப்போது, பிரான்ஸ் நாட்டுக்கும் ஆஸ்திரியா நாட்டுக்கும் இடையே போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒரு நாள் நள்ளிரவு ஜீன் ஹென்றி டுனாண்ட் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது, மிகப் பெரிய குண்டு ஒன்று வெடித்தது. குண்டு வெடிப்பினால் ஏற்பட்ட இரைச்சலால், அவர் உறக்கத்திலிருந்து உடனடியாக விழித்துக்கொண்டார். அந்தக் குண்டு வெடிப்பு அருகிலுள்ள சால்ஃபரினோ என்னும் இடத்திலிருந்து வந்தது என்பதை அறிந்துகொண்டார்.

ஜீன் ஹென்றி சற்றும் தயங்காமல், போர் நடந்த இடத்தை நோக்கிச் சென்றார். அங்கிருந்த ஒரு குன்றின் மீதேறிப் போர்க்களக் காட்சியைக் கண்டார். சமவெளிப் பகுதியில் ஃபிரான்ஸ் வீரர்களும் ஆஸ்திரியா வீரர்களும் போர் செய்துகொண்டிருந்தனர். இந்தப் போரில் வீரர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். அவர்கள் காயத்தால் கதறித் துடித்தனர்.

ஜீன் ஹென்றி டுனாண்ட் போரில் காயம்பட்ட வீரர்களைக் கண்டு மனங்கலங்கினார். அவர்களுக்கு எப்படியாவது உதவவேண்டும் என்று முடிவுசெய்தார். அந்தத் துயரமான நிகழ்வுதான் பின்னாளில் உலக அளவிலான செஞ்சிலுவைச் சங்கம் தோன்றக் காரணமாக அமைந்தது.

போரில் காயம்பட்ட வீரர்கள் பல துன்பத்திற்கு ஆளாயினர்; பலர் உயிர் இழந்தனர்; சிலர் உறுப்புகளை இழந்தனர்; சிலர் ஆறாத காயத்துடன் துன்புற்றனர்; பலருக்குப் போதுமான மருத்துவ உதவிகள் கிடைக்கவில்லை. இத்தகைய துன்பங்களுடன் தாகத்தால் பலர் உயிரிழந்ததையும் ஜீன் ஹென்றி டுனாண்ட் கண்டார். அவர் உடனடியாக, மருத்துவர்களையும் நல்உள்ளம் கொண்ட தன்னார்வலர்களையும் திரட்டினார். அவர்களின் உதவியுடன் காயம்பட்ட வீரர்களைக் காப்பாற்ற முனைந்தார்.

மருத்துவ உதவி செய்தவர்களுள் சிலர், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு மட்டும் உதவினர். இதனால், ஆஸ்திரியா வீரர்களுக்கு வேண்டிய முதலுதவி கிடைக்கவில்லை. ஆனால், ஜீன் ஹென்றி டுனாண்ட் வீரர்களுக்கு இடையே எவ்வித வேறுபாடும் பார்க்காமல் அனைவருக்கும் உதவினார். அவரது செயலைக் கண்டு ஒரு பெண்மணி, ‘நம் நாட்டுக்குத் துரோகி, அவனுக்கு உதவாதீர்கள்‘ என்று கூறினாள். அதற்கு, ஜீன் ஹென்றி டுனாண்ட், ‘விரோதியும் மனிதன்தான்‘ எனக் கூறினார். அச்சூழலில் அவர் கூறிய சொற்கள், ஒவ்வொரு போர் வீரரின் உள்ளத்தையும் நெகிழச் செய்தது.

ஜீன் ஹென்றி டுனாண்ட், போரின் நிகழ்வுகளை விவரிக்கும் ‘‘சால்ஃபெரினோவின் நினைவுகள்‘ என்னும் நூலை எழுதினார். இந்நூலில், “போரில் காயமுற்ற வீரர்களுக்கு உதவுவதற்கு ஒவ்வொரு நாட்டிலும் ஒரு நிவாரணச் சங்கம் இருக்கவேண்டும். இதற்குப் பன்னாட்டுச் சட்டங்களை வகுக்க வேண்டும்“ என வலியுறுத்தினார். இதன் விளைவாகத் தோன்றியதுதான் ‘செஞ்சிலுவைச் சங்கம்‘. இச்சங்கமானது, போர் சமயத்தில் மட்டுமன்றி, எந்த நேரத்தில் எந்த இடத்தில் உதவி தேவைப்பட்டாலும் உதவுவதற்குத் தயாராக இருக்கவேண்டும். இன்று உலக அளவில் ஏறக்குறைய 191 நாடுகளில் இச்சங்கம் செயல்படுகிறது. இச்சங்கம் உருவாகக் காரணமாக இருந்த ஜீன் ஹென்றி டுனாண்டுக்கு 1901ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

பொருள் அறிவோம்

1. உறக்கம் - தூக்கம்
2. இரைச்சல் - ஒலி
3. குன்று - சிறிய மலைப்பகுதி
4. திரட்டினார் - ஒன்று சேர்த்தார்
5. பன்னாடு - பல நாடு ்

விடை காண்போம்

ஜான் ஹென்றி டுனாண்ட்சு விட்சர்லாந்து நாட்டிலுள்ள ஜெனிவா நகரில் 1828 ஆம் ஆண்டு மே மாதம் எட்டாம் நாள் பிறந்தார்

ஜான் ஹென்றி டுனாண்ட்

உலகம் முழுவதும் மே மாதம் எட்டாம் நாளன்று ‘செஞ்சிலுவை நாள்’ கொண்டாடப்படுகிறது.

பிரான்ஸ் ஆஸ்திரியா ஆகிய இரு நாட்டிற்கும் இடையே நடந்த போரில் ஏற்பட்ட குண்டு வெடிப்பினாலும் போரினாலும் எண்ணற்ற வீரர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இதைக் கண்ட ஜான் ஹென்றி டுனாண்ட் பெரிதும் மனங்கலங்கினார். அவர்களுக்கு எப்படியாவது உதவ வேண்டும் என்று முடிவு செய்தார். அந்தத் துயரமான நிகழ்வு தான் பின்னாளில் உலக அளவிலான செஞ்சிலுவைச் சங்கம் தோன்றக் காரணமாக அமைந்தது.

போரில் காயமுற்ற வீரர்களுக்கு உதவுதல்; போர் சமயத்தில் மட்டுமின்றி எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் உதவி தேவைப்பட்டால் உதவுவதற்குத் தயாராக இருத்தல் போன்றன செஞ்சிலுவைச் சங்கத்தின் பணிகள் ஆகும்.