சிகரம்
(முதல் பருவம்)
மொழியும் பண்பாடும் தமிழர்களை ஒருங்கிணைக்கின்றன. இத்தகைய ஒருங்கிணைப்பில் உலகத் தமிழ் மாநாடுகள் இன்றியமையாப் பங்குவகிக்கின்றன. அத்தகைய மாநாடுகள் குறித்து மலேசியாவில் வாழும் காவ்யாவிற்குச் சிகாகோவிலிருந்து அவரது தோழர் ஆதவன் அனுப்பும் மின்னஞ்சல்.
15/06/2023
சிகாகோ .
அன்புத்தோழி காவ்யாவிற்கு,
ஆதவன் எழுதுவது. நலம், நலமறிய ஆவல். இக்கடிதத்தில் உலகத் தமிழ் மாநாடு குறித்துப் பகிர விரும்புகிறேன்.
காலத்திற்கு ஏற்ப தமிழ் மொழி தன்னைப் புதுப்பித்துக்கொண்டே வருகிறது. அது கல்வெட்டு முதல் கணினி வரை தனக்கான இடத்தை உருவாக்கிக்கொண்டுள்ளது. தமிழர்களாகிய நாம், பல்வேறு காரணங்களால் உலகமெங்கும் புலம்பெயர்ந்துள்ளோம். வாழிடத்தால் நாம் வேறுபட்டிருக்கிறோம். இருப்பினும் மொழியாலும் பண்பாட்டாலும் ஒன்றிணைந்தே உள்ளோம். அதனால், மொழியையும் பண்பாட்டையும் காப்பது நம் கடமை. அதற்காக நடத்தப்படுவதே உலகத் தமிழ் மாநாடு ஆகும். உலகத் தமிழ் மாநாடுகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கலந்துகொள்வார்கள்.
தனிநாயகம் அடிகள், 1964இல் தில்லியில் உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தைத் தொடங்கினார். அம்மன்றத்தின் வழி, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ’உலகத் தமிழ் மாநாடு’ நடத்தத் திட்டமிடப்பட்டது.
காவ்யா, நீங்கள் வாழும் மலேசியாவிற்குத் தனிச்சிறப்பு உண்டு. அங்குதான் 1966இல் முதல் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டை முழு முயற்சியுடன் முன்னின்று நடத்தியவர் தனிநாயகம் அடிகளார். ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்னும் புறநானூற்றுப் பாடல் அடி, அந்த மாநாட்டின் குறிக்கோள் தொடராகும். அதுபோல ஒவ்வொரு மாநாடும் ஒரு குறிக்கோள் தொடரைக் கொண்டு நடைபெற்றது.
பல்வேறு நாடுகளில், உலகத் தமிழ் மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. பத்தாவது உலகத் தமிழ் மாநாடு, நான் வாழும் சிகாகோவில் 2019இல் நடைபெற்றது.
இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு சென்னையில் 1968இல் நடைபெற்றது. அந்த மாநாட்டின் நினைவாகச் சென்னை மெரினா கடற்கரையில் தமிழறிஞர்களின் சிலைகளும் பண்பாட்டுச் சின்னங்களும் நிறுவப்பட்டுள்ளன. அவை திருவள்ளுவர், ஒளவையார், கம்பர், வீரமாமுனிவர், கால்டுவெல், ஜி.யு.போப், பாரதியார், பாரதிதாசன், கண்ணகி ஆகியோரின் சிலைகளாகும்.
ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு தமிழ்நாட்டில் 1981இல் மதுரை மாநகரில் நடைபெற்றது. அதன் பயனாக மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கமும் தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகமும் உருவாகின.
2010இல் தமிழ்நாட்டில் ’உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு’ நடைபெற்றது.
உலகத் தமிழறிஞர்கள் பலரும் உலகத் தமிழ் மாநாட்டில் ஒன்றுகூடுவர்; தமிழ் வளர்ச்சி குறித்த திட்டங்கள் உருவாக்கப்படும்; தமிழரின் பண்பாட்டுக்கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்; மாநாட்டு மலர் வெளியிடப்படும். இந்த மாநாடு, உலகத் தமிழர்கள் அனைவராலும் கொண்டாடப்படும் மொழி விழா ஆகும்.
அடுத்த உலகத் தமிழ் மாநாடு விரைவில் நடக்க உள்ளது. உறுதியாக அந்த மாநாட்டில் நாம் கலந்துகொள்ள வேண்டும். உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொள்ளும் உனது திட்டம் குறித்து எனக்கு மின்னஞ்சல் அனுப்பு. அதற்கேற்ப எனது பயணத்தையும் வடிவமைத்துக்கொள்கிறேன். உனக்கு எனது அன்பும் வாழ்த்துகளும் காவ்யா.
அன்புடன்
ஆதவன்.