சிகரம்
(முதல் பருவம்)

பாடம் - 1
1.2 படிப்போம்

தமிழ்விடு தூது

ஒருவர் தன் எண்ணத்தை இன்னொருவருக்குத் தெரிவிக்க மனிதரையோ பிற உயிரினங்களையோ அல்லது பொருள்களையோ அனுப்புவதற்குத் தூது என்று பெயர். தூது என்பது தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. இது ‘வாயில் இலக்கியம்’, ‘சந்து இலக்கியம்’ என்னும் வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. தமிழ் மொழியையே தூதுவிடுவதாக அமைத்து இயற்றப்பட்ட தமிழ்விடு தூது என்னும் இலக்கியத்திலிருந்து சில பகுதிகளைக் காண்போம்.

நாடவரும் கல்லாதார் சிங்கமெனக் கல்வி கேள்விக்குரியர்
எல்லாரு நீயாய் இருந்தமையால் – சொல்லாரும் (15)

என்னடிகளே உனைக்கண்டு ஏத்தின் இடர்தீருமென்று உன்
பொன்னடிகளே புகலாப் போற்றினேன். (16)

இளங்கனியாய்த் தித்திக்கும் தெள்ளமுதாய்த் தெள்ளமுதின் மேலான
முத்திக் கனியேஎன் முத்தமிழே – புத்திக்குள் (69)

உண்ணப் படும்தேனே உன்னோடு உவந்து உரைக்கும்
விண்ணப்பம் உண்டு விளம்பக் கேள் (70)

இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் (151)

பாடல் விளக்கம்

எல்லாப் புலவர்களிடமும், அவர்களை நாடிவரும் கல்லாதவர்களிடமும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் எல்லோரிடமும் தமிழையே காண்கிறேன். உன்னைக் கண்டு துதித்தால் என் குறைகள் எல்லாம் நீங்கும் என்று கருதி உன் பொன் போன்ற திருவடிகளையே துணையாகக் கொண்டு போற்றுகிறேன். இனிக்கும் தெளிவான அமுதமாகி அந்த அமுதினும் மேலான முத்தியைத் தரும் கனி போன்ற தமிழே! இயல், இசை, நாடகம் என்ற மூவகையான தமிழ் மொழியே! அறிவால் உண்ணப்படும் தேன் போன்ற தமிழே! உன்னோடு மகிழ்ந்து கூறும் வேண்டுகோள் ஒன்று உள்ளது. அதனைநான் சொல்ல நீ கேட்பாயாக. நீ எனக்குத் துணையாய் இருப்பதால் நான் இதுவரை வாழ்ந்துவருகிறேன். தேவர்கள் உண்ணும் உணவாகிய அமுதத்தையே தந்தாலும் அதை விரும்ப மாட்டேன். இவ்வாறு தமிழ் மொழி மீது தான் கொண்ட பற்றை எடுத்துக்கூறுகிறார் ஆசிரியர்.

நூலைப் பற்றி

தமிழ்விடு தூது 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று. தூது இலக்கியங்களுள் புகழ்பெற்றது தமிழ்விடு தூது. இந்நூல் மதுரை சோமசுந்தரக் கடவுளிடம் காதல்கொண்ட தலைவி தம் எண்ணத்தை எடுத்துக்கூறத் தமிழைத் தூது அனுப்புவதாக அமைந்தது. இதன் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை. இது கலிவெண்பா எனும் பாவகையால் ஆனது. இந்நூல் 268 கண்ணிகளை உடையது. (கண்ணி – இரண்டு அடிகளைக் கொண்டது.)

பொருள் அறிவோம்

1. முத்தமிழ் - இயல், இசை, நாடகம்
2. புத்தி - அறிவு
3. விண்ணப்பம் - வேண்டுகோள்
4. விளம்பல் - சொல்லுதல்
5. இடர் - துன்பம்
6. கல்லாதார் - கல்வி அறிவற்றவர்