சிகரம்
(முதல் பருவம்)

பாடம் - 1
1.3 படிப்போம்

தமிழரின் கொடைத்தன்மை

தமிழ்ச்சமூகத்தில் புலவர்களுக்குப் பரிசளித்து வள்ளல்களாக விளங்கிய அரசர்களுள் ஒருவர் குமணன். இவர் முதிரி மலைத்தொடரை ஆண்டுவந்தார். தமிழையும் தமிழ்ப் புலவர்களையும் தன் உயிரெனப் போற்றினார். இச்செயலைப் பொறுக்காத அவருடைய தம்பி இளங்குமணன் ஆட்சியைக் கைப்பற்றுகிறார். குமணனோ நாட்டை விடுத்துக் காட்டிற்குச் சென்று வாழ்கிறார். இருப்பினும் குமணனின் புகழையும் பெருமையையும் கண்டு பொறுக்காத இளங்குமணன், குமணனின் தலையைக் கொய்துவருபவருக்கு நூறாயிரம் பொற்காசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கிறார். இதைக் கேட்ட பெருந்தலைச் சாத்தனார் காட்டிற்குச் சென்று குமண வள்ளலைக் காண்கிறார்.

காட்சி – 1
இடம் : காடு  நேரம் : காலை
பங்கேற்போர் : குமணன், புலவர் பெருந்தலைச் சாத்தனார்.
குமணன் : வாருங்கள். புலவர் பெருமகனாரே! உங்களைக் காண்பதில் மகிழ்ச்சி.
பெ.சாத்தனார் : முன்பு அரண்மனையில் வள்ளலாகிய நீவிர் இருந்தீர். புலவர்களாகிய நாங்கள் நின்புகழைப் பாடிப் பரிசில் பெற்று மகிழ்ந்திருந்தோம். இப்போது கொடுங்கோல் ஆட்சியால் வறுமையில் வாடுகின்றோம்.
குமணன் : புலவரே! நான் அரசாட்சியில் இருக்கும்போது நீங்கள் வந்திருக்கக் கூடாதா? இப்போது என்னிடம் கொடுப்பதற்கு எதுவும் இல்லையே. இது, என் தாயை இழந்த துன்பத்தைவிடப் பெருந்துன்பம் அளிக்கிறது. புலவரே! உங்களுக்குப் பரிசில் கிடைக்க வழிவகை உண்டு. அதைக் கூறுகிறேன் கேளுங்கள். என் தலையினைக் கொய்து சென்றால் நூறாயிரம் பொன் பரிசாகக் கிடைக்கும்.
பெ.சாத்தனார் : என்ன? தலையில் இடி விழுவது போன்ற செய்தியாக உள்ளதே. உங்களுடைய வாளை மட்டும் தாருங்கள்!
காட்சி – 2
இடம் : அரண்மனை  நேரம் : காலை
பங்கேற்போர் : பெருந்தலைச் சாத்தனார், இளங்குமணன்
பெ.சாத்தனார் : வாயிற்காப்போனே! என்னைத் தடுக்காதே. அரசனிடம் கூற முக்கியமான தகவல் கொண்டுவந்துள்ளேன். விரைவாக வழிவிடு!
இளங்குமணன் : ’நீங்கள் யார்? ஏன் வந்தீர்கள்?
பெ.சாத்தனார் : மன்னா! ஒரு நற்செய்தி கொண்டுவந்துள்ளேன். இங்கே பாருங்கள்! இந்த உடைவாள் யாருடையது என்று தெரிகிறதா?
இளங்குமணன் : இது குமணனின் உடைவாளல்லவா! அது எப்படி உங்கள் கையில்?
பெ.சாத்தனார் : மன்னா, குமண வள்ளலிடம் பரிசு பெறச் சென்றேன்! அவர் தன்னிடம் பரிசளிக்க ஒன்றும் இல்லாததால், தன் தலையினைக் கொய்து, இளங்குமணனிடம் கொடுத்து நூறாயிரம் பொன் பரிசு பெற்றுக்கொள் என்று தன் உடைவாளைத் தந்தார்.
இளங்குமணன் : ஆ! என்ன செயல் செய்துவிட்டீர். தமிழ்ப் புலவருக்குப் பரிசளிக்கத் தன் தலையையே கொடுத்த என் அண்ணனை இனி எப்போது காண்பேன்? நான் மிகப் பெரிய தவறு இழைத்துவிட்டேன்.
பெ.சாத்தனார் : மன்னா! உங்கள் அண்ணன் இன்னும் இறக்கவில்லை. காட்டில்தான் வாழ்கிறார்.
இளங்குமணன் : புலவரே! மிக்க நன்றி. மிகப் பெரிய பாவச்செயல் செய்ய இருந்த என்னைக் காப்பாற்றி உள்ளீர்கள். இப்போதே காட்டிற்குச் சென்று அரசுரிமையை அவரிடமே தந்துவிடுகிறேன். இனி குமண வள்ளலே இந்நாட்டு மன்னர்.
முரசு அறைவோன் : நாடு மறுமலர்ச்சி பெற்றது. குமண வள்ளலே இனி நாட்டை ஆள்வார்.
வாழ்க செங்கோல் ஆட்சி! வளர்க குமண வள்ளல்!
திரை விழுகிறது.

பொருள் அறிவோம்

1. கொய்து - துண்டித்து
2. கொடுங்கோல் ஆட்சி - நீதியற்ற ஆட்சி
3. பரிசில் - பரிசு
4. வள்ளல் - வறியோருக்கு வாரி வழங்குபவர்